இயேசுவை அண்டுவோருக்கு சுமை எளிது!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – புதன்.
திருவருகைக்காலம் 2-ம் வாரம் - புதன்
எசாயா: 40: 25-31 
மத்தேயு  11: 28-30

இயேசுவை அண்டுவோருக்கு சுமை எளிது!


 
யூதேயா மக்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்டு வெகுவாகத் துன்புற்ற காலத்தில்  அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உள ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் துன்பத்தை அனுபவித்தனர்.  அத்தருணத்தில் அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்  எழுந்தது.  எனவே, அவர்களுக்குக்  கடவுள் மேல் உறுதியான நம்பிக்கையை விதைக்க, யாவே  கடவுள் எந்தப் போரையும் வெல்லக்கூடிய ஈடு இணையற்ற வல்லமை மிக்கவராக உள்ளார் என்பதை  எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. 

மேலும் கடவுள் தம் வல்லமையை அவருக்கு  மட்டும் சொந்தாமக்கிக் கொள்ளாமல், வல்லமையைக்   கேட்கிறவர்களுக்கும்  கடவுள் அதை பகிர்ந்தளிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார். அவர்கள்   கலங்காமலும் சோர்ந்து போகாமலும்  இருக்க, கழுகுகளைப் போல  உயரமாக பறக்கும் வல்லமையை கடவுள் அவர்களுக்கு அளிப்பார் என்றும்  அவர்களைத்   திடப்படுத்துகிறார். 

 
நற்செய்தி


நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார்.  மேலும், நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றுரைக்கிறார். 


சிந்தனைக்கு.


மனிதன் படைப்புகளில் ஆறுதல் தேடுவதை விடுத்து படைத்தவரில் ஆறுதல் தேடும்போது அதைக் கண்டைவர் என்பது இன்றைய வாசகங்களின்  மையச் செய்தியாக உள்ளது. 

நமக்கு உதவி புரிவதும், எல்லாக் கவலைகளினின்றும் நம்மை விடுதலை அளிப்பதும் இறைவனின் தயவைச்  சார்ந்தது. இறைவனிடமிருந்து வருவதைத் தவிர  வேறெதுவும் நமக்குப் பெரியதாகவோ உயர்ந்ததாகவோ அல்லது ஏற்றதாகவோ கருதி அவற்றை நாடும்போது  நாம் நிம்மதியை இழக்க நேரிடும்.  

வாழ்விலும் சாவிலும், இன்பத்திலும் துன்பத்திலும் நாம் ஆண்டவரையொட்டி நின்றால், துன்பக் கடலில் மூழ்க நேர்ந்தாலும் உதவி செய்ய வல்லவாரம் ஆண்டவர் அவரது கரம் நீட்டுவார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகம் நிலையற்றது, பயனற்றது என்று நாம் அடிக்கடி கூறினாலும் அதை பற்றிக்கொண்டுதான் வாழ்கிறோம். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்று வாழ்வதில்தான் நிலைத்திருக்கிறோம். எளிதில் அதைத் துறக்க நமக்குத் துணிவில்லை. 

எனவேதான், துன்பம் நம்மை எளிதில் பற்றிக்கொள்கிறது. அது நம்மை ஆட்கொண்டு அழிவுக்கு இட்டுச் செல்கிறது. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று உறுதியளிக்கிறார். அவர்மீது நம்பிக்கை கொள்பவர் பெறுகின்ற ஆறுதலை எடுத்துரைக்கின்றார். ஆம்,  'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள்' என்றழைத்து, 'உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' என்கிறார். 

நுகம் என்பது இரண்டு காளை மாடுகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கனமான மரக்கட்டை ஆகும்.  அதனை காளைகளின் கழுத்தில் வைத்து அதன் ஊடாக ஏர் அல்லது வண்டியை இணைப்பர். காளைகள் அதனை சுமந்து நிலத்தை உழ வேண்டும், வண்டியை இழுத்துச் செல்ல வேண்டும்.  அவ்வாறே, எழை எளியோரும்  அவர்களது தலைவர்களான பரிசேயர், சதுசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் போன்றோரின் கடுமையான அடக்குமுறை சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.  இக்காலத்திலும் அரசியல் ரீதியாகவும் நாம் நசுக்கப்படுகிறோம். பல புதிய புதிய நோய்க் கிருமிகளாலும்  தாக்கப்படிகிறோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் குடும்பங்கள் பற்பல.

இவற்றால்,  நலிந்தோராக சோர்வுற்று, வாயில்லாப் பூச்சியாக ஒடுக்கப்படுகிறோம்.  இத்தகையத் துன்பங்களை  விவரிக்க இயேசு ‘நுகம்' எனும் பொருளைப் பயன்படுத்துகிறார்.  நுகம் என்பதற்கு ‘போதனை' என்றும் பொருள் கொள்ளலாம். ஆம் இயேசுவின் போதனை பரிசேயர்கள், சதுசேயர்கள் போதனைகள் போலன்றி, எளிமையானவை.  இவ்வாறு பலவகையில் சுமை சுமந்து சோர்ந்திருப்போர் திடம்பெற வேண்டி, இரு காரியங்களை  பின்பற்ற இயேசு அழைக்கிறார். 

1.    அவருடைய நுகத்தை (போதனையை) ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2.    அவரிடம் கற்றுக்கொள வேண்டும்.

ஆம், உண்மையில் துன்புறும் வாழ்வில் நம்மதி வேண்டுமானால்,  அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவருடைய கனிவும் மனத்தாழ்மையும் நம் வாழ்க்கைப் பாடங்களாக மாறும்போது பெருஞ்சுமைகளையும் சுமக்க நாம் வலிமை பெறுவோம். 

நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலம் நம் முன்னோர்கள் காலம் போன்றதல்ல. நாளுக்கு நாள்  மன அழுத்தம், மன உளைச்சல், அமைதியின்மை போன்றவற்றில் சிக்கித் தவிப்போர் ஆயிரமாயிரம்.  நாள்தோறும் தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதை மறுப்பதற்கில்லை.

இத்தகையச் சூழலிலிருந்து வெளிவர, மன அமைதி பெற இயேசுவை அண்டிச் செல்வதே சிறந்த வழி.  

‘அடையாத கதவிருக்கும்
ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே
மகளே/மகனே உன் மனக் குறையை அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு’

என்ற பாடலின் வரிகள் நம்மை இயேசுவிடம் கொண்டு செல்லட்டும்.

 

இறைவேண்டல்.


‘என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்றழைக்கும் ஆண்டவரே. பெரும் துன்பம் என்னைச் சூழும்போதெல்லாம் நான் உம்மையே அண்டி வர எனக்கு  மனத்திடன் அளித்துக் காப்பீராக. ஆமென்


 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452