சோம்பித் திரிவதால் தாலந்து பயனற்றதாகிறது! | ஆர்.கே. சாமி | VeritasTamil
31 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -சனி
1 கொரி 1: 26-31
மத்தேயு 25: 14-30
சோம்பித் திரிவதால் தாலந்து பயனற்றதாகிறது!
முதல் வாசகம்.
பவுல் அடிகள் சிலுவையின் மேன்மையை, வல்லமையை அவர்களின் இறந்த காலம் எப்படிபட்டது? அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ள என்ன உள்ளது? என கேள்விகள் கேட்டபின், கடவுள் உலகில் தங்களை ஞானிகள் என்று எண்ணுபவர்களை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதியச் சிலுவையைத் தேர்ந்து கொண்டார் என்கிறார்.
கொரிந்தியர் எந்த தகுதியாலும், அதிகாரத்தாலும் அவர்கள் கிறிஸ்தவத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மாறாக, அவர்கள் தேர்ந்துகொள்ளப்பட்டது கடவுளின் தேர்வு என்பதை வலியுறுத்துகிறார்.
கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு மனம் திரும்பும் வரை அவர்கள் கொரிந்து சமூகத்தில் ஒன்றுமில்லாதவர்கள் என்றும், கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றப் பின்னர்தான் அவர்களுக்கு மரியாதைக் கிடைத்தது என்பதைப் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். கொரிந்தியக் கிறிஸ்தவர்கள், தங்களைப் பற்றி பெருமைப் பேசித்திரிய காரணம் எதுவுமில்லை என்கிறார். கடவுள் செய்ததைப் பற்றி மட்டுமே அவர் பெருமைப்பட வேண்டும் என்றும்
மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் என்றும் பவுல் அடிகள் அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை இதுவரை பல்வேறு வகையில எடுத்துரைத்த ஆண்டவர், இன்று அதை தாலந்திற்கு ஒப்பிட்டு விவரிக்கிறார். கடவுள் கொடுத்தக் கொடைகளுக்கு மக்கள் என்ன பதில் அளிக்க வேண்டும் என்பதில் இயேசு கவனம் செலுத்துகிறார். ஒவ்வொருவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட கொடைகளைக் (தாலந்துகளை) கொண்டுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது கடவுளின் எதிர்ப்பார்ப்பு. இறைமக்கள் தங்களால் இயன்றதை முழு ஆற்றலோடும் திறமையோடும் நிறைவேற்ற வேண்டும்.
அடுத்து, ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால். கடவுள் படைப்பில் அனைவரும் தனித்தன்மையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நிறைவாக, ஆண்டராகிய இயேசு, உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
நம்மை வெறும் கையராகக் கடவுள் உலகிற்கு அனுப்பவில்லை. அவரது படைப்பில் நம்மை குடிவைத்துள்ளார். அவரே தூய ஆவியார் வழியாக ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார் மற்றும் பல கொடைகளையும் பொது நன்மைக்காக அளித்துள்ளார் ( 1கொரு 12:8-9). கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமையை, வாய்ப்பு வசதிகளை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கான இறை ஆசீர் பொழியப்படுகிறது.
ஐந்து தாலந்து பெற்றவர் தன்னுடைய கடின உழைப்பினால் மேலும் ஐந்து தாலந்தை கொண்டுவந்தார். இரண்டு தாலந்து பெற்றவரோ தன்னுடைய கடின உழைப்பால் மேலும் இரண்டு தாலந்து ஈட்டிவந்தார். அதனால் அவர்கள் இருவரும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள். உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ (2 தெச 3:10) என்றுதான் புனித பவுல் அடிகளும் அறிவுறுத்துகிறார். மேலும், கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே (நீமொ.14:23). ஆம், வீணே வாய்ப்பேச்சு வீரர்களாக இருப்தை விட பயன்தரும் மக்களாக வாழ்வதே மேன்மை தரும்.
நிறைவாக, இன்று இயேசு கூறும் மற்றொரு அறிவுறுத்தலை ஓர் எச்சரிக்கையாக நாம் மனதில் நிறுத்த வேண்டும். அதாவது, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்’ என்பதாகும். உண்மையில், ஆன்மீகம் என்பது ஆழந்த இறைவேண்டலில் அல்ல, கடவுள் நமக்கு அருளிய கொடைகளை அறிந்துணர்ந்து, அவற்றைக் கொண்டு அவருக்கும் மனுக்குலத்திற்கும் பணி செய்வதில் அடங்கும்.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (குறள் #1040)
வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு.. பூமித்தாய் சிரிப்பாளாம்’ என்று திருவள்ளுவரும் உரைத்துள்ளார்.
முதல் வாணகத்தில் பவுல் அடிகள் கூறுவதற்கேற்ப, நாம் பெற்ற அனைத்து நன்மைகளும் கடவுள் கொடை என்றே பார்க்க வேண்டும். ஆகவே, கடவுள் கொடுத்த திறமையினை சரிவரப் பயன்படுத்துகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும், மனமிருந்தால் மார்க்கமுண்டு.
இறைவேண்டல்.
ஓர் உழைப்பாளி குடும்பதில் வளர்ந்த இயேசுவே, நீர் அருளிய கொடைகளைக் கொண்டு நான் பயனுள்ள சீடராகத் திகழ என்னை ஆசிர்வதித்தருளும். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452