முன்மதியோடு செயல்படு, சீடத்துவம் சிறக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -வெள்ளி

1 கொரி 1: 17-25
மத்தேயு  25: 1-13
 
 
முன்மதியோடு செயல்படு, சீடத்துவம் சிறக்கும்!
முதல் வாசகம்.

ஞானம் இன்றைய வாசகங்களின் கருப்பொருளாக உள்ளது.   சிலர் நினப்பதுபோல  ஞானமுஃ அறிவும் ஒன்றாகாது.  கொரிந்து மக்களுக்கு எழுதிய இத்திருமுகத்தில், புனித பவுல் கிரேக்கர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்ள சில வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறார்.    இவ்வுலக  அறிவாளிகள் தங்கள் ஞானத்தைக் கொண்டு  கடவுளுடைய வழிகளைப் புரிந்துகொள்ள விழைகிறார்கள். அது ஒருபோதும் இயலாது என்கிறார்.  மேலும் இந்த அறிவாளிகள்  சிலுவையில் அறையப்பட்ட மெசியாவைப் பற்றிய செய்தி முட்டாள்தனமானது என்றும்  நினைக்கிறார்கள் என்கிறார்.  கடவுள் அருளும் ஞானத்தைக் கொண்டுதான் கடவுளை மனிதன் அறிந்துணர முடியும் என்பதை  கொரிந்தியருக்கு எடுத்தியம்புகிறார்.  

சிலுவையில் அறையப்பட்டவர் மெசியா என்ற எண்ணம் கடவுளை அவமதிப்பதாக யூதர்கள் நினைத்தனர். உரோமானியர் அடிமைகளையும் ஆபத்தான குற்றவாளிகளையும் மட்டுமே சிலுவையில் அறைந்தனர். தண்டனையாக மரத்தில் தொங்குபவர் கடவுளின் கோபத்திற்கு ஆளாவார் என்று யூதர்கள் நம்பினர் (இ.ச 21:23) எனவே, தாங்கள் வெகு காலம் எதிர்ப்பார்த்த மெசியா சிலுவையில் அறையப்பட்டவர் என்பதை யூதர்களால் ஏற்க முடியவில்லை.
 
· கடந்த காலத்தில், கடவுள் அவர்களின் முன்னோர்களுக்கு வல்லமைமிகு  அற்புதங்களைச் செய்தார். எனவே அவர் தனது  மெசியா மூலம் இன்னும் பெரிய  அற்புதங்களைச் செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். எனவேதான், யூதர்கள் இயேசுவை மெசியா என்பதை நிரூபிக்க அடையாளங்களைத்  தொடர்ந்து கேட்டார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார் (மத்தேயு 12:38-39; யோவான் 6:30).

யூதர் எண்ணப்படி,  கடவுள் ஒருபோதும் மனிதனாக மாறி சிலுவையில் இறக்கமாட்டார்.  அவர்கள் நம்பிக்கை வைத்த வல்லமைக்குரிய கடவுளுக்கு அது நடக்காது என்பதால், புனிய பவுலின் படிப்பினையை நம்ப மறுத்தனர்.


நற்செய்தி.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை மணமகனின் வருகையை எதிர்கொண்டு செல்லும் பத்துக் கன்னியர்களுக்கு ஒப்பிடுகிறார். பத்துக் கன்னியர்களில் ஐந்து பேர் முன்மதியுள்ளவர்கள். இவர்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். அடுத்த ஐந்து கன்னியர்  முன்யோசனை இல்லாததால், கூடுதலான எண்ணெய் எடுத்துச்செல்லவில்லை.

இரு தரப்பினரும் மணமகனை வரவேற்கக் கையில் எண்ணெய் விளக்குடன் காத்திருக்கிறார்கள்.  மணமகன் வர காலத்தாமதமாகவே, சற்று உறங்கிவிடுகிறார்கள. நள்ளிரவு நேரம், மணமகன் வந்துவிட்டார். முன்மதியுடன் செயல்பட்டவர்கள் விளக்கில் எண்ணெய்யை நிரப்பிக்கொண்டு மணமகனை எதிர்க்கொண்டனர். மணமகனோடு, விருந்து நடைபெறும் அறைக்குள் செல்ல வாய்ப்புப்பெற்றனர். அறிவிலிகளோ விளக்குகளுக்குப் போதிய எண்ணெய் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் மணமகனோடு இணையும் வாய்ப்பை இழந்தனர் என்று முடிக்கிறார் இயேசு. 
 

சிந்தனைக்கு.

 
இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது, “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன், எனவே, பாம்புகளைப் போல  முன்மதியுடையவர்களாகவும், புறாக்களைப் போன்று கபற்றவர்களாகும் இருங்கள்” (மத் 10:16) என்று அறிவுறுத்தியது நமக்கு நினைவிருக்கலாம்.   இயேசு அவ்வாறு கூறியது நமக்கும் உரிய அறிவுரைதான்.

முன்மதியோடு செயல்படும் திறனுக்கு ஞானம் இன்றியமையாதது. ‘உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்’ (யாக் 1:5) என்று புனித யாக்கோப்பு கூறுவதை நினைவில கொள்வோம். ஞானம் கடவுளின் கொடை. சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார், கேட்டதைப் பெற்றுக்கொண்டார்.

நற்செய்தியில், ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்ற பதில்தான் மிஞ்சும்  என்ற உண்மையை ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். நமது மடமைக்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். 

நமது ஆன்மாவின் நலனைக் கட்டிக்காப்பது நமது கடமை. நமக்காகப் பிறர் அழக்கூடும். ஆனால், நமக்காகப் பிறர் உணவு உண்ணக்கூடுமா? ஆகவே, விண்ணக வாழ்வைப் பெற்று மகிழ நாம்தான் இவ்வுலகில் முன்மதியோடு போராடி வாழவேண்டும்.  நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதால் மட்டும்   விண்ணகக் கதவு திறக்கப்படாது.   

முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை எனப்படுகிறது. முன்மதி எனபது எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி.  இந்த உவமையில்  இயேசு  ''விளக்கு'' எனும் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார். இங்கே விளக்கு என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' என்பதற்கு விளக்கு ஆதாரமாக உள்ளது. நம் வாழ்க்கை விளக்குத் திருமுழுக்கில் ஏற்றப்பட்டது. அது மறுவாழுவுக்குரியது.  

மேலும், நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என இயேசு கேட்பது ஏதோ இவ்வுலகம் விரைவில் அழியப்போகின்றது, ஆகவே நாம் தயாராக இருக்கவேண்டும் என்பது பொருள் அல்ல.  மாறாக, நாம் விழிப்பாயிருக்கும்போது நம்மைத் தேடி ஒவ்வொரு  நொடியிலும் வருகின்ற கடவுளை நாம் அன்போடு ஏற்று, அவருடைய அன்பு வழிநடத்தலின்கீழ் பயணம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். 

இறைவேண்டல்.


நிறைவாழ்வின் ஊற்றாகிய ஆண்டவரே,  எனது வாழ்க்கைப் பாதையில் இறையாட்சிக்குரிய வாழ்வுக்கு  முன்மதி உடைய சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்.  

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452