உழைப்பின் மேன்மை நமது மேன்மை! | ஆர்.கே. சாமி | VeritasTamil
28 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -புதன்
2 தெச 3: 6-10, 16-18
மத்தேயு 23: 27-32
உழைப்பின் மேன்மை நமது மேன்மை!
முதல் வாசகம்.
இன்றைய வாசகப் பகுதியில் பவுல் அடிகள் தன்னையே கிறிஸ்துவச் சீடத்துவ வாழ்வுக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறார். புனித பவுல் தெசலோனிக்கக் கிறிஸ்தவச் சமூகத்தை அன்றாட வாழ்வுக்காக கடினமாக உழைக்கவும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வெளிப்படுத்த வேண்டும் என்று தம் கடிதத்தில் வலியுறுத்துகிறார்.
அவர் இயேசுவின் நற்செய்தியின் தூதரானப்படியால் இறைமக்களினமிருந்து சில சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்றாலும், அவர் ஒருபோதும் எந்த உதவிக்கும் யாரையும் நாடவில்லை என்று குறிப்பிடுகிறார். அவருடைய செலவீனங்களுக்கு நீண்ட காலமாகவும் கடினமாகவும் கூடாரம் செய்பவராகவும் தனது சொந்த உழைத்துச் சம்பாதித்தார் என்பதைச் சுட்டிக்கட்டுகிறார்.
சில தெசலோனிக்கர்கள், ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழவிருப்பதாக எண்ணி வேலை செய்ய அவசியமில்லை என்று சோம்பித் திரிவதாகக் கேள்விட்டு அத்தகையோரைக் கண்டித்து எழுதுகிறார். ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று அவர்கள் மத்தியில் பணிசெய்யும் போதே அவர்களுக்குக் கூறியதை நினைவூட்டுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு சில மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களை விமர்சித்தார். அவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுடன் ஒப்பிட்டு, அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் தீமையையும் ஊழலையும் வெளிப்படுத்தி, அவர்களின் இரட்டை வாழ்வைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று நேர்முகமாகக் கண்டிக்கிறார்.
அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களைப் பக்தர்களாகவும் நல்லவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்களேயொழிய உண்மைநிலை அதுவல்ல. இறைவாக்கினர்களையும் கொன்றவர்கள்தான் இவர்கள் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
மத்தேயு 23-ம் அதிகரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும், சதுசேயர்களையும் இயேசு ‘உங்களுக்கு ஐயோ! கேடு’ என்று சபிக்கின்ற நிகழ்வுகள்தான். இன்றையப் பகுதியில் அவர் ஒரு படி மேலே சென்று, அவர்களை வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்களாக விமர்சிக்கிறார். நேற்றுவரை வெளிவேடக்காரர்களே என்று அவர்களை கண்டனம் செய்தவர் இன்று இயேசு, அவர்களுக்குக் கொடுக்கும் மற்றொரு பெயர் வெள்ளையடித்த கல்லறைகள். வெள்ளையடித்தக் கல்லறைகள் வெளியே பார்ப்பதற்கு அழகாகவும் வெள்ளையாகவும் இருந்தாலும், அதன் உள்ளே அவ்வாறு இருப்பதில்லை.
பரிசேயக் கூட்டம் செய்த இன்னொரு மிகப்பெரிய தவறு, இறைவாக்கினர்களின் போதனையைக் கேட்காமல், அவர்களைக் கொன்று புதைத்துவிட்டு, அவர்களுக்குச் சிலை வடித்து, மக்கள் முன்னிலையில் மரியாதைச் செலுத்தியாகும்.
இவ்வாறாக, பரிசேயர்களின், மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தை அம்பலப்படுத்துகிறார் இயேசு.
இன்று, இந்த சமயத் தலைவர்கள் மீதான இயேசுவின் விமர்சனத்தை ஆழச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இயேசு நமக்கு இன்றைய நற்செய்தியின் வழி அறிவுறுத்துவது என்ன? நம்மில் போலித்தனமும் வெளிவேடமும் மலிந்திருக்கும்போது நற்கருணை திருவிருந்தில் கூட நாம் பங்கெடுக்கும் தகுதியை இழக்கிறோம். ஏனெனில் ‘நற்கருணை’ போலிக்கு அப்பாற்பட்டது. நம்மில் சிலர் புலித்தோல் போர்த்தியப் பச்சோந்திகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மிலும் நடமாடும் வெள்ளையடித்தக் கல்லறைகள் உண்டு. இத்தகையோர் கடவுளின் பார்வையிலிருந்துத் தப்பிக்க இயலாது.
ஒரு திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒன்றில்,
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
என்று மனிதனின் போக்கை விமர்சித்தார்.
நிறைவாக. முதல் வாசகத்தில், பவுல் அடிகள் மற்றுமொரு உண்மையை நம்மோடு பகர்கிறார். ஆம் ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்கிறார். உழைப்பே உயர்வுக்கு அச்சாணி. ஆகவே, வெளிவேடமின்றி, ஊரார் வேர்வையில் உடலை வளர்க்காமல் சுய உழைப்பில் நம்பிக்கை வைத்து வாழ்வோராக, கிறிஸ்துவில் சீடத்துவத்தை உறுதிசெய்வோம். புனித பவுல் அடிகளைப்போல் நம்மையே கிறிஸ்தவ வாழ்வுக்கு முன்மாதிரியாகப் பிறருக்கு வெளிப்படுத்த முயற்ச்சிப்போம்.
இறைவேண்டல்.
உழைப்பின் மேன்மையை உணர்த்திய ஆண்டவரே, என்னில் உள்ள வெளிவேடத்தைக் களைந்து, உமது உத்தம சீடராக வாழ என்னை ஆசீர்வதியும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452