உள்ளொன்று வைத்து புறமொன்று பேச வேண்டாம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -செவ்வாய்
2 தெச 2: 1-3a, 14-17
மத்தேயு 23: 23-26
''உள்ளொன்று வைத்து புறமொன்று பேச வேண்டாம்!
முதல் வாசகம்.
புனித பவுல் தனது தொடக்க மறைத்தூதுப் பணியின்போது, குறிப்பாக தெசலோனிகாவில் ஆண்டவரின் இரண்டாம் வருகை அண்மையில் நிகழ உள்ளதாகவே போதித்தார். ஆனால், ஆண்டுகள் சில கடந்தன. இயேசுவின் வருகை நிகழவில்லை என்பதோடு, கணிக்கவும் இயலவில்லை. எனவே, தனது புரிதலையும் போதனையையும் பவுல் மாற்ற வேண்டியிருந்தது. அவர் இந்த இரண்டாம் கடிதத்தில், பவுல் மாற்றவைம வலியுறுத்துகிறார்.
இந்த பகுதியில் இயேசுவின் வருகை குறித்து எழுதுகையில், ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர் என்று அவர்களை எச்சரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியிலும் மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் ஆண்டவர் இயேசு, “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம். நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள்” என்று கடுமையாகச் சாடுகிறார்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சட்டத்தின் நுணுக்கமான விவரங்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளனர், அவர்கள் பாமர மக்களின் நலனில் அக்கறைக் காட்ட தவறிவிடுகிறார்கள். அவர்கள் காணிக்கைக்கான மிகச்சிறிய மூலிகைகளின் சதவீதத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் பிறர் மீதான அன்பு மற்றும் பராமரிப்புப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதை நேரடியாக அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் கிண்ணத்தையும், தட்டையும் வெளிப்புறத்தில் தூயமையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருட்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்” என்று தூற்றுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியின் ஒளியில் நாம் சிந்தித்தால், நாம் உண்மையிலேயே உள்ளதால் தூய்மையாக இருக்க வேண்டும், வெளித்தோற்றத்தில் அல்ல என்பது இயேசுவின் படிப்பினை யாக உள்ளதை அறியலாம். நேற்றைய சிந்தனையில் நான் பகிர்ந்ததைப்போல், கடவுள் நம் உள்ளத்தைப் பார்த்தே தீர்ப்பளிக்கிறார். மனிதர்கள் நாம் எதை வேண்டுமானாலும் முன்மொழியலாம். அவை அனைத்தையும் நிறைவேற்றுபவராக கடவுள் இல்லை.
கடவுளின் முக்கியமான எதிர்பார்ப்பு நாம் நீதி, இரக்கம், பரிவு இவற்றைக் கடைப்பிடித்து கடவுளை அன்பு செய்வது போல அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் அவர் தேர்ந்துகொண்ட யூதர்களோ இவற்றை விடுத்து, கடவுளுக்கு புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதிலே கவனமாய் இருந்தார்கள். கலப்புத் திருமணத்தில் ஈடுபட்டு தங்களின் தூய்மையை இழந்துவிட்ட சமாரியர்களோடு (முன்பு யூதர்கள்) நல்லுறவு கொள்ள மறுத்துவிட்டார்கள்.
நற்செய்தியில், நிலத்தில் விளைந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது (இச 14:22). இதனை மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மிக நுணுக்கமாகக் கடைபிடித்தார்கள். ஆனால், திருச்சட்டத்தின் அடிநாதமாக இருக்கக்கூடிய நீதியையும் இரக்கத்தையும் அவர்கள் கடைபிடிக்க மறந்துபோனார்கள். மாறாக அவர்கள் ஏழை எளியவரை நசுக்கி, கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம் பத்தில் ஒரு பகுதி காணிக்கையாகச் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், நீதியையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்.
தாங்கள் மட்டுமே கடவுளின் தூய்மையான மக்கள் என்ற எண்ணத்தில் வெளிப்புற தூய்மைக்கு முன்னுரிமை அளித்தனர். எந்தளவுக்கு என்றால், தூய்மையற்றது எதுவும் உடலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் திராட்சை இரசத்தையும் வடிகட்டிய பின்புதான் அருந்துவர்.
சுத்தம் சுகம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, நாம் வெளி தூய்மைக்கு முதலிடம் கொடுக்கிறோம். நம் உடலோ ஆடையோ அசுத்தமாக இருந்தால் பாரப்பவர் என்ன சொல்வார் என்பதில் கவனமாக உள்ளோம். இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடவுளின் பார்வையில் இது நேர்மாறானது. உலகப் போக்கில் கவனம் வைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. நமது உள்ளம் நமக்கு வசமாக வேண்டும். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதை அதன் விருப்பப்படி தாவவிட்டால், நமக்கு அழிவுதான் மிஞ்சும்.
நாம் உயர்வதற்கும் தாழ்வதற்கும் உள்ளம்தான் காரணம். உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி என்பதை நினைவில் கொள்வோம். மற்றனைத்தும் நலமாகும்.
இறைவேண்டல்.
அகத்தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்த ஆண்டவரே, அகத்தூய்மைக்கு வித்திடும் உமது படிப்பினையை ஏற்று வாழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
