நம்மிலிருந்து நல்லது ஏதும் வருவதுண்டா? | ஆர்.கே. சாமி | VeritasTamil
24 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20 ஆம் வாரம் –சனி
புனித பர்த்தலமேயு – திருத்தூதர் விழா
தி.வெ. 21: 9b-14
யோவான் 1: 45-51
நம்மிலிருந்து நல்லது ஏதும் வருவதுண்டா?
இன்று திருஅவையானது திருத்தூதரான புனித பார்த்தலமேயுவினுடைய விழாவைப் பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறது. திருத்தூதர் பிலிப்புவின் நண்பரான இவரது இயற்பெயர் நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியில் அறிகிறோம். 'நத்தனியேல்' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள்படுவதாக அறிகிறோம்.
இவரைப் பற்றிய சில குறிப்புகளை மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் காண்கிறோம். அத்துடன், யோவான் நற்செய்தி முதல் அதிகாரத்திலும் (யோவா 1:43-51) திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகிறபோதும் இவரை அறிய வருகிறோம்.
முதல் வாசகம் புதிய எருசலேமை கடவுள் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக திருத்தூதர்களின் பங்கு மையமாக உள்ளது என்பதை விவிக்கிறது.
இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், 'அவரை நாங்கள் கண்டுகொண்டோம்' என்று சொல்ல, அவரோ, 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், 'வந்து பாரும்' என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். இயேசு இவரை உண்மையான இஸ்ரயேலர் என்கிறார். பார்த்தலமேயோ
பிலிப்புவின் வார்த்தையில் நத்தனியேல் தொடக்கத்தில் நம்பிக்கைக் கொள்ளவல்லை. இயேசு நாசரேத்துவைச் சேர்ந்தவர் என்பதால், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். ஏனெனில் அவர் படித்த பழைய ஏற்பாட்டு நூல்களில் நாசரேத்துவைப் பற்றி சிறப்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும், நாசரேத்து யூதேயவில் அல்ல, மாறாக வடக்கே கலிலேயாவில் இருக்கும் ஓர் ஊர். எனவே, அவருக்குச் சந்தேகம் பிறந்தது. பிலிப்பு அவரிடம், ‘நீ நம்பாவிட்டால் போ’ என்று ஒதுங்கிப்போகவில்லை. இயேசுவைப் பற்றிய இதர விபரங்களை அறிந்துணர அழைக்கிறார். அவர் சென்று இயேசுவோடு உரையாடி மனமாறி, இயேசுவை “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்கிறார். இது கடவுளின் வெளிப்பாடு.
புனித பார்த்தலமேயு இயேசுவின் மீது கொண்ட அளவுகடந்த அன்பால், நற்செய்தி அறிவிப்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க முன்வந்த்தையும், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவித்தார் என்றும் அறிகிறோம். அங்குதான் அர்மேனியா நாட்டு மன்னன் பொலிமியுஸ் நற்செய்தியால் தொடப்பட்டு, புனித பார்த்தலமேயுவிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார் என்றும் , இது பிடிக்காத மன்னனின் சகோதரன் அஸ்தியாஜெஸ் என்பவர் இவரை உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்று போட்டான் என்பதைத் திருஅவை மரபு கூறுகிறது.
நாம் கத்தோலிக்கத் திருஅவை உறுப்பினர்கள். அதாவது, திருத்தூதர்களின் அயரா உழைப்பில் நம்மை வந்தடைந்தத் திருஅவையில் இணைத்துள்ளோம். ஆகவே, அவர்களின் பணியைத் தொடரவும், அவர்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து திடம்பெறவும் பணிக்கப்படுகிறோம். இதையே இன்று திருத்தூதரான புனித பர்த்தலமேயு நினைவூட்டுகிறார்.
குறிப்பாக, இயேசு அவரை “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று கூறிய வார்த்தைகளை மனதில் நிறுத்த வேண்டும். நாமும் கடபற்ற உள்ளம் கொண்டோராக வாழ்ந்தால், நமக்கும் இப்பாராட்டு கிடைக்கும் என்பதல் ஐயமில்லை.
இறைவேண்டல்.
புனித பார்த்தலமேயுவை உண்மையான இஸ்ரயேலர்’ என்று அழைத்த ஆண்டவரே. நானும் அவரைப்போல் ‘உண்மையான உமது சீடர்’ என்று அழைக்கப்பட உருமாற்றம் காண அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink