கடவுளின் தயாளக் குணம் நமதாகட்டும் ! | ஆர்.கே. சாமி | VeritasTamil

21 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 20 ஆம் வாரம் – புதன்
எசேக்கியேல் 34: 1-11
மத்தேயு   20: 1-16
 

கடவுளின் தயாளக் குணம் நமதாகட்டும் !


முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகத்தில் ‘ஆயர்கள் அல்லது மெய்ப்பர்கள் ’ என்ற  உருவகத்தைப் பயன்படுத்தி பாமர மக்களைக் கொடுமைப்படுத்தும் யூத தலைவர்களைக் கடவுள் சாடுவதை எசேக்கியேல் எடுத்துரைக்கிறார்.   சுயநல தலைவர்கள் சுயநல மேய்ப்பர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள், 

பழைய ஏற்பாட்டில் நாட்டுத் தலைவர்களுக்கு ஆயர்கள் என்ற அடைமொழி தரப்பட்டது (எசா 44:29, மீக்  5:4-5) ஆனாலும் அவர்களுக்கு எல்லாரையும் விட சிறந்த ஆயன் யாவே கடவுள்தான்.  இன்றைய அதிகாரத்தின் முதல் பகுதியில் எசேக்கியேல் தீய ஆயர்களைப் பற்றி பேசுகிறார்.

தீய ஆயர்கள்  கொழுத்த ஆடுகளைக் கொன்று தின்று மகிழ்ந்தனர்.  செம்மறி ஆடுகளிலிருந்து பால், கம்பளி, இறைச்சி ஆகியவற்றை பெறுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்த்து.   ஆடுகளின் நலனில் அக்கறையற்றவர்களாக இருந்தனர்.  நோயுற்ற, நலிந்த ஆடுகளில் அக்கறைக் காட்டவில்லை. அதிலும் சிதறிய மந்தைகளைத் தேடிச் செல்லவுமில்லை.   தங்கள் சுயநலத்திற்காக ஆடுகளைப் பலியிட்டனர்.  எனவே,  அவர்கள் ஆயர்கள் என்ற தகுதியை இழந்துவிட்டனர் என்றும்,  கடவுளே வந்து ஆடுகளை மேய்ப்பார் என்றும் எசேக்கியேல் மக்களுக்கு  அறிவிக்கிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில்,    வெவ்வேறு நேரங்களில் வேலையாட்களை வேலைக்கு அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் முழு சம்பளம் கொடுக்கும் முதலாளியைப் பற்றிய இயேசுவின் உவமை நியாயமற்றதாகத் தோன்றலாம்.  எவ்வாறாயினும், முதலாளி யாரையும் முழு நாள் ஊதியத்தை ஏமாற்றவில்லை.  பிற்காலத்தில் வேலைக்கு வருபவர்களிடம் அவர் தாராளமாக நடந்துகொண்டார், ஏனென்றால் அவர்களை யாரும் முன்பு வேலைக்கு எடுக்கவில்லை. அவர் யாரிடமும் ஊதியத்தைப் பற்றி பேரம் பேசவில்லை. 


சிந்தனைக்கு.


இன்றைய இரு வாசகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில்  முதல்   அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், நற்செய்தியில் வரும் நிலக்கிழாருக்குமிடையே  வேறுபாடு உள்ளதை அறிகிறேன்.   முதல் வாசகத்தில் இஸ்ரவேலின் ஆயர்கள் தாங்கள் மேய்க்கும்  செம்மறியாடுகளிலிருந்துப்  பயனடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அவர்கள் வசமிருந்த செம்மறிகள் மீது அவர்கள் அன்பு காட்டவில்லை. மாறாக கழுத்தில் கத்தி வைத்தனர். 
 
 செம்மறி ஆடுகள் காணாமல் போனாலோ அல்லது பசியினாலோ வாடினாலோ அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இவர்கள் கெட்ட ஆயன்களாகவே இருந்தனர்.  இந்த கெட்ட ஆயன்கள் பட்டியில் தென்னாடான யூதேயாவின் அரசர்களில் பலரும் அடங்குவர். 

நற்செய்தியில் இயேசு குறிப்பிடும் நிலக்கிழார் எவ்வளவு வித்தியாசமானவர்.  ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு நியாயமானதை மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல், கடைசி மணி வரை வேலை தேடி தம்மிடம் குறைந்த நேரம் வேலை செய்தவருக்கும் அதே ஊதியத்தைக் கொடுக்கிறார்.  

அடுத்து, தாமதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் சோம்பேறிகளா? இல்லை, அவர்கள் வேலைக்குப் புறப்பட்டு வந்தார்கள், வாய்ப்புக் கிடைக்கவில்லை.  அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் அல்லவா? நிலக்கிழார் அவர்களுக்குத் தயவுகாட்டுகிறார்.

அவ்வாறே,  நம் கடவுள் தம் ஆடுகளாகிய நம்மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்.  அவர் நம்மை அவரது சுயநலனுக்காகப் பயன்படுத்துவதில்லை. நம் ஆண்டவர் நல்ல ஆயன். ஆகவே, நம் பணியின்  மூலம் கடவுள் நமக்கு அளிக்கும் அருளை நாம் ஏற்று முழு மனதோடு செயல்பட வேண்டும்.  இறைப்பணி பொதுவானது. ஆகையால் பங்குகளில், நாங்கள் பழையவர்கள், இவர்கள் புதியவர்கள் என்று  போட்டாபோட்டிக்கு இடந்தரலாகாது. ஆன்மீகச் செல்வத்தில் கடவுள் மற்றொருவரை அதிகமாக  ஆசீர்வதித்திருப்பதைக்  கண்டால்,   மகிழ்ச்சியடைய   வேண்டும். அங்கே பொறாமை தலைத்தூக்கக் கூடாது.   

நாம் தந்தையாகிய கடவுள் நம்மிம் எதிர்பார்க்கின்றவற்றை நிறைவாகச் செய்கிறபோது, நிச்சயம் கடவுள் நமக்கு அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். நமக்கென்று கடவுளின்  எதிர்ப்பார்ப்பு உண்டு. அதையுணர்ந்து நிறைவேற்றவதில் நமது கவனம் இருந்தால் போதும். கடவுள் நமக்குரியதை நல்குவார். 

 
இறைவேண்டல்.

நல்ல ஆயானாகிய ஆண்வரே, உமது ஆடுகளைப் பொறுப்போடு கவனித்துக்கொள்ளும் பணியிர் நான் அன்போடும் நேர்மையோடும் நடந்துகொள்ள உதவுவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452