பணத்தை நம்பி பிணமாய் வாழாதே! | ஆர்.கே. சாமி | VeritasTamil
20 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20 ஆம் வாரம் -செவ்வாய்
எசேக்கியேல் 28: 1-10
மத்தேயு 19: 23-30
பணத்தை நம்பி பிணமாய் வாழாதே!
முதல் வாசகம்
இன்றைய முதல் வாசகத்தின் இப்பகுதி, தீர் நகரின் மன்னனுக்கு எதிரான இறைவனின் தீர்ப்பின் செய்தியாகும். இது ‘நானே கடவுள்’ என்றும் ‘என்னை விட அறிவாளி யாரும் இல்லை’என்று தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்ட மன்னனின் ஆணவத்தைக் விமர்சிக்கிறது. ஆகவே, அவருக்கு ஞானமும், செல்வமும், அறிவும் இருந்தபோதிலும், அவர் அந்நிய நாடுகளால் வீழ்த்தப்பட்டு தோற்கடிக்கப்படுவார் என்று கடவுள் அறிவிக்கிறார்.
மேலும், கடவுளைப் போல் அறிவாளி என தன்னைக் கருதிக் கொண்டதால் மிகவும் கொடியோரான அன்னிய அரசை (பாபிலோனை) அவருக்கு எதிராய் படையெடுக்கச் செய்வார் என கடவுள் அச்சுறுத்துகிறார். நிறைவாக, அன்னிய அரசன் கையில் மன்னன் கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பார் என்றும் கடவுள் கூறுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், செல்வந்தர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவு கடினம் என்பதை விளக்குவதற்கு, ஊசியின் காது வழியாக ஒட்டகம் செல்லும் உருவகத்தைப் பயன்படுத்தி, மீட்பின் சூழலில் செல்வத்தின் சவால்களை இயேசு எடுத்துக்காட்டுகிறார்.
இந்த சவால் இருந்தபோதிலும், கடவுளால் எல்லாம் சாத்தியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். மேலும், இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பேதுரு இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “என் பொருட்டு தாயையோ, வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிடும் எவரும் நூறு மடங்காப் பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவார்” என்கிறார்.
இவ்வாறு, தம்முடைய சீடர்களின் தியாகங்களுக்கு எதிர்காலத்தில் ஏராளமான வெகுமதிகள் கிடைக்கும் என்று அவர் உறுதியளிக்கிறார், தனக்காக உலகப் பற்றுதலைத் துறந்தவர்கள் அதற்கு ஈடாக இன்னும் அதிகமாகப் பெறுவார்கள் என்றும், முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்றும் பேதுருவுக்குப் பதிலாகத் தருகிறார்.
சிந்தனைக்கு.
ஊசியின் காதில் ஓர் ஒட்டகம் நுழைய முடியுமா? என்று கேட்டால், முடியவே முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். அதுதான் உண்மையும் கூட. ஆனால், இயேசுவோ, ஊசியின் காதில் ஒட்டகமும் நுழைந்துவிடக்கூடும், ஆனால் ஒரு செல்வந்தன் விண்ணரசில் நுழைவது கடினம் என்கிறார்.
செல்வத்தால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது. ஆனாலும், பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொல்லித் திரிவதில்லை. நிம்மதி தராதப் பணத்தை இழக்க எந்தப் பணக்காரனும் தயாராகவுமில்லை. இதுதான் இன்றைய உலக இயல்பு.
நம் மத்தியில் உண்மையிலேயே பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிப்பதற்கும் சிந்தித்துப் பார்ப்பதற்கும் கடினமாக இருக்கலாம். இதற்கு இயேசு தரும் ஒரே பதல், ‘மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்' என்பதாகும். ஆம், இவ்வுலக ஆசைகளைத் துறக்க இறை வல்லமை நமக்குத் தேவை. தீர் நாட்டு மன்னனைப்போல், ஆணவமும், அங்காரமும் கொண்ட நெஞ்சத்தாருக்கு எல்லாம் கடினம்தான். மண்ணைக் கவ்வ வைக்காமல் விடாது நாம் கொள்ளும் மமதை. மேலும், ஆர்ப்பாட்டமான வாழ்வுக்கு அருகிலேயை அதன் அழிவும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆகவே, இயேசுவின் சீடர் என்பது எளிமைக்குரியவர். இங்கே எளிமை என்று நான் கூறியது தோற்றம் மட்டுமல்ல மாறாக, நடத்தை. ‘எளிமையாக வாழ்ந்து என்னத்த சாதித்துவிட்டாய்?’ என்று சிலர் கேட்கலாம். எளிமையாக வாழ்வதே ஒரு சாதனை என்று நமது பதில் இருந்தால் அதற்கான வெகுமதியை ஆண்டவர் அளிப்பார். இந்த மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் காணலாம்.
இயேசு, என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர் என்று உறுதியாகக் கூறுவதை மனதில் கொள்ள வேண்டும். இயேசுவுக்காக சொத்து சுகங்களை இழப்பவர் பன்மடங்குக் கைமாறு பெறுவர் எனும் இயேசுவின் அமுத வாக்கை அலச்சியப்படுத்துவோர் பல நூறு ஆண்டுகள் ‘உத்தரிக்கிற ஸ்தலத்தில்’ அல்லலுறுவர்.
நிறைவாக, முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று இயேசு இன்று கூறுவதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இவ்வுலக வாழ்க்கையில் பணமே எல்லாம் என்று எதற்கும் முந்திக்கொள்பவர்கள் விண்ணரசில் நுழைய முடியாமல் வரிசையில் காத்து நிற்க நேரிடும். மாறாக. இவ்வுகில் எளிய வாழ்வை ஏற்பவர்கள் விண்ணரசில் நுழைய வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. கதவைத தட்டாமலே கதவு திறக்கப்படும்.
விவிலியம் நம்மை பாவத்திலிருந்துத் தூர வைக்கிறது, கொண்ட செல்வமோ கடவுளிடமிருந்து நம்மைத் தூர வைக்கிறது.
இறைவேண்டல்.
‘கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது’ என்பதை உணர்த்திய ஆண்டவரே, எந்நாளும் உமது நிறைவான ஆசீரே எனது பெருஞ்செல்வம் என்றெண்ணி வாழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452