உலகப் பற்றற்ற வாழ்வே விண்ணகப் பற்றுக்கு வழி! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20 ஆம் வாரம் -திங்கள்
எசேக்கியேல் 24: 15-24
மத்தேயு 19: 16-22
உலகப் பற்றற்ற வாழ்வே விண்ணகப் பற்றுக்கு வழி!
முதல் வாசகம்
முதல் வாசகத்தில், எசேக்கியேலின் மனைவி இறந்தபோது வழக்கமான துக்க சடங்குகளை நிறைவேற்ற வேண்டாம் என்று கடவுள் கூறுகிறார். அவரது மனைவி இறந்த பிறகு, மக்கள் எசேக்கியேலிடம் அவர் ஏன் தனது மனைவியின் மரணத்தையொட்டி வழக்கமான முறையில் புலம்பவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அவரோ, யூதேயாவின் எருசலேம் ஆலயம் பாபிலோனியர்களால் அழிக்கப்படும்போது நடக்கவிருப்பதற்கு தனது இச்செயல் ஒரு அடையாளமமாக உள்ளது என்று மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எருசலேம் ஆலயத்தின் அழிவு குறித்து மக்கள் அழுதுப் புலம்புவது வீண் என்றும், மாறாக, ஆலயத்தற்கு எதிராகச் செய்தக் குற்றங்களை நினைத்துத் துயருறுவதே மேல் என்று கடவுள் கூறுவதாக அறிவிக்கிறார். இவ்வாறு தாம் அன்பு செய்த மனைவியை எருசலேம் ஆலயத்தோடு ஒப்பிட்டு விவரிக்கிறார்.
அவ்வாறே, ஒரு காலத்தில் இஸ்ரயேலர் அன்பு செய்த எருசலேம் அழிக்கப்படுவதைக் கண்டு அவர்கள் கண்ணீர் சிந்தவோ, அழுது புலம்பவோ தேவையில்லை. அதன் அழிவுக்கு அவர்களே காரணம். அழகு மிகுந்த அந்த ஆலயத்தில் கடவுள் குடியிருந்தும் அவர்கள் ஆலயத்தின் தூய்மையைப் பேணவில்லை. வேற்று தெய்வங்களை வழிபட்டனர். எனவே, அவர்கள் ஆலயத்திற்காகத் துக்கம் அனுசரிப்பதில் பொருள் இல்லை என்று எசேக்கியேல் விவரிக்கிறார் அதன் அடையாளமாகவே, தமது மனைவி இறந்தும் அவர் துக்கம் கொண்டாடவில்லை என்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடத்தில் வந்து, “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்யவேண்டும்?” என்று கேட்கின்றார். அவர் ஓர் இளைஞராக இருந்தும் நிலைவாழ்வுக்க்கு ஆசைப்படுகிறார்.
இயேசுவோ அவரிடம், “நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றபௌது, அவர், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்கின்றார்.
அப்போது இயேசு அவரிடம், “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்கின்றார். இயேசுவின் முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இளைஞர் வந்த வழி போகிறான்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசுவிடம் வந்த நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். கவலையற்ற, நிம்மதியான வாழ்வு அவரது வாழ்வாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், நிலைவாழ்வு என்பதையும் அனுபவிக்க வேண்டும் என்ற முள் ஒன்று அவரது உள்ளத்தைத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ஆசை யாரை விட்டது என்பதுபோல, இவ்வுலக வாழ்வு போல மறு உலகிலும் வாழ்வு அமைய அவர் எதிர்ப்பார்த்திருக்கக்கூடும்.
எனவே, இன்பகரமான நிலைவாழ்வை அடைய வழி தேடுகிறார். 'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' என இயேசுவை அண்டிக் கேட்கின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி' என்பது இயேசுவின் எளிய பதிலாக இருந்தது. 'இவையெல்லாம் கடைப்பிடித்துள்ளேன்' என்று பதில் கூறவே, உனக்கு நிலை வாழ்வு வேண்டுமானால், உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். என்று முடிவாகக் கூறினார். இயேசுவின் இந்த பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த இளைஞருக்கு நிலைவாழ்வுக்கு ஆசை இருந்தது செல்வத்தை இழக்க மனமில்லை. இங்கே கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதாக இருந்தது.
இன்றைக்குப் பலர், எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ, அவ்வளவு பணத்தைச் சேர்த்துக்கொண்டு, வாழ்க்கையை மிகழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இயேசுவோ, மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12: 15) என்கிறார்.
மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் தொடர்ப் உண்டா என்ற கேள்வி எழுகிறது. கடவுளையும் சக மனிதர்களையும் பார்க்க விடாமலும். நினைக்கவிடாமலும் நமது அக வழிகளைக் குருடாக்குவது ஒருவர் கொண்டிருக்கும் செல்வம். எனவேதான் அடுத்திருப்பவரை கண்டுக்கொள்ள தடையாய் இருக்கும் செல்வம் நமது விண்ணக வாழ்வுக்கும் தடைய க இருக்கிறது என்பதை உணர்த்துகிறார்.
நிலைவாழ்வுக்கான சிறந்த வழிகாட்டிகள் புனிதர்களேயன்றி நமது செல்வங்கள் அல்ல. புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். அவர்களால் முடியும் போது நம்மாலும் விண்ணக வாழ்வை அடைய முடியும். அவர்களுக்கு துணை நின்ற ஆண்டவர்தான் நம்மோடும் உள்ளார்.
ஆகவே, அந்த இளைஞனைப் போலன்றி உலகப் பற்றைத் துறந்தால் நிலைவாழ்வு நாளை நமதாகும். எசேக்கியேல் செய்ததுபோல், எதிர்கால வாழ்வு மேல் அக்கறை கொள்வோம். இழந்தது இழந்ததாக இருக்கட்டும்.
இறைவேண்டல்.
உம்மை நாடிய இளைஞனுக்கு நிலைவாழ்வுக்கு வழி சொன்ன ஆண்டவரே, உமது வழிகாட்டுதலை நானும் பின்பற்றி வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
