மன இருள் நீங்கட்டும், அகவோளி ஒளிரட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

3 April  2024                                                                                           

பாஸ்கா எண்கிழமை -  புதன்

தி. பணிகள்   3: 1-10                                                                

லூக்கா   24: 13-35

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகம் தூய ஆவியாரின்  வருகையையொட்டிய பெந்தகொஸ்து அனுபவத்திற்குப் பிறகு, எருசலேம் ஆலயப் பகுதியில் இயேசுவின் சீடர்களான பேதுருவும் யோவானும் பிறப்பிலிருந்தே ஊனமுற்ற ஒருவரை  சந்தித்த  நிகழ்வை  விவரிக்கிறது. யூதர்கள் ஒரு நாளைக்குக் காலை ஒன்பது மணி, நண்பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி என மூன்று வேளை கடவுளை வழிபடுவது வழக்கம். அன்று,   பிற்பகல் மூன்று மணிக்கு வழிபாட்டுக்காக பேதுருவும் யோவானும் கோயிலுக்குச் சென்றார்கள். 

ஒவ்வொரு நாளும்,  ஊனமுற்ற அந்த மனிதர் கோவில் வாசலில் அமர்ந்து, உள்ளே வருபவர்களிடம் பிச்சைக்  கேட்பது வழக்காமக இருந்து.  பேதுருவும் யோவானும் அவரை நெருங்கிய போது,  அவர்களிடமும் பிச்சை கேட்டார்.   பேதுருவோ, “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை என்று கூறி,  “ நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று பேதுரு பணிக்க,  அவரும் நடந்தார். 

பின்னர், நலமடைந்த அவர்  பேதுரு மற்றும் யோவானுடன் கோவிலுக்குச் சென்றார்.  அவருடைய அற்புதமான குணப்படுத்துதலுக்காக கடவுளைப் புகழ்ந்தார். இதைப் பார்த்த மக்கள் வியப்புற்றனர்.  அங்கவீனமாக இருந்த அந்த மனிதரை அடையாளம் கண்டு, அவருக்கு நடந்த நம்பமுடியாத அற்புதத்தை அறிந்து வியந்தனர்.


நற்செய்தி

இன்றைய நற்செய்தியில்,  லூக்கா மட்டுமே விவரித்துக்கூறும் ஓர் உரையாடல் பகுதியை வாசிக்கிறோம் (மாற்கு நற்செய்தியில் இரு வசனங்கள் மட்டும் உள்ளன).  இரு  சீடர்கள் எருசலேமில் இருந்து  எம்மாவுக்கு  செல்லும் வழியில் நடந்த இயேசுவுடனான ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். இயேசுவே எதிர்ப்பார்த்த மெசியா (மீட்பர்) என்று அவர்கள் நம்பின இயேசுவோ   சிலுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டார். கல்லறையில், அவருடைய உடலைக் காணாது   சில பெண்கள் திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் தங்களுக்குள் பேசக்கொண்டே நடந்தனர். அவர்களின் உரையாடலின் போது, இடைமறித்த இயேசு, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்றார். மேலும், மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கிக்கொண்டே உடன் நடந்தார். ஆனால் அவர்களுடன் இருப்பவர் இயேசு என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

பொழுது சாயும் வேளை நெருங்கிவிட்டதால், இயேசு அவர்களோடு அன்றிரவு தங்க நேர்ந்தது. அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன என்று லூக்கா குறிப்பிடுகிறார்.  அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். ஆனால், இரு சீடர்களும் இந்நிகழ்வுக்குப் பிறக் எம்மாவுக்குப் போகாமல், வந்த வழியே திரும்பி எருசலேமுக்குச் சென்று, வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்ததையும்    அங்கிருந்தவர்களுடன் பகரிந்து கொண்டனர். 

சிந்தனைக்கு

முதல் வாசகத்தில் பேதுரு இயேசுவின் பெயரால் நிகழ்த்திய முதல் வல்ல செயலை அறிந்தோம். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் பேதுரு குணப்படுத்துகிறார். முதன் முறையாக பேதுரு இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையை செயலில் வெளிப்படுத்துகிறார்.  

மேலும், உடல் ஊனமுற்ற, பிச்சை எடுக்கும், ஒரு காசுக்கும் பயனற்றவர் என்று சமூகம் கருதியவரையும் கடவுள் ஒரு பொருட்டாக எண்ணி, அவரது மாட்சி வெளிப்பட பயன்படுத்தினார் என்பதை நாம் அறிய வருகிறோம். எனவேதான் நாம் யாரையும் குறைத்து எடைப்போடக்கூடாது. புனித பவுல் அடிகள் கூறுவதைப் போல், ‘வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்’(1 கொரி 1:27) என்பதை நினைவில் கொள்வோம். மனித மாண்புக்கும் மனிதநேயதிற்கும் கைகொடுக்க வேண்டியவர்கள் நாம். 
 ‘எருசலேமில் இருந்தே மீட்பு வரும்' என்பது இஸ்ரயேலரின் நம்பிகையாக இருந்தது. ‘இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! (எசா 60:2) என்று மீட்பரைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்தது.  இந்த நம்பிக்கையில் இயேசுவே மீட்பர் என்று நம்பி அவரில் உரோமையரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று பல யூதர்கள் நம்பி இயேசுவின் சீடர்களாக இருந்தனர். ஆனால், இயசுவின் இறப்பில் ஏமாற்றம் அடைந்தனர். அத்தகையோரில் இருவரை இன்று எம்மாவு செல்லும் வழியில் இயேசு சந்திக்கிறார்.

இந்நற்செய்தியை கூர்ந்து வாசித்தால், 'அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன' என்னும் சொற்றொடர்  நிறைவாக 'அவர்கள் கண்கள் திறந்தன' என்று முடிவதை அறியலாம். குழப்பத்தில் இருந்த அவர்களுக்கு, அன்று சமாரியாவில் குளத்தருகில் சந்தித்த பெண்ணுக்குப் படிபடியாக தன்னை வெளிப்படுத்திய இயேசு, அதைபோன்று இந்த இரு சீடர்களுக்கும் தன்னை வெளிப்படுத்தி, அவர்களோடு அப்பம் பிட்டு இவ்வுலகில் முதல் திருப்பலியைத் தொடக்க வைக்கிறார். 

தொடக்கத்தில் அவர்களை அறிவிலிகள் என்றும் மந்தபுத்திக்காரர்கள்  என்றார் இயேசு. எனெனில், ‘அவர் சிலுவையில் அறையப்பட்டார் ... மூன்று நாள்கள் ஆகின்றன ... அவர் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்கள்' என்றுதான் அச்சீடர்கள் பேசிக்கொண்டனர். அவர் உயிர்த்தெழுவார் என்பதில் நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அவர்களுடைய வார்த்தைகளில் குழப்பமும் கலக்கமும் காணப்பட்டன. 
அப்பம் பிட்கையில் இயேசுவை ஆண்டவர் என்று அடையளம் கண்டவர்கள் (அகக்)  கண்கள் திறக்கப்பட்டவர்களாக, உண்மையை அறிந்தவர்களாக உயிருள்ள சாட்சிகளாக  மாறினர். யூதர்களுக்குப் பயந்து எந்த ஊரை விட்டு  தப்பி எம்மாவுக்குப்  புறப்பட்டார்களோ,  அதே   எருசலேமுக்குத் திரும்பினார்கள். உயிருக்குப் பயந்தக் கோழைகளாக அல்ல,  மாறாக இயேசுவுக்காக மரணத்தையும் ஏற்கும் சீடர்களாகத் திரும்பினார். 
இயேசுவின் அக்காலத்துச் சீடர்களது வாழ்வை நோக்குகின்ற பொழுது, அவர்கள் இயேசுவைப் பின்பற்றியதே ஒரு தேடல் என்று கூறலாம். அத்தேடலில் ஏமாற்றம் அடைந்ததாக இரு சீடர்களும் நினைத்தார்கள். எனவேதான் இயேசு அவர்களை அறிவிலிகள் என்றார்.
இன்று நாமும் நம் தேடலில் சரியானதை நோக்கிப் பயணிக்காவிட்டால் அறிவிலிகள்தான். நம்மில் தூய ஆவியாரின் ஆற்றல் உண்டு என்பதை முதலில் ஏற்க வேண்டும். நமது தேடல் இயேசுவின் திருவுடலாக விளங்கும் அவரது ஒரே திருஅவையில் முழுமை பெறுகிறது என்பதை நம்ப வேண்டும். அதைவிடுத்து இரும்புக் கடையில் வைர நகையைத் தெடுவதுபோல அங்கும் இங்கும் தாவுவதால் பயனில்லை.  பாதை மாறியிருந்தால் இரு சீடர்களைப் போல் உண்மைக்குத் திரும்புவோம். நமது மந்த புத்தியைப் போக்கி, உண்மை சீடத்துவத்திற்கும் சாட்சிய வாழ்வுக்கும்  உயிர் கொடுப்போம். 

இறைவேண்டல்.
குழம்பியச் சீடர்களை வழிமறித்து, உண்மையை வெளிப்படுத்திய ஆண்டவரே! உம்மில் நான் என்றும் நிலைத்திருக்க  என்னில் தோன்றும்  மன இருளை அகற்றி, அகவொளி எற்றுவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452