செவிமடுக்கத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 27 ஆம் செவ்வாய்  
I: யோனா:  3: 1-10
II: திபா 130: 1-2. 3-4. 7-8
III: லூக்:   10: 38-42

செவிமடுத்தல் என்பது நம்முடைய மனித வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. குடும்பங்களிலும் உறவுகளிலும் பல பிரச்சினைகள் இருப்பதற்குக் காரணம் நாம் பிறருக்கு செவிமடுக்காமல் இருப்பதனாலேயாகும்.  செவிசாய்க்கும் பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியும். செவிமெடுக்காமல் இருந்தால் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனை போன்று தோன்றும். இன்றைய வாசகங்கள் செவிமடுத்தலின்  மேன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

முதலாவதாக இன்றைய முதல் வாசகம் செவிமடுத்தலின் மேன்மையை சுட்டிக்காட்டுகின்றது. நினிவே மக்கள் பாவங்கள் பல செய்து கடவுளுக்கு எதிரான வாழ்வை வாழ்ந்தனர்.எனவே கடவுள் அவர்களை எச்சரித்துத் தண்டிக்க வேண்டும் என்று யோனா இறைவாக்கினரை பயன்படுத்தினார். தொடக்கத்தில் யோனா இறைவாக்கினர் கடவுளின் குரலுக்கு செவிமெடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் கடவுள் அவரை விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார். இறுதியில் கடவுள் சொன்னவாறே நினிவே மக்களுக்கு இறைவாக்கு உரைத்தார். பாவிகளான நினிவே மக்கள் யோனா இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பொழுது, அரசர் தொடங்கி சிறியவர் வரை சாக்கு உடை அணிந்து தன்னுடைய பாவத்திற்காக மனம் வருந்தினர். எனவே கடவுள் அவர்களை அழிப்பதற்கு கொண்டிருந்த மனநிலையை விட்டுவிட்டு மனமாற்ற வாழ்வுக்கு வழி காட்டினார். இதுதான் கடவுளின் மனநிலை. நாம் கடவுளின் குரலுக்கு செவிசாய்க்கும்  பொழுது நிச்சயமாக நம்வாழ்வு ஆசீர்வாதமாகவும் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் சுவைக்கக் கூடிய வாழ்வாகவும் இருக்கும்.

இன்றைய பதிலுரைப் பாடலில்  "நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?" என்று பாடுகிறோம். இது எதைச் சுட்டிகாட்டுகிறதென்றால்  கடவுள் நம் குற்றங்களை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஆனால் கடவுளின் முழுமையான மன்னிப்பை பெற வேண்டுமென்றால் நாம்  மனமாற வேண்டும். ஏனெனில் கடவுளின் அன்பு ஆழமானது. கடவுளின் இரக்கம் உயர்வானது. கடவுள் மன்னித்தலின் மாமுனியாக இருக்கிறார். எனவே கடவுளின் முழுமையான மன்னிப்பை பெறுவதும் பெறாததும் நம்முடைய கையில் தான் இருக்கின்றது. ஏனென்றால் கடவுள் நம்  குற்றங்களை    மன்னிப்பவர். அதற்கு நாம் கடவுளின் குரலுக்கு செவிமடுத்து மனமாற வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் மார்த்தா மற்றும் மரியா  என்ற இந்த சகோதரிகளின் வீட்டிற்கு இயேசு சென்று போதனை செய்ததை வாசிக்கிறோம். மார்த்தா பலவற்றைப் பற்றி கவலைப்பட்டு பரபரப்பாக உணவு தயாரிப்பதில் முழு மூச்சாகச் செயல்பட்டார். ஆனால் மரியா ஆண்டவர்  இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரின் வார்த்தைகளுக்கு செவிமெடுத்தார்.   மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,

'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,

உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' (லூக்கா 10:40) என்று இவ்வுலகம் சார்ந்த காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் ஆண்டவர் இயேசு "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்'' (லூக்கா 10:41) என்று கூறினார்.

ஆண்டவர் இயேசு மார்த்தாவின்  பணிகளைக் குறைவாக மதிப்பிடவில்லை. மாறாக, தன்னுடைய நற்செய்தி போதனைக்கு செவிமெடுப்பது தான் முதன்மையான ஒன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளின் குரலுக்கு செவிமெடுக்க பற்பல வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நாம் முழுமையாக பயன்படுத்துகிறோமா?  அல்லது ஏனோதானோ என்ற வாழ்வை வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவார்த்தைக்கு நாம் செவிமெடுத்தால், இறைவார்த்தையின் மதிப்பீடுகள் நம் வாழ்வை உயர்த்தும். நாம் வாழ்வை தூய வழியிலே வாழ வழி நடத்தும். நம் வாழ்வு ஆசீர்வாதமாய் மாறும். செவிமெடுக்கத் தயாரா?

இறைவேண்டல்:
அன்பான இறைவா! மனிதர்கள், நிகழ்வுகள் அதற்கும் மேலாக உமது தெய்வீக வார்த்தைகள் வழியாக உமதன்புக் குரலுக்கு செவிமடுத்து மனம்மாறி உமது மன்னிப்பையும் நீர் அருளும் நிலைவாழ்வையும் பெற வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்