உறவா? செல்வமா? எதற்கு முக்கியத்துவம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,31 வாரம் வெள்ளி 
I: உரோ: 15: 14-21
II: திபா: 98: 1. 2-3. 3-4
III: லூக்:  16: 1-8

நாம் வாழும் இந்த உலகத்தில் செல்வம் உறவை விட அதிகமாக போற்றப்பட்டு மதிக்கப்படுகிறது. செல்வம் வைத்திருப்பவர்களை ஒரு விதமாகவும் செல்வம் இல்லாதவர்களை ஒரு விதமாகவும் நடத்தக்கூடிய அவலநிலை இச்சமூகத்தில் இருக்கின்றது.  இந்த உலகத்தை விட்டு நாம்  செல்லும் பொழுது நாம் செல்வத்தை விட்டுச் செல்கிறோம் என்பதை விட நல்ல உறவுகளை விட்டுவிடுகிறோம். செல்வம் நம்மைப் பற்றி பேசுவதைவிட எத்தனை உறவுகளை நாம் சம்பாதித்து இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். உண்மையான உறவு தான் நாம் இறந்த பிறகும் நிலையாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில் செல்வர் ஒருவரின் வீட்டில் வீட்டு கண்காணிப்பாளர் ஒருவர் பணி செய்து வந்தார். ஆனால் அந்த பொறுப்பாளர் மீது தவறாகப் பழி சுமத்தப்பட்டது. எனவே தலைவர்  கணக்குகளை எல்லாம் ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறு கூறினார். இதைக் கேட்ட அந்த வீட்டுப் பொறுப்பாளர் உள்ளம் கலங்கினார். இருந்தபோதிலும் தன் தலைவரின் வீட்டை விட்டுச் சென்றாலும் தன்னை ஆதரிக்க நல்ல உறவுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நுண்மதியோடு செயல்பட்டார். அவர் எவ்வாறு நுண்மதியோடு செயல்பட்டார் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.

பாலஸ்தீன நாட்டில் வீட்டுத் தலைவர் கடன் கொடுக்கும் பொழுது வட்டியோடு சேர்த்து பெறும்  வகையில் தான்  கடன் கொடுப்பார். வட்டியோடு திரும்பப் பெறும் பொழுது வீட்டு கண்காணிப்பாளருக்கும் குறிப்பிட்ட சதவீதம் கொடுக்கப்படும். எனவே தான் இந்த வீட்டு கண்காணிப்பாளர் தலைவர் தன்னை பிறரின் பேச்சைக் கேட்டு தன் வேலையை விட்டு நீக்கினாலும், தன்னால் இரக்கம் காட்டப்பட்டவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆழமாக நம்பி அவர் அவரது கடன் சுமையை குறைக்கிறார். எவ்வாறெனில் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டவரை ஐம்பது என்று எழுத சொன்னார். நூறு மூட்டை கோதுமை கடன்பட்டவரை எண்பது என்று எழுதச் சொன்னார். இவ்வாறாக அவர் தள்ளுபடி செய்தது வீட்டு தலைவருக்கு சேரவேண்டிய கடனை அல்ல ; மாறாக,  தனக்குச் சேரவேண்டிய சதவீதத்தில் இருந்துதான் தள்ளுபடி செய்து உதவி செய்திருக்கிறார். இந்த இரக்கச்  செயல்பாடு  எந்த அளவுக்கு வீட்டுக் கண்காணிப்பாளர் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதை  எடுத்துரைக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இந்த உலகம் சார்ந்த செல்வத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டு, நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளின் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் பொழுது நம் வாழ்வில் நிறைவற்ற தன்மையை உணர்கிறோம். நாம்  தள்ளாடி துன்பத்திலே வாழ்கின்ற பொழுதும்  பிறரால் உதறித்தள்ளப்படும் பொழுதும்   நாம் வைத்திருந்த செல்வம் கை கொடுக்காது. மாறாக,  நம்மைச் சுற்றியுள்ள நல்ல உறவுகள்? மட்டுமே கைகொடுக்கும். எனவே உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வோம். நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் நிறைவையும் சுவைப்போம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் அழிந்துபோகும் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அழியா நல்ல உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க உம் அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்