இயேசுவைப் பின்பற்றி நம்மை இழக்கத் தயாரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

 பொதுக்காலம்,31 வாரம் புதன் 
I: உரோ: 13: 8-10
II: திபா: 112: 1-2. 4-5. 9
III: லூக்:  14: 25-33

 

ஒரு ஊரில் ஒரு மாணவர் போட்டித் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். எப்படியாவது அரசுவேலை பெற்றிட வேண்டும் என்ற ஆவலோடு ஒவ்வொரு நாளும் படித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை போட்டித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது. எனவே மிகுந்த ஆர்வத்தோடு அந்த போட்டித் தேர்வுக்காகத் தன்னை ஆயத்தப்ப்படுத்தினார். ஆனால் தேர்வு நாள் வந்த பொழுது உயிருக்கு போராடிய தன் நண்பனுக்கு இரத்தம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. இவரின் நண்பர் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். இருந்தபோதிலும் இரத்தம் பற்றாக்குறை ஏற்படவே இரத்தம் வேண்டி பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்பொழுது போட்டித் தேர்வு எழுதும் நேரத்தில் இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன்,  தேர்வு எழுதச் செல்லாமல் இரத்தம் கொடுக்க சென்று விட்டார். தன் நண்பனின் உயிரைக் காப்பதற்காக தன் இலட்சியத்தை கூடக் கைவிடத் தயங்கவில்லை. இவரால் காப்பாற்றப்பட்ட நண்பனின் தந்தை இவருக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினார்.அது என்ன பரிசு என்றால் தான் செய்யும் அரசு வேலையை இவருக்குக் கொடுத்தார். காரணம் என்னவெனில் இவர் மகன்தான் இவருக்கு மிகப் பெரிய சொத்து. இவரின்  மகனுக்காக மட்டுமே  இவர் வாழ்ந்து வந்தார். இத்தகைய சூழலில் மிகவும் அன்பு செய்யப்பட்ட தன் மகனின் உயிரை விட இந்த உலகத்தில் பெரிய சொத்து இல்லை என்று கருதி தன்சொந்த வேலையைக் கூட கொடுக்கத் தயாரானார்.

இதுதான் வாழ்வில் எதார்த்தம். நாம் பிறர் நலத்தோடு தியாகம் செய்கின்ற பொழுது நமக்கே தெரியாமல் ஒரு சில நேரங்களில் அந்த தியாகம் ஆசீர்வாதமாய் நம்மை வந்ந்தடையும். இழத்தலின் வழியாகத்தான் உண்மையான மகிழ்ச்சியை நாம் காணமுடியும். இழத்தல்  நமக்கு அத்தருணத்தில் வேதனையைக் கொடுத்தாலும் பின்பு  சுகமான வாழ்க்கையைக் கொடுக்கும்.மகிழ்ச்சி நம் வாழ்வில் நிலைக்கும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தமக்குரியவற்றை இழக்காமல் எவரும் தன் சீடராய் இருக்க இயலாது எனக் கூறுகிறார். தமக்குரியவை எனச் சொல்லும் போது உறவுகள், உடமைகள் என நாம் வெளிப்படையாக எண்ணக்கூடாது. இயேசு உடைமைகளையோ உறவுகளையோ அல்லது தமக்குச் சொந்தம் என எண்ணுகின்றவற்றை வெறுக்கவோ அல்லது தூக்கி எறியவோ சொல்லவில்லை. மாறாக அவற்றின் மேல் கொண்டுள்ள பற்றுகளையே தூக்கி எறியச் சொல்கிறார்.

நாம் யார்மீதாவது அல்லது எதன்மீதாவது அதிகப் பற்றுக் கொண்டிருக்கும் போது அவற்றை நாம் இழக்க நேரிட்டால் அதை ஏற்றுக்கொள்வது நமக்கு கடினமாகிவிடுகிறது. இதனால் நமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. பணிவாழ்வு தடைபடுகிறது. எனவே அனைத்தையும் தாண்டி கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நாம் இழக்க நேரிட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் மனப்பக்குவம் நமக்குக் கிடைக்கிறது. நம் இன்ப துன்பங்களையும் இழப்புகளையும் சரியான மனநிலையோடு ஏற்றுக்கொண்டு நம் வாழ்வையும் பணியையும் தொடர்வதே உண்மையான சீடத்துவம். நம்மையே நாம் இழக்க நேர்ந்தாலும் துணிவோடு அதை ஏற்றுக்கொள்ளும் போது நாம் இயேசுவின் சீடராகிறோம். நம்மையே இழந்து இயேசுவின் சீடராக வாழத் தயாரா?

 இறைவேண்டல்
எம் மீட்புக்காக தன்னையே இழந்த இயேசுவே!  உம் பணி தொடரவும் உம் சீடராக மாறவும் எம்மிடம் உள்ள உலகப்பற்றுகளை இழக்க உம் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்