புனிதர்கள் வழி நடக்க ... | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா  
I: திவெ: 7: 2-4, 9-14
II: திபா 24: 1-2. 3-4. 5-6
III: 1 யோவா:  3: 1-3
IV: மத்:  5: 1-12

புனித அன்னை தெரசா மனித சேவையில் புனிதம் கண்டவர்கள். மிகச்சிறந்த சமூக சேவைப் பணிகளைச் செய்து இச்சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு மனித மாண்பை வழங்கியவர்கள். இவர் மனித சேவையையும் புனித வாழ்வையும் இருக்கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர். இவரின் வாழ்வை கண்டு அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். இப்படிப்பட்ட புனித அன்னை தெரசாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்,  "அன்னையே!  நீங்கள் புனிதராக வாழ்வதால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றீர்கள். அது குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி தானே?" என்று கேட்டபோது,  அன்னை அவரை உற்று நோக்கி,  "புனிதம் என்பது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஆடம்பரம் அல்ல, மாறாக ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கடமை. நீ ஒரு பத்திரிக்கையாளன். உனது பணிகளைச் சிறப்பாகவும், சரியாகவும் செய்ய முயற்சிப்பதன் வழியாக ஒரு புனிதராக வாழ் " என்று சொன்னாராம். 

புனிதம் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வாக்க வேண்டிய ஒரு உன்னதமான பண்பு . நம் கடமைகளை மனசாட்சிக்கு பயந்து உண்மையாக செய்வதே ஒரு புனித வாழ்வு தான். இதைத்தான் புனித அன்னைதெரசா அவர்கள் செய்தார்கள். நாம் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு செயல்பட்டு புனித வாழ்வு வாழவே இன்றைய நாள் விழாவானது நம்மை அழைக்கின்றது.  இன்றைய நாளில் நம் தாய் திருஅவையோடு இணைந்து அனைத்து புனிதர்கள் விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். மனிதர்களாய் பிறந்த நம் அனைவரின் இயல்பே  புனித வாழ்வு தான். அதை உணர்ந்து வாழ்வதே நம் முன் இருக்கும் சவாலாக இன்றைய விழாவானது நம்மை சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதியில் அனைத்துப் புனிதர்களின் விழாவினை நம் தாய்த்திருஅவையோடு இணைந்து கொண்டாடுகின்றோம் . இந்த விழாவினைக் கொண்டாடுவதன் நோக்கம் இவ்வுலகில் பிறந்து புனிதத்தில் வளர்ந்து இறந்த  புனிதர்களை நினைவு கூறுகின்ற நாளிலே, திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் புனிதர்கள் தான் என்ற சிந்தனையையும் இன்றைய நாள் விழாவானது நினைவுறுத்துகிறது.  நாம் அனைவருமே ஒரு வகையில் மனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நாள் விழாவானது நாம் அனைவருமே புனிதர்கள் என்ற செய்தியையும் வழங்குகின்றது. எனவேதான் புனித பவுல் தன்னால் மனமாற்றப்பட்ட கிறிஸ்தவர்களை   'புனிதர்கள்'  என்றும்  தூயவர்கள் ' (1கொரி: 1:2) என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது எதை சுட்டிக்காட்டுகின்றது என்றால் புனிதத்தில் வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்ற ஆழமான சிந்தனையை அறிவுறுத்துகின்றது.

"நாம் தூயோராகவும், மாசற்றவராகவும் விளங்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் (எபே: 1:4). நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய வாழ்வை தான்.  திருஅவையால் புனிதர்களாக  அறிவிக்கப்பட்டவர்களை தாண்டி, எண்ணற்ற மனிதர்கள் புனித வாழ்விலே வாழ்ந்து திருஅவையால் புனிதர்களாக அங்கீகரிக்கப்படாத பலர் இருக்கின்றனர். அவர்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூறும் விதமாக தான் இன்றைய நாள் விழாவானது அமைகின்றது. இன்றைய நாளில் திருஅவையால் புனிதர்களாக அறிவிக்கப்படாத புனிதர்கள் எண்ணற்ற நபர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து இறந்துள்ளனர். அவர்களின் புனித வாழ்வை பின்பற்றி நாமும் புனிதர்களாக வாழ இன்றைய நாள் அழைப்பு விடுக்கின்றது.  நாமும் புனிதர்களைப் பின்பற்றி புனிதர்களாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு சிந்திப்பது நலமாகும்.

முதலாவதாக. தூய்மையான உள்ளத்தோடு வாழ்வது. "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் " (மத்: 5: 8) . திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லா புனிதர்களும் தூய்மையான வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தங்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்துமே தூய்மையாக இருந்தது. எனவேதான் அவர்களால் பற்பல வல்லச்செயல்களைச் செய்து மிகுந்த வலிமையோடு நற்செய்தி அறிவிக்க முடிந்தது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அருளானந்தர். அவர் பணி செய்த நம் நாட்டில் தன்னுடைய தூய வாழ்வின் வழியாக பற்பல வல்ல செயல்களைச் செய்து நற்செய்தியைப் பிறருக்கு அறிவித்தார் . புனிதத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் இறைவனின் பெயரால் வல்லச் செயல்களைச் செய்து நற்செய்தி அறிவிக்க முடியும். எனவே நாம் நமது அன்றாட வாழ்வில் புனித வாழ்வில் நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக நேர்மையோடு வாழ்வது. புனிதர்கள் ஒவ்வொருவரும் நேர்மையோடு வாழ்ந்தனர். நேர்மையான மனிதர் இறைவனின் உண்மையான படைப்பாக மாறுகிறார். நாம் கடவுளுக்கும் நம்மோடு வாழக்கூடிய மனிதருக்கும் முன்னிலையில்  நேர்மையோடு வாழும் பொழுது நாமும் புனிதர்களாக மாறமுடியும்.

மூன்றாவதாக புனிதர்கள் என்பவர்கள் இறை வார்த்தையை வாழ்பவர்கள். புனிதர் என்பவர் யார்? என்ற கேள்விக்கு நம் மேனாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ஆண்டவரின் அருள்வாக்கு' என்ற ஏட்டில் "இறைவாக்கினின்று சுடர்விடும் ஒளிப்பிழம்பு போன்று திகழ்பவர்கள், அந்த அளவுக்கு இறைவாக்கைக் கவனமுடன் கேட்டு,  படித்துத் தியானித்து வாழ்ந்து காட்டியவர்கள்; இறைவாக்கால் செதுக்கப்பட்டவர்கள்; இறைவாக்கால் தங்களது வாழ்வை முற்றிலும்    மாற்றி அமைத்துக்கொண்டவர்கள்" என்று கூறியுள்ளார்.  எனவே புனித வாழ்வில் வாழ்வது என்பது இறைவார்த்தையை வாழ்வாக்குவது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே இறை வார்த்தையை வாசித்து அதை தியானித்து வாழ்வாக்க முயற்சி செய்வோம். அப்பொழுது நாமும் புனிதத்தில் வளரமுடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் புனித பிரான்சிஸ் சவேரியார். இவர் இறைவார்த்தையை வாசித்தது மட்டுமல்லாமல் ; அதை தியானித்து வாழ்வாக்கினார் . 

நான்காவதாக புனிதர்கள் என்பவர்கள் தங்களின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள். நாம் அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். இதுதான் நம்முடைய உண்மை இயல்பு.  இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் ' நாம் கடவுளின் பிள்ளைகள் ' என்று சுட்டிக்காட்டுவது கடவுளின் பிள்ளைகளாக வாழ வழிகாட்டுகின்றார்.  நம் தந்தை கடவுள் தூயவராக   இருப்பது போல அவரின் பிள்ளைகளாகிய நாமும் தூயவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அதேபோல எல்லோரையும் சகோதரர் சகோதரிகளாக  ஏற்றுக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இறைவனின் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான புனித வாழ்வு. 

 ஐந்தாவதாக  மனித நேயப் பணிகளைச் செய்வது. "யாரென்றே அறியாத ஒருவர் அழும்போது காரணமேயில்லாமல் நம் கண்களும் கசியுமாயின் அதுதான் மனித நேயம் " புனித அன்னை தெரசா என்று கூறியுள்ளார் . அன்னை தெரசா புனிதராக மாறியதற்கு மிகச்சிறந்த காரணங்களில் ஒன்று மனிதநேயப் பணிகள். அவர் துன்பப்படுகிறவர்கள் மத்தியில் ஆண்டவர் இயேசுவைக் கண்டார் . எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்மோடு வாழக்கூடிய மனிதர்கள் துன்பப்படுகின்ற பொழுது   அவர்களில் இயேசுவைக் கண்டு மனிதநேயப் பணிகளைச் செய்கின்ற பொழுது நாமும் ஒரு புனித  வாழ்வை வாழ முடியும்.

ஆறாவதாக சோதனைகளை வெல்பவர்களே புனிதர்கள் . புனிதர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்வில் வந்த துன்பங்களையும் சோதனைகளையும் தடைகளையும் இடையூறுகளையும் ஆண்டவர் இயேசுவின் மனநிலையில் எதிர்கொண்டு புனித வாழ்வுக்கு சான்று பகர்ந்தவர்கள். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் புனித வாழ்வுக்கு சான்று பகிர்ந்திட இறைவனின் துணையோடு சோதனைகளை வெல்ல முயற்சி செய்வோம். 

இவ்வாறாகப் புனித வாழ்வுக்கு வழிகாட்டும் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்முடைய புனித வாழ்வு திரு அவையால் அங்கீகரிக்கப்படுகிறதோ? இல்லையோ? ஆனால் கடவுள் நம்முடைய புனித வாழ்வைக் கண்டு அங்கீகரிப்பார். எனவே நாம் அனைவரும் புனிதர்களின் தோழமையை உணர்ந்து புனிதர்களின் வழிநடந்து கடவுள் விரும்பும் வாழ்வை வாழ முயற்சி செய்வோம். இதைத்தான் புனித ஜெரால்டு மஜெல்லா  " கடவுள் விரும்புவதை, கடவுள் விரும்புவது போல, கடவுள் விரும்பும்வரை செய்வதே புனித வாழ்வு" என்று கூறியுள்ளார். எனவே கடவுள் விருப்பத்தின்படி நம் வாழ்வை அமைத்து புனித வாழ்வுக்கு சான்று பகிர்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : 
தூயவரான இறைவா ! உமது பிள்ளைகளாகிய நாங்கள் தூய உள்ளத்தோடு எந்நாளும் வாழ்ந்து உமது விருப்பத்தின்படி எல்லாவற்றையும் செய்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்