மனநிறைவுள்ள வாழ்வு வேண்டுமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா - 5ஆம் வாரம் செவ்வாய்
I: திப:14: 19-28
II: திபா :145: 10-11. 12-13. 21
III:யோவான் :14: 27-31
மனநிறைவுள்ள வாழ்வு வாழவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மனநிறைவு உள்ள வாழ்வு வாழ்வதற்கு நமக்கு நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் கொடுக்கிறார். "இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' '' (யோவான் 14:27) என்ற வாக்குறுதியை நமக்கு வழங்கியுள்ளார். நம் ஆண்டவர் இயேசு நமக்கு அமைதியை வழங்குபவராக இருக்கின்றார். பல நேரங்களில் அவர் வழங்குகின்ற அமைதியை நாம் உணரத் தவறி விடுகிறோம். நம்முடைய பலவீனத்தின் காரணமாகவும் சுயநலத்தின் காரணமாகவும் இயேசு தரும் அமைதியை அனுபவிக்கத் தவறிவிடுகிறோம். இயேசுவின் முழுமையான அமைதியை நாம் அனுபவிக்க நாம் அவரின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர வேண்டும்.
இன்றைய சமூகத்தில் எண்ணற்ற மனிதர்கள் போதுமான வசதிகள் எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லாமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்து இல்லாமல் இருப்பதே . கடவுளின் குரலுக்குச் செவிமடுத்த இடையர்கள் பாலன் இயேசுவின் வழியாக அமைதியை அனுபவித்தனர். கடவுளின் குரலுக்கு செவிடுக்காமல் பதவி ஆசைக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்று வாழ்ந்த ஏரோது அரசன் பாலன் இயேசுவின் பிறப்புச் செய்தியை கேள்வியுற்றதும் அமைதியை இழந்தான் .
இயேசு தன்னுடைய இறையாட்சி பணிக்காலங்களில் அமைதியற்றவர்களுக்கு அமைதியை வழங்குபவராக இருந்தார். யூத சமூகத்தில் நோயுற்றோர், பாவிகள், கைவிடப்பட்டோர், அனாதைகள் போன்றோர் அமைதி இல்லாமல் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தனர். தங்களின் மனித மாண்பை இழந்து தவித்தனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் அனைவரும் மனித மாண்போடு வாழ இயேசு மனிதநேயத்தோடு அவர்களுக்கு நலமளிக்கும் வாழ்வையும் மன்னிப்பையும் வழங்கினார்.
ஆண்டவர் இயேசு தந்த அமைதி இவ்வுலகம் தரக்கூடிய அமைதியை விட மேலானது. அது நிறைவுள்ள வாழ்வுக்கு வழிகாட்டுவது. ஆற்றலோடும் வலிமையோடும் செயல்பட வழிகாட்டுவது. அன்பையும் இரக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டது. இப்படிப்பட்ட அமைதியை இயேசு தன்னை நோக்கி வரும் ஒவ்வொருவருக்கும் வழங்க கூடியவராக இருக்கிறார்.
நம்முடைய அன்றாட வாழ்வில் இயேசு தரும் அமைதியை முழு உள்ளத்தோடும் ஆற்றலோடும் பெற்று, அந்த அமைதியை பிறருக்கு வழங்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய காலத்தில் எண்ணற்ற மக்கள் அமைதியின்றி துன்பப்பட்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு நாம் அமைதியை வழங்கி மகிழ்வோடு வாழ வழி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அப்படிப்பட்ட மகிழ்வை அவர்களுக்குக் கொடுத்து அமைதியில் வாழச் செய்யும்பொழுது நாமும் நிறைவுள்ள வாழ்வை இயேசுவைப் போல வாழ முடியும். நிறைவுள்ள வாழ்வை வாழ நாம் தயாரா?
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் நிறைவுள்ளவர்களாக வாழ்ந்து , எந்நாளும் பிறருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் இறை கருவிகளாக வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்