இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டு அறிக்கையிடத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனித தோமா - திருத்தூதர் விழா 
I: எபே: 2: 19-22
II: திபா 117: 1. 2
III:யோவா: 20: 24-29

இன்று நமது தாய் திருஅவையானது புனித தோமா அப்போஸ்தலரின் விழாவைக் கொண்டாடுகிறது. இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான திதிமஸ் என்றும் அழைக்கப்படும் தோமா  பொதுவாக "சந்தேக தோமா" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் இயேசுவின் உயிர்த்தெழுதலை முதலில் சொன்னபோது அவர் சந்தேகித்தார்; உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசுவைப் பார்க்கும் வாய்ப்பை தோமா தவறவிட்டார், மற்ற சீடர்கள் அவரைச் சந்தித்தனர். இது அவருக்கு ஒருவித ஏமாற்றத்தை உருவாக்கியது. மேலும் எப்படியாவது  இயேசுவைக் பார்க்கவேண்டும் எனும் விருப்பம் அவரிடம் அதிகமாக இருந்தது. இந்த ஆழ்ந்த விருப்பத்தின் வெளிப்பாடு ஒரு சந்தேகமாக மாறியது, மேலும் அவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான  ஆதாரத்தைக் கேட்டார்.

இயேசு, அவருடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு, அவர் எதிர்பார்த்த படி சிலுவையில் அறையப்பட்ட காயங்களைக் காட்டினார். கண்ட உடனே அவர் தனது நம்பிக்கையை ஒப்புக்கொண்டார். ஆம், இயேசுவின் தெய்வீகத்தன்மையை "என் ஆண்டவரே என் கடவுளே" என வெளிப்படையாக ஒப்புக் கொண்ட முதல் நபர் புனித தோமா. புனித தோமா மூலமாக, நம்பிக்கையுள்ள நபர்களாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை இயேசு நம் அனைவருக்கும் அளிக்கிறார்.

சிறிது நேரம் நம்மை ஆராய்வோம். ஒருவர் தனது கடவுள் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது நாம் எவ்வளவு தூரம் நம்புகிறோம்? நாம் அவர்களை சந்தேகிக்கிறோமா? அல்லது நம் வாழ்க்கையிலும் இதேபோல் நடக்கவில்லையே என்று எதிர்பார்க்கிறோமா? கடவுளை நம்பக் கற்றுக்கொள்வோம், எல்லா அதிசயங்களும் நம் வாழ்வில் நடக்கும்.

புனித தோமா இயேசுவை ஆண்டவராக, கடவுளாக ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், இயேசுவை அறிவிக்க நம்  இந்திய நாட்டுக்கு வந்தார் என வரலாறு கூறுகிறது. அவரைப் போல நம்முடைய நம்பிக்கையின்மை அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவை நம்முடைய இறைவன் என்று ஏற்றுக் கொண்டு அவரை உலகம் முழுவதும் அறிவிப்போம்.

இறைவேண்டல் 
எங்கள் ஆண்டவரும் கடவுளுமான  கிறிஸ்துவே   எல்லா சூழ்நிலைகளிலும் நீரே எங்கள் இறைவன் என்று ஏற்றுக்கொண்டு  அறிவிக்க அருள் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்