உயிர்ப்பு – அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல் | யேசு கருணா | உயிர்ப்புத் திருவிழிப்புத் திருப்பலி

உயிர்ப்புத் திருவிழிப்புத் திருப்பலி
நற்செய்தி வாசகம் மத்தேயு 28:1-10

உயிர்ப்பு – அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்

'அவர் இங்கு இல்லை' என வந்து பாருங்கள்!

'அவரைக் கலிலேயாவில் காண்பீர்கள்' என சென்று அறிவியுங்கள்!

திருவிழிப்புகளின் தாய் என அழைக்கப்படுகின்ற பாஸ்கா திருவிழிப்பில், 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (1 கொரி 15:14) என்று பவுல் மொழியும் சொற்களின் பின்புலத்தில் நம் நம்பிக்கையின் அடித்தளத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்' ஒப்பிடுகின்றனர்.

அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் (ஆங்கிலத்தில், எக்வினாக்ஸ்) தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே – கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15) - அடையாளப்படுத்துகின்றன.

உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும் முட்டையும் இடம் பெறுகின்றன. 'முயல்' என்பது வளமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும், 'முட்டை' வசந்தகாலத்தையும், வளமையையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. ஜெர்மானிய புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை ஒன்றை ஈஸ்த்ரா முயலாக மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு நன்றியாக அந்த முயல் முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், 'பண்டைக்கால எகிப்தியர்களும் பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்' என்று குறிப்பிடுகிறது. மேலும், எகிப்திய இலக்கியங்களில் முட்டை சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில் யூப்பிரத்திசு நதியில் விழுந்த இஷ்தார் தேவதையின் எழுச்சியையும் குறிக்கிறது. இதன் பின்புலத்தில்தான் முட்டை இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு, முட்டையை உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும் பரிமாறவும் செய்கின்றோம்.

ஒழுங்கற்ற நிலையிலிருந்து புதிய படைப்பு உருவாகிறது என முதல் வாசகத்திலும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றுச் செங்கடலைக் கடந்தனர் என இரண்டாம் வாசகத்திலும் கேட்டோம். இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை வெற்றுக்கல்லறையாக இருக்கிறது. இது எப்படி? என நாம் கேள்வி கேட்டால் நமக்கு விடை கிடைப்பதில்லை. படைப்பு, விடுதலை, மற்றும் உயிர்ப்பு அனுபவங்கள் சொற்களால் வரையறுக்கப்பட இயலாதவை. முன்பிருந்த வெறுமை, அடிமைத்தனம், இறப்பு இப்போது இல்லை. 'உயிர்ப்பு எப்படி?' என்ற கேள்வி அல்ல, 'உயிர்ப்பு ஏன்?' என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும்.

இயேசுவின் உயிர்ப்புக்கு இரு மரபுகள் சான்று பகர்கின்றன. ஒன்று, அறிக்கை மரபு (ஆங்கிலத்தில், கன்ஃபெஷனல் டிரடிஷன்), இரண்டு, கதையாடல் மரபு (ஆங்கிலத்தில், நரடிவ் டிரடிஷன்). 'ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அவர் சீமோனுக்குத் தோன்றினார்' (காண். லூக் 24:34) என்னும் சிறிய வாக்கியமாக நின்றுகொள்கிறது அறிக்கை மரபு. வெற்றுக் கல்லறை, எம்மாவு நிகழ்வு, இயேசுவின் தோற்ற நிகழ்வுகள் என விரிந்துநிற்கிறது கதையாடல் மரபு. இவ்விரு மரபுகளையும் தாண்டி உயிர்ப்புக்குச் சான்றாக நிற்பது திருத்தூதர்களின் வாழ்வு. பயத்தால் தங்களைப் பூட்டிக்கொண்ட திருத்தூதர்கள் கதவுகளைத் திறந்து வெளியே வருகிறார்கள். பயம் என்னும் முட்டைக் கூட்டை உடைத்துக்கொண்டு இவர்களும் வெளியேறுகிறார்கள்.

'ஓய்வுநாளுக்குப் பின்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. முதல் வாசகத்தில், ஆறு நாள்கள் உலகைப் படைத்த பின்னர் ஏழாம் நாளில் ஆண்டவராகிய கடவுள் ஓய்வெடுத்தார் என வாசிக்கக் கேட்டோம். யூத மரபில் ஓய்வுநாள் என்பது இயக்கம் (மூவ்மென்ட்) இல்லாத நாள். பெரிய வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு என நாம் வேகமாகக் கடக்கிறோம். ஆனால், இதற்கிடையில் புனித சனி – ஓய்வுநாள் - இருக்கிறது. இந்த ஓய்வுநாளில் நீண்ட அமைதி நிலவுகிறது. இயேசுவை அடக்கம் செய்த அரிமத்தியா நகர் யோசேப்பு, நிக்கதேம், உடன்நின்ற பெண்கள் அனைவரும் அனுபவத்த வலியை துன்பத்தை நம்மால் நினைத்துப்பார்க்க முடிகிறது. தங்கள் கண் முன்னால் நடந்தேறிய துன்ப நாடகம், திடீரென முடிந்துவிட்ட இயேசுவின் வாழ்வு, தங்கள் கண்களுக்கு முன்னே அரங்கேறிய கொடிய மரணம், தங்களால் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலை என அனைத்தும் அவர்களுடைய இதயங்களின் வலியைக் கூட்டுகின்றன. போதகரும் ஆண்டவருமான தங்கள் தலைவர் கொடிய சிலுவை இறப்புக்கு உட்படுத்தப்பட்டதைக் கேள்வியுறுகின்ற திருத்தூதர்கள் தாங்களும் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் கதவுகளைச் சாத்திக்கொள்கிறார்கள். உயிர்ப்பின் விந்தை என்னவென்றால் இயேசுவின் எதிரிகள் மட்டுமே அவர் உயிர்த்துவிடுவார் என நம்புகிறார்கள். கல்லறைக்குக் காவல் வைக்கிறார்கள்.

உயிர்ப்பு என்னும் செய்தியை மூன்று 'அ' எனப் புரிந்துகொள்வோம்: அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்.

ஆக, முதலில் உயிர்ப்பு என்பது ஓர் அழைப்பு. 'வந்து பாருங்கள்' என்பதே அந்த அழைப்பு. 'வந்து பாருங்கள்' என்ற சொல்லாடல் நற்செய்தி நூல்களில் இறையனுபவம் பெறுவதற்கான அழைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிற முதற்சீடர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' எனக் கேட்டபோது, 'வந்து பாருங்கள்' என அவர்களை அழைக்கிறார் இயேசு (யோவா 1). 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' எனக் கேட்ட நத்தனியேலிடம், 'வந்து பாரும்' என அழைக்கிறார் பிலிப்பு (யோவா 1). இயேசுவோடு உரையாடி முடிக்கின்ற சமாரியப் பெண் தன் குடத்தை இயேசுவின் அருகில் விட்டுவிட்டு ஊருக்குள் சென்று, 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என அறிவிக்கிறார் (யோவா 4). இலாசர் இறந்த நிலையில் பெத்தானியாவுக்கு வருகிற இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 'அவனை எங்கே வைத்தீர்கள்?' எனக் கேட்டபோது, மார்த்தாவும் மரியாவும், 'ஆண்டவரே, வந்து பாரும்!' என அழைக்கிறார்கள் (யோவா 11). இன்றைய நற்செய்தி வாசகத்தில், மகதலா மரியா மற்றும் மற்ற மரியாவை (யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய், காண். மத் 27:56) நோக்கி, 'வந்து பாருங்கள்' என அழைக்கிறார் வானதூதர்.

இரண்டாவதாக, உயிர்ப்பு என்பது ஓர் அனுபவம். வெற்றுக் கல்லறைக்குள் நுழைந்து பார்க்கிற அனுபவம். 'அவர் இங்கே இல்லை. அவர் சொன்னபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்' என்னும் வானதூதரின் அழைப்பு கேட்டுப் பெண்கள் கல்லறைக்குள் செல்கிறார்கள். இந்நிகழ்வைப் பற்றி எழுதுகிற புனித அகுஸ்தினார், 'கல்லறையின் கல் புரட்டப்பட்டது இயேசுவை வெளியே கொண்டுவருவதற்கு அல்ல, மாறாக, சீடர்களை உள்ளே அனுமதிப்பதற்கே' என்கிறார். 'இயேசு இங்கே இல்லை' என்னும் அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்கள். இந்த அனுபவம் அவருடைய சொற்கள்மேல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் தாபோர் மலையிலிருந்து இறங்கி வருகிற திருத்தூதர்கள், 'இறந்து உயிர்த்தெழுதல் என்றால் என்ன?' எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டே வருகிறார்கள். இறந்த உயிர்த்தெழுதல் என்றால் என்ன என்பதை வெற்றுக் கல்லறைக்குள் நுழைகிற பெண்கள் அறிந்துகொள்கிறார்கள். கல்லறையின் கட்டிலிருந்து விடுபடுவதே உயிர்ப்பு அனுபவம். இப்பெண்கள் கல்லறைக்கு வெளியே நிற்கிற இயேசு அனுபவத்தையும் பெறுகிறார்கள். அவர்களை எதிர்கொள்கிற இயேசு அவர்களை வாழ்த்துகிறார். இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொள்கிறார்கள் பெண்கள். 'காலடிகளைப் பற்றிக்கொள்தல்' என்னும் சொல்லாடல் வழியாக, இயேசு ஓர் ஆவி அல்ல, மாறாக, அவர் உடலைப் பெற்றிருந்தார் எனவும், உயிர்ப்புக்குப் பின்னர் அவர் ஆண்டவராகிய கடவுள் என வணங்கப்படுகிறார் எனவும் மொழிகிறார் ஆசிரியர்.

மூன்றாவதாக, உயிர்ப்பு என்றால் அனுப்பப்படுதல். 'நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்' எனப் பெண்களை அனுப்புகிறார் வானதூதர். கலிலேயா என்பது தொடக்கம். அங்கேதான் சீடர்கள் தங்களுடைய அழைப்பைப் பெறுகிறார்கள். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்தவரை மனிதர்களைப் பிடிப்பவர்களாக இயேசு மாற்றியது அங்கேதான். தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியது, அப்பங்கள் பலுகச் செய்தது, தொழுகைக்கூடங்களில் போதித்தது, பேய்களை ஓட்டியது என இயேசுவின் வல்ல செயல்களும் போதனைகளும் நடந்தேறிய இடம் கலிலேயோ. மேலும், கலிலேயோ புறவினத்தார் வாழும் பகுதியாகவும், சாதாரண மக்கள் வாழும் பகுதியாகவும் இருந்தது. இயேசு அங்கேதான் தம் பொதுவாழ்வை, பணிவாழ்வைத் தொடங்குகிறார். பெண்களுக்குத் தோன்றுகிற இயேசுவும், 'கலிலேயாவுக்குப் போகுமாறு சகோதரர்களிடம் சொல்லுங்கள்' என அவர்களை அனுப்புகிறார். தம் திருத்தூதர்களை இப்போது சகோதரர்கள் என அழைக்கிறார் இயேசு. தாம் பெற்ற உயிர்ப்பு தம் சகோதரர்களுக்கும் சாத்தியம் எனச் சொல்வதோடு தங்கள் வாழ்வின் தொடக்கத்திற்கு அவர்களை மீண்டும் அனுப்புகிறார் இயேசு.

உயிர்ப்பு நிகழ்வை அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல் என நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) 'வந்து பாருங்கள்' என வானதூதர் இன்று நமக்கும் அழைப்பு விடுக்கிறார். 'வந்து பாருங்கள்' என்னும் அழைப்புக்குப் பதிலிறுப்புச் செய்ய நாம் நம் பாதுகாப்பு வளையத்தை விட்டு, நம் கூட்டை விட்டு வெளியேற வேண்டும். அச்சம் களைய வேண்டும். துணிச்சலும் தாராள உள்ளமும் கொண்டிருக்க வேண்டும். நம் அன்றாட வேலைகள், பயணங்கள், முதன்மைகள், திட்டங்கள் என ஓடிக்கொண்டிருக்கும் நம்மை நிறுத்துகிற வானதூதர், 'வந்து பாருங்கள்' என நம்மை அழைக்கிறார். இறைவார்த்தையில், அருள்சாதனக் கொண்டாட்டங்களில், அயலாரில், தேவையில் இருப்பவர்களில் ஆண்டவராகிய இயேசுவைக் காண நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நாம் செல்கிற பயணத்தைச் சற்றே நிறுத்துவிட்டு, நம் பாதையைச் சற்றே மாற்றி அவரை நோக்கிப் புறப்படுதல் நலம்.

(ஆ) வெற்றுக் கல்லறை அனுபவம் பெறுதல். 'அவர் இங்கே இல்லை' என்று நாம் உணரத் தொடங்கும் அந்த நொடியில் இயேசு நம் அருகில் இருக்கிறார். வாழ்கின்ற இயேசுவைக் கல்லறையில் தேடுவது முறை அல்ல. இனி அவரைக் கல்லறையில் அல்ல, மாறாக, கலிலேயாவில்தான் கண்டுகொள்ள முடியும். நம் வாழ்வைத் தொடாத வெற்று வழிபாட்டுச் சடங்குகளில் அவர் இல்லை. 'நான், எனது, எனக்கு' என்னும் தன்னல மனப்பாங்கில் அவர் இல்லை. மது, போதை, இணையதளம் மோகம், இன்ப நாட்டம் போன்றவற்றில் அவர் இல்லை. இவை எல்லாம் வெற்றுக் கல்லறைகள். உயிர்த்த அனுபவம் பெறுதல் என்பது இவற்றை வெற்றுக் கல்லறைகள் என உணர்ந்து, இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொள்வது. இறப்பின் காரணிகளைத் தள்ளி வைப்பது.

(இ) அனுப்பப்படுதல். 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் செய்தியை உலகுக்குச் சொன்ன மகதலா நாட்டு மரியா போல, நாம் வாழ்கிற இடங்களில் கிறிஸ்துவை நம் வாழ்க்கையால் அறிவிக்கும்போது நாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில் கொண்டாடுகிறோம். அன்றாட வாழ்க்கையை முழுமையாக வாழ முயற்சி செய்வோம். அன்பு செய்தல், இரக்கம் காட்டுதல், மன்னித்தல், பிறரையும் நம்மையும் மேம்படுத்துதல் போன்றவை நம் வாழ்வின் இலக்குகளாக அமையட்டும்.

மூன்று 'அ' கடந்து, இன்னொரு 'அ' இருக்கிறது. அதுதான், 'அமைதி.' உயிர்த்த ஆண்டவர் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' எனத் தம் சீடர்களை வாழ்த்துகிறார். அமைதி (கிரேக்கத்தில், எய்ரேன், எபிரேயத்தில் ஷலோம்). அமைதி என்பது விரிசல்கள், பிளவுகள், உடைதல் இல்லாத ஒருங்கிணைந்த நிலை.

யாராவது இறந்தால், 'ரெஸ்ட் இன் பீஸ்' (ஆர்.ஐ.பி) எனச் சொல்கிறோம். இறந்தோருக்கு அல்ல, இன்று வாழ்வோருக்கே பீஸ் ('அமைதி') தேவைப்படுகிறது. ஆக, 'லிவ் இன் பீஸ்' என இயேசு நம்மை வாழ்த்துவதையே, நாம் ஒருவர் மற்றவருக்கு அறிவிப்போம்.

இயேசுவின் எதிரிகள் அவருடைய கல்லறையில் இன்னொரு 'ஆர்.ஐ.பி' எழுதினார்கள்: 'ரைஸ் இஃப் பாஸ்ஸிப்ள்'. 'இது எனக்குச் சாத்தியம்' என அவர் எழுந்தார்.

கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன் என்பதே (காண். பிலி 3:10) பவுலடியாரின் பேரார்வமாக இருந்தது. இதுவே நம் பேரார்வமாக இருக்கட்டும். இன்று நாம் கொண்டாடுகிற ஒளி, தண்ணீர், புதிய வாழ்வு ஆகியவை அனைத்தும் உயிர்ப்பின் நிகழ்வை நமக்கு நினைவுறுத்துவதோடு உயிர்ப்பை நம் வாழ்வியல் அனுபவமாக மாற்றட்டம். இறப்புக்குப் பின்னர் மட்டுமல்ல, இறப்புக்கு முன்னும் உயிர்ப்பு சாத்தியம்.

நம் பயணம் கல்லறையை நோக்கியதாக அல்ல, கலிலேயாவை நோக்கியதாகவே இருக்கட்டும்!

அங்கே அவர் நமக்கு முன் சென்றுகொண்டிருக்கிறார்.

ஆமென்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்