மனம் ஒரு கோவில் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் மனம் ஒரு கோவில். அந்த கோவில் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். பல சமயங்களில் நமது மனம் தூய்மையாக இல்லாமல் குப்பைக்கூளங்களால் அதாவது பகைமையாலும், வெறுப்புணர்வாலும், கவலைகளாலும் நிரம்பி வழிகின்றது. அப்படி நிரம்பி வழிகின்றபோது நம்மால் வேறு எதைக்கொண்டும் நிச்சயம் பாத்திரத்தை நிரப்ப இயலாது. அப்படியானால் முதலில் நமது பாத்திரத்தை தூய்மையாக்க வேண்டும். பாத்திரத்தில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்படும்போது நமது பாத்திரம் வெறுமையானதாகவும், தூய்மையானதாகவும் மாறும். குப்பைகளை யார் அகற்றுவது? நாம் தானே அகற்ற வேண்டும். எனவே அதற்கான முயற்சியில் நாமே ஈடுபட்டு மனதை வெல்வோம். மனம் ஒரு மகத்தான ஆற்றல். அந்த ஆற்றலை நாம் நன்கு பயன்படுத்த தெரிய வேண்டும். மனம் என்னும் மந்திரக்கோலை கட்டுப்படுத்தி, நமது தேவைகளையும் மட்டுப்படுத்தி வாழ்ந்தால் நிச்சயம் வெற்றி நமதாகும்.  

ஒரு இளைஞன் ஒருவன் வெகுநாட்களாக மிகுந்த கவலைக்குள்ளாகி தான் என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்து திரிந்தான். வெகுநாட்களுக்கு பிறகு ஒரு முனிவரை சந்தித்து தனது கவலையை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி முனிவரை நோக்கி காட்டிற்கு பயணமாகிச் சென்றான். முனிவர் தனிமையான இடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். மெல்ல அவர் அருகில் சென்று முனிவரே தங்களை காண வந்துள்ளேன் என்றான். உடனே முனிவர் அவன் வந்ததற்கான காரணத்தை கேட்டார். எனக்கு மிகவும் கவலையாக உள்ளது, அது எனக்கு என்ன என்று தெரியவில்லை, அதனை போக்க ஒரு வழி சொல்லுங்கள் என்றான். அதற்குமுன் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றான். உடனே முனிவர் சொல் என்றார். இந்த காட்டில் 
 காற்றும், பெருங்கூச்சலும் உங்களை சூழ்ந்திருக்கும் போது எப்படி உங்களால் தியானம் செய்ய முடியும்? அப்படியானால் நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்பது பொய்தானே? என்றான். உடனே முனிவர் உன் மனம் முழுவதும் மற்றவர்களை குறைகூறும் எண்ணமும், கெட்ட சிந்தனையும்தான் இருக்கின்றது. அதனால்தான் நீ கவலையில் இருக்கிறாய். முதலில் அதை மாற்று. உன் மனம் உன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். நீயும் நலமோடு வாழ்வாய் என்று சொல்லி அனுப்பி வைத்தார். நாமும் நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கிவிட்டு அதனை தூய்மைப்படுத்த முயல்வோம். அதுவே நம்மை புனித பாதைக்கு இட்டுச்செல்லும். 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

Daily Program

Livesteam thumbnail