உலக மூங்கில் தினம் | veritastamil

உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18

 

செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.

 

புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது.

 

மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் 10 பில்லியன் டாலர் மூங்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், சீனா சுமார் 50% பங்கைப் பெற்று முன்னணியிலுள்ளது. 2015-ம் ஆண்டு இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6,505 கோடி. அது 2015-ம் ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாக இந்திய விவசாயத்துறை அமைச்சகம் கூறுகிறது.

 

வீட்டில் இடம் இருந்தாலும் மூங்கில் வளர்க்கலாம். அதற்காக முள்ளில்லா மூங்கில் ரகங்கள் கிடைக்கின்றன. சூழலுக்கு இத்தனை பயன்களைத் தரும் மூங்கிலைப் போற்ற வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.