இயேசுவின் சிலுவையைச் சுமப்போர் அஞ்சுவதில்லை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 செப்டம்பர் 2024 
பொதுக்காலம் 22 ஆம் வாரம் –வியாழன்
1 கொரி 3: 18-23
லூக்கா 5: 1-11

 
இயேசுவின் சிலுவையைச் சுமப்போர் அஞ்சுவதில்லை!


முதல் வாசகம்.

 
இவ்வாசகத்தின் வாயிலாக,  கடவுளின் ஞானம் மனித ஞானத்திலிருந்து மிகவும் வேறுபட்டது மற்றும் மேலானது என்பதை பவுல் அடிகள் நினைவுபடுத்துகிறார்.   ‘எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் அவர்களே மடையராவர் என்றும், இக்கூற்றுக்கு ஆதாரமாக,  அவர்   எசாயா 5:21-ல் காணப்படும் இறைவார்த்தையைத் தொட்டு பேசியதோடு, யூதர்களின் மடமைதான் இயேசுவை சிலுவையில் கொன்றது என்கிறரர். 

தொடர்ந்து,   இவ்வுலக ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என்றும்,  இதற்குச் சான்றாக ‘மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்’ எனும் திபா. 94:11 வசனத்தைப்  மேற்கொள் காட்டுகிறார்.

கொரிந்திய கிறிஸ்தவர்கள்   இந்த உலக ஞானத்தை விடுத்து இறைஞானத்தில்   நம்பிக்கைக்கொள்ள வேண்டும் என்றும்  அவர்கள் உலக மக்களை நம்புவதை விட கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி இம்மடலை வரைகிறார்.   

 
நற்செய்தி.


கெனசரேத்து ஏரிக் கரையில் இயேசு போதிக்கிறார். இந்த ஏரியைப் பொதுவாக கலிலேயா கடல் என்று அழைப்பதுண்டு.  அங்கே அவர் இரண்டு படகுகளைப் பார்த்தார். அவற்றில்  ஒன்று சீமோன் பேதுருவுக்கு சொந்தமானது.  அப்படகில்  அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

போதனைக்குப் பிறகு, சீமோனும் அவரது நண்பர்களும் ஏற்கனவே இரவு முழுவதும் பாடுபட்டும் மீன்கள் அகப்படாமல் சோர்ந்து போயிருந்தனர்.

இயேசு பேதுருவிடம்,   ஆழமான தண்ணீருக்குள் சென்று மீண்டும் வலைகளை வீசுமாறு    கூறுகிறார். பேதுருவும்  அரைகுறை மனதுடன்,  இயேசுவின் வேண்டுகோளுக்குக் கீழ்ப்படிந்து ஆழக்கடலில் வலையை வீசிகிறார். பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் நண்பர்களுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள்.    இந்த அதிசயத்தைக் கண்டு வியப்பும், தாழ்மையும் அடைந்த பேதுரு, இயேசு யார் என்பதை உணர்ந்து, தகுதியற்றவராக, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார்.

இயேசுவோ, மறைமொழியாக பேதுருவைத் தட்டிக்கொடுத்து, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அந்த நிமிடத்திலிருந்து இயேசுவைப் பின்தொடர்கிறார் என்று லூக்கா கூறுகிறார்.

சிந்தனைக்கு.


இன்றைய வாசகங்களின் வழி,  நாம் ஊனக் கண்கொண்டு பார்ப்பதிலும் செயல்படுவதிலும் இறைவனின் செயல்களைப் புரிந்துகொள்வது கடினம் என்பது தெரிய வருகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அதுபோல நாம் எவ்வளவுதான் புத்திசாலியாகவும் அறிவில் சிறந்தவராகவும் இருந்தாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு. இதற்கு மாறாக இறை ஞானமிக்கவராக இருப்பதற்கு கடவுளின் தயவும் அருளும் தேவை. 
  
நாம் அனுதினமும் இறைவார்த்தையின் ஒளியில் நடக்கும் போது உலகத்தாருக்கு அது மடமையாகத் தோன்றும். நம்மை ஆண்டவர் ஆழமான பகுதியில் நமது கவனத்தைச் செலுத்த அழைக்கிறார். உலகப் பார்வையானது குறுகியப் பார்வை.  

நற்செய்தியில் மற்றொரு முக்கியமான பகுதியை லூக்கா குறிப்பிட்டுள்ளார், ஆம், இயேசுவின் வல்லமையை உணரந்த பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து,  “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார்.  மனம் வருந்திய பேதுருவை நோக்கி,  “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று இயேசு அழைப்பைவிடுக்கிறார்.

பேதுருவின் பதிலான  “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்பதில் முதல் பகுதியான ,  ‘ஆண்டவரே, நான் பாவி’ என்பததை இயேசு ஏற்கிறார். ஆனால் ‘ நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்ற பேதுருவின் விருப்பத்தை புறந்தள்ளி, அவரை தமது மீட்புப்பணியில் இணைக்கிறார்.

பேதுரு இயேசுவின் காலில் விழுந்து மன்னிப்புக்கு மன்றாடும் அளவுக்கு அவர் என்ன குற்றம்   செய்திருக்கக்கூடும் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர் பல ஆண்டுகளாக  ஏதோவொரு  பாவத்துடன் போராடியிருக்கலாம். அது இயேசுவுக்கு மட்டுமே வெளிச்சம். இயேசு அவருக்குத் தயவு காட்டியதோடு அரவணைக்கிறார். லூக்கா அவரது நற்செய்தியில் அதிகாரம் 15-ல், காணாமற்போன மகன் உவமையில், தந்தை மகனை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றதை இங்கேயும் காண்கிறோம். பேதுரு புதுவுரு பெறுகிறார். 

நாம் ஒவ்வொருவரும் நம் இறைவனை இப்படித்தான் சந்திக்க வேண்டும். நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும். நாம் அவரில்  ஆழ்ந்த கவனம் செலுத்துவதோடு, அவரது அழைப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.   இந்த பணிவான பண்பு நம்மில் இருக்கும்போது, "அஞ்சாதே" என்று இயேசுவும் நம்மிடம் கூறுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். 

 
இறைவேண்டல்.

‘அஞ்சாதே’ என்று என்னை அழைக்கும் ஆண்டவரே, என்  இதயத்தின் ஆழத்தில் உம்மை கண்டுகொள்ளவும், நீர் விரும்பி அழைக்கும் பணிக்கு என்னை அர்ப்பணிக்கவும்  என்னை உருமாற்றுவீராக. ஆமென்  


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments