ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்தும் ‘ஆய்வகங்களாக’ மறைமாவட்டக் குழுக்கள் செயல்பட வேண்டும்: FABC | VERITAS TAMIL
ஆசியாவின் உள்ளூர் திருஅவைகள் ஒன்றிணைந்த பயணத்தின் (Synodality) பார்வையை நடைமுறைச் செயல்பாடுகளாக மாற்றுவதற்கு, தேசிய அளவிலும் மறைமாவட்ட அளவிலும் செயல்படும் ஒன்றிணைந்த பயணக் குழுக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) இணைச் செயலர் அருட்தந்தை என்ரிக்கோ இமானுவேல் அயோ தெரிவித்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற ஒன்றிணைந்த பயணப் பயிற்சி அமர்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி, பான் பூ வான் மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தின் ஜோசப் நித்தாயோ மாநாட்டு அரங்கில் நடைபெற்ற “தேசிய மற்றும் மறைமாவட்ட ஒன்றிப்புப் பயணக் குழுக்களின் பங்கு” என்ற தலைப்பிலான பிற்பகல் அமர்வில் அருட்தந்தை அயோ உரையாற்றினார். ஆசியாவின் 21 நாடுகளைச் சேர்ந்த 61 பிரதிநிதிகள் இப்பயிற்சி அமர்வில் பங்கேற்றனர்.
ஒன்றிணைந்த பயணம் குறித்த திருஅவை மன்றத்தின் நடைமுறைப்படுத்தும் கட்டத்தில், ஒன்றிணைந்த பயணக் குழுக்களின் பங்கை விளக்கிய அருட்தந்தை அயோ, திருஅவை என்பது “திருப்பணிக்கான ஒன்றிணைந்த பயணத் திருஅவை” என்றும், கிறிஸ்துவுடன் இணைந்து, இறையாட்சியை நோக்கிப் பயணிக்கும் சமூகமாகவும் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவை மன்றத்தின் போது வழங்கிய சிந்தனைகளை மேற்கோள்காட்டிய அவர், மனித விருப்பங்களோ அல்லது கருத்தியல் நோக்கங்களோ அல்ல, தூய ஆவியாரே ஒன்றிணைந்த பயணத்தின் மையமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“திருஅவை மன்றத்தின் முதன்மையான செயல்பாட்டாளர் தூய ஆவியாரே” என்று 2023ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் கூறியிருந்தார். தூய ஆவியாரின் வழிநடத்துதல் இல்லையெனில், ஒன்றிணைந்த பயணத் திருஅவை மன்றம் வெறும் நாடாளுமன்றக் கூட்டத்தைப் போன்றதாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
நடைமுறையில் கற்றுக்கொள்ளும் காலம்
ஒன்றிணைந்த பயணத்தின் நடைமுறைப்படுத்தும் கட்டம் “செய்து கற்றுக்கொள்ளும் காலமாக” அமைய வேண்டும் என்று அருட்தந்தை அயோ குறிப்பிட்டார். திருஅவை வாழ்வை மேலும் ஒன்றிணைந்த பயணத் தன்மை கொண்டதாக மாற்றவும், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு ஆதரவளிக்கவும் புதிய நடைமுறைகளையும் அமைப்புகளையும் உள்ளூர் திருஅவைகள் ஆராய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இதில் இறையியல் மற்றும் திருச்சட்ட ஆய்வு, ஒவ்வொரு உள்ளூர் சூழலுக்கும் ஏற்ற நடைமுறைகளைத் தேர்ந்தறிதல், இறைமக்கள் ஒன்றிணைந்து நடக்கவும் சிந்திக்கவும் வாய்ப்புகளை உருவாக்குதல், மேலும் ஒன்றிணைந்த பயண மாற்றத்தை நடைமுறையில் ஏற்படுத்தும் பயிற்சிப் பாதைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். மறைமாவட்ட மற்றும் கிழக்கத்திய திருஅவை ஆயர்களின் பங்குக்கும் அவர் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.
ஒன்றிணைந்த பயணத்தில் ஆர்வத்துடன் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், தயக்கம் கொண்டவர்கள் அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் உள்ளடக்கிய வகையில், திருஅவையின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பையும் ஆயர்கள் ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அருட்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்கள், மறைமாவட்டத்தின் பங்கேற்பு அமைப்புகள் மற்றும் ஒன்றிப்புப் பயணக் குழுக்களுடன் இணைந்து, திருஅவையின் அருட்பணிச் சேவைக்கான கூட்டுப் பொறுப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குருத்துவ மையப்படுத்தலுக்கு எதிராக
அதேவேளை, திருநிலையினர் ஆதிக்கம்(Clericalism) என்பது திருஅவையில் ஒன்றிப்பு மற்றும் பங்கேற்புக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக அருட்தந்தை அயோ அவர்கள் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பாலியல் மற்றும் பிற முறைகேடுகள், மேய்ப்புப்பணி தலைமைத்துவம், திட்டமிடல், நற்செய்தி அறிவிப்பு மற்றும் மனித மாண்புக்கான மதிப்பு ஆகிய துறைகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மறைமாவட்ட ஒன்றிணைந்த பயணக் குழுக்கள் “ஒன்றிணைந்த பயணத்தின் ஆய்வகங்கள்” என்று அவர் வர்ணித்தார். செவிமடுத்தல், பகுத்தறிதல், பங்கேற்பு மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை உள்ளூர் சூழல்களில் நடைமுறையில் செயல்படுத்தி அனுபவிக்கக்கூடிய இடங்களாக இக்குழுக்கள் அமைய வேண்டும் என்று அவர் கூறினார். ஒன்றிணைந்த பயணத்தின் இயக்கத்தை ஊக்குவித்தல், பயிற்சிக்கான கருவிகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குதல், பல்வேறு திருஅவைச் சூழல்களில் செயல்படும் ஒன்றிணைந்த பயணக் குழுக்களை இணைத்தல், ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் உள்ளூர் செயல்பாடுகளின் பயன்களைத் தொகுத்தல் ஆகியவை இக்குழுக்களின் முக்கியப் பணிகளாகும்.
பங்கேற்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு
ஒன்றிணைந்த பயணக் குழுக்களையும் ஏற்கனவே செயல்பட்டு வரும் மறைமாவட்ட பங்கேற்பு அமைப்புகளையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அருட்தந்தை அயோ விளக்கினார்.
ஒன்றிணைந்த பயணக் குழுக்கள், திருஅவை மன்றத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் மேய்ப்புப்பணி முன்னுரிமைகளைப் பகுத்தறிதல், அமைப்புகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளைப் புதுப்பித்தல் போன்ற பணிகளில் பங்களிக்கின்றன. அதேவேளையில், திருச்சட்டத்தின் அடிப்படையில் பங்கேற்பு அமைப்புகள் தங்களுக்குரிய ஆலோசனை மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புகளை மேற்கொள்கின்றன. எனவே, பணிகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதையும் குழப்பத்தையும் தவிர்ப்பதற்காக, இவ்விரு அமைப்புகளுக்கும் இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுநிலையினர் ஆண்கள் மற்றும் பெண்கள், அருட்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோரை உள்ளடக்கிய பல்வகைமையான ஒன்றிணைந்த பயணக் குழுக்கள் மறைமாவட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல்வேறு பணித்துறைகள், அருட்கொடைகள், வயதுப் பிரிவுகள், பண்பாடுகள் மற்றும் உருவாக்கப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுக்களில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டு திருஅவைப் பேரவையை நோக்கிய பயணம்
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருஅவைப் பேரவையை நோக்கிய நான்கு கட்டப் பயணத்தையும் அருட்தந்தை அயோ விளக்கினார்.
2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் உள்ளூர் திருஅவை அளவில் கடந்த அனுபவங்களை மீள்பார்வை செய்தல்;
2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தேசிய மற்றும் பிராந்திய அளவில் அவற்றை விளக்கிப் புரிந்துகொள்ளுதல்;
2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்ட அளவில் அடுத்த கட்டத்திற்கான வழிகாட்டுதலை உருவாக்குதல்;
2028 அக்டோபரில் உலகளாவிய திருஅவையுடன் இணைந்து கொண்டாடுதல்
என்ற நான்கு கட்டங்களில் இப்பயணம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
ஆசிய திருஅவைகளைப் பொறுத்தவரை, இந்தத் தொடர்ச்சியான ஒன்றிப்புப் பயணத்தில் தேசிய மற்றும் மறைமாவட்ட ஒன்றிப்புப் பயணக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அருட்தந்தை அயோ வலியுறுத்தினார்.
ஆசியக் கண்டத்தின் பல்வேறு மேய்ப்புப்பணி மற்றும் சமூகச் சூழல்களுக்கு ஏற்ற வகையில், ஒன்றிப்புப் பயணத்தின் பகுத்தறிதல்களை நடைமுறைச் செயல்பாடுகளாக மாற்றுவதற்கு இக்குழுக்கள் துணைபுரிய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
