எல்லாம் கடவுள் பாத்துப்பாரு | Ashwin


"தாயி உங்கிட்ட ஒரு இருபதாயிரம் இருக்குன்னேல அத எடுத்துட்டு வாயேன்"

"எதுக்குங்க இப்போ அது?"

"புதிய கோயில் கட்டுராங்கல்ல அதான் எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு காசு கொடுக்கணுமுன்னு சாமி பூசையில சொன்னாரு அதுக்குதான்...."

"பொண்ணு தல பிரசவத்துக்கு வந்துருக்கா அவளோட ஆசுபத்திரி‌ செலவுக்குன்னு சேத்து வச்ச காசு அது அத போயி கேட்க்குறீங்க"

"நாம கடவுளுக்கு கணக்கு பாக்காம கொடுத்தாதான் நம்மளோட கஷ்டத்த கடவுள் பாத்துப்பாருனு போனவாரம் சாமி பிரசங்கத்துல சொன்னத நீ மறந்துட்டியா? "

"நம்ம கையில இருக்குறதே அவ்வளவு தான் அதபோயி கேட்குறீங்க? நாளைக்கே ஏதாச்சும் ஆச்சுனா என்ன பண்ணுறது?"

"எல்லாம் கடவுள் பாத்துப்பாரு பொண்ணுக்கு எதுவும் ஆகாது நீ மசமசனு நிக்காம சீக்கிரம் போயி காச எடுத்துட்டு வா..."

(உள்ளே சென்ற சில நிமிடங்களில் கையில் காசோடு வந்தாள் முத்தம்மா)

"இந்தா புடியுங்க இருந்ததெல்லாம் கொடுத்துட்டேன் இனி ஏதாச்சும்னா நீங்கதான் பாத்துக்கணும்"

"அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு நான் போயிட்டு வந்துடுறேன்"

"ஆ... ஜயோ...அம்மா.... வயிறு வலிக்குதும்மா என்னால முடியல"
(என வீட்டினுள் இடுப்பை பிடித்துக்கொண்டு கதறினாள் சோபியா)

"ஏங்க வண்டிய கூப்பிடுங்க உடனே பொண்ண ஆசுபத்திரிக்கு கொண்டு போணும்..."

"பாத்து மெதுவா வா தாயி, பாத்து பத்திரமா வண்டியில ஏறுங்க..தம்பி பத்திரமா கவர்மெண்ட் ஆசுபத்திரில இவங்கள விட்டிருப்பா..."

"ஏங்க நீங்க வரலயா?"

"நீங்க போங்க நான் போயி காச கொடுத்துட்டு ஊருல கலெக்ஷன் போணும்னு தலைவர் கூப்பிட்டாரு அவரையும் பாத்துட்டு நேரா அங்கயே வந்துடுறேன்..."

"ஏங்க இப்போ போயி இப்படி பேசுறீங்க, இந்த மாதிரி நேரத்துல கூடமாட ஒத்தாசைக்கு ஒரு ஆம்பள இல்லேனா எப்படி"

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது எல்லாம் கடவுள் பாத்துப்பாரு நான் சாயங்காலமா வர்றேன் நீ பாத்து பத்திரமா புள்ளைய கூட்டீட்டு போ"

(டிரைவர் வண்டியை மருத்துவமனைக்கு செலுத்த ராஜன் காசை எடுத்துக்கொண்டு சர்ச்சுக்கு கிளம்பினான்)

"வாப்பா ராஜா சொன்ன நேரத்துக்கு சரியா வந்துட்ட நம்ம கேசியர் கூட மேலத்தெரு பக்கமா கலெக்ஷனுக்கு போயிட்டு வா"

"சரிங்க தலைவரே, இந்தாங்க எங்களோடது"

"பரவாயில்லையேயா... கஷ்டத்துல இருந்தாலும் கடவுளுக்கு கணக்கு பார்க்காம கொடுக்குற உன் நல்ல மனசுக்கு கடவுள் உன்னயும் உன் குடும்பத்தையும் நல்லா வச்சுப்பாரு

(என தலைவர் கூற காசை அவரிடம் கொடுத்துவிட்டு கையில் நோட்டு புத்தகம் எடுத்துக் கொண்டு இருவரும் கால்நடையாக கலெக்ஷனுக்கு புறப்பட்டனர்)

"காலையில இருந்தே நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது வாப்பா ராஜா போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாம்"

"சரி வாங்கண்ணே"

"எப்பா இரண்டு டீ போடு"

(இருவரும் அமர்ந்து டீக்காக காத்திருக்க, "காப்பார் இயேசு காப்பார்" என ராஜனின் அலைப்பேசி அலறியது)

"ஹலோ சொல்லுமா"

"என்னங்க சீக்கிரம் வாங்க டாக்டர் என்னன்னமோ சொல்லுறாரு எனக்கு பயமா இருக்கு"

"என்ன தாயி என்ன சொல்லுற"

"குழந்தை கழுத்துல கொடி சுத்தி இருக்காம் உடனே ஆப்புரேசன்‌ பண்ணணுமாம் நேரம் போக போக இரண்டு உசிருக்கும் ஆபத்தாம் உடனே வேற ஆசுபத்திரிக்கு கொண்டு போக டாக்டர் சொல்லுறாங்க"

"பயப்படாதமா எதுவும் ஆகாது கடவுள் நம்மள சோதிக்க முதல்ல கஷ்டத்த கொடுப்பாரு அப்புறம் அவரே நம்மள காப்பாத்திடுவாரு, நான் போயி நம்ம ஃபாதர் கிட்ட நமக்காக ஜெபம் பண்ண சொல்லீட்டு சீக்கிரமா வந்துடுறேன்"

(கேசியரிடம் விவரத்தை கூறிவிட்டு பாதிரியாரை சந்தித்து ஒருமணிநேரம் அவரோடு தன் மகளுக்காக ஜெபித்தபின் புனித நீரை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் ராஜன்)

"மாப்புள நீங்க எப்போ வந்தீங்க? பாப்பாவ பாத்தீங்களா டாக்டர் ஏதாச்சும் சொன்னாரா?"

(என ராஜன் கூறியதை கேட்டதும் கோபமாய் ராஜனை நோக்கி விரைந்து வந்து சட்டை காலரை கையில் பிடித்து கொண்டார் மருமகன்)

"யோவ் நீ எல்லாம் ஒரு அப்பனாயா நீ இருக்குற நம்பிக்கையில தானேயா என் பொண்டாட்டிய அனுப்பி வச்சேன், பாவி நீ என்னடானா கடவுள நம்புறேனு சொல்லி சொல்லி அவள கொன்னுட்டியேடா"

"என்ன மாப்புள என்ன சொல்லுறீங்க,"

(உடல் நடுங்க ராஜனின் குரல் சுருங்கியது)

"கண்ணுமுன்ன நிக்காம போயா"

(கண் வியர்க்க மனைவியை நோக்கி விரைந்தான் ராஜன்)

"முத்தம்மா மாப்புள ஏதேதோ சொல்லுறாங்க எனக்கு பயமா இருக்கு நீயாச்சும் சொல்லு நம்ம பொண்ணுக்கு என்னாச்சு?"

"படிச்சு படிச்சு சொன்னேன் அந்த காச எதுவும் பண்ணாதனு அது கையில இருந்திருந்தா இப்போ நம்ம பொண்ண வேற ஆசுபத்திரிக்கு கொண்டு போயி உசிரயாச்சும் காப்பாத்தீருக்கலாமே, கோவில் கட்ட போறோம் குடில் கட்டப்போறோமுன்னு அப்பாவி உசிர கொன்னுட்டியேயா பாவி"

(என அழுதுகொண்டே அவன் சட்டையை பிடித்தாள் முத்தம்மா)

"எல்லாம் கடவுள் பாத்துப்பாரு கடவுள் பாத்துப்பாருனு சொன்னியேயா அங்க பாரு நம்ம பெத்தது செத்து கிடக்குது அந்த கடவுள இனியாச்சும் வந்து பாத்துட்டு போகச் சொல்லு "

என கதறிய தாயின் கண்ணீரின் முன் காணாமல் போய்விட்டான் அந்த கடவுள்.

இக்காலத்தில் கண்களால் நிதம் காண்பவர்களை நம்புவதை விட கண்ணுக்கே தெரியாத கடவுளை கண்களை மூடிக்கொண்டு நம்புகின்றோம். கண்களுக்கு முன் கஷ்டப்படுபவர்களுக்குக் காசு கொடுப்பதற்கு தயங்கும் நாம் கண்களுக்கே புலப்படாத கடவுளுக்கு கணக்கில்லாமல் வாரி இரைக்கின்றோம், ஒதுங்க ஓலைக்குடிசை கூட இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்காக ஒரு மண்குடிசை கட்டிக் கொடுக்கத் தயங்கும் நாம் கற்சிலை கடவுளுக்குக் கோடிகளில் மாளிகை செய்கின்றோம். எந்தக்கடவுளும் இங்கு காசு கேட்கவில்லை எந்தக்கடவுளும் அவர் இருக்க மாளிகை கேட்கவில்லை, எந்தக்கடவுளும் அவர்கள் பெயரால் யாரையும் அடித்துச் சாகச் சொல்லவில்லை, அவர்கள் விதைத்துச் சென்றது அன்பை மட்டுமே, ஆதலால் மதத்தை நேசிப்பதை குறைத்து மனிதத்தை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். நாளைய தலைமுறையாவது நலமுடன் வாழட்டும்....

 

- அஸ்வின்