உலகில் மௌனம்தான் மிகப்பெரிய ஆயுதம் | Silent
ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து நிற்கும் நாடு சீனா. சீனாவில் இருந்து பல யாத்ரீகர்கள் அன்றே வெளி நாடு சென்றனர். மார்க்கோபோலோ போன்றவர்கள் சீனாவிற்கும் சென்றனர். பட்டு, வெடிமருந்து, பீங்கான், காகிதம், சரிகை சீனா உலகிற்கு தந்தவை என எத்தனையோ.இத்தனைப் பெருமைமிக்க சீனாவின் பண்டைய வரலாற்றிலும், அதன் தத்துவ வரலாற்றிலும் நாம் அறியப்பட வேண்டிய ஒரு பெயர் 'கன்பூஷியஸ்' எனலாம். சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், புத்தர், இயேசு என்பார்போல இவர் சிறந்த தத்துவ, மதவாதியாக விளங்கியவர். பண்டைய சீனப் பெருஞ் சுவர் போல, பெருமனிதராய் நாம் இவரைக் கருதலாம்.
இவரது காலம் கி.மு 551-479 ஆகும். இவர் சீனாவின் ஷண்டங் மாநிலத்தில் பிறந்தவர். இவர் இளவயதில் வரலாறு கற்றார். கூடவே கட்டடக்கலையும் கற்றார். ''டாயிசம்' என்ற சீனத் தத்துவத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாகவே, பிறகு இவர் தத்துவஞானியாக மாறினார்.
ஆனபோதும் முதலில் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியராகவே விளங்கினார். அதோடு சீனாவின் கதை, கவிதை, புராணம் எனவும் சேகரித்து நூலாக்கினார். அதில் இவரது படைப்புகளும் கூட இடம் பெற்றன. அவை இன்றும் மிகச் சிறந்த இலக்கியமாக கருதப் படுகிறது. Book of odes, The book of Tradition, The book of Rites, The book of changes என்பன குறிப்பிடத் தக்கன. இவர் வாழும் காலத்திலேயே இவர் கருத்துக்கள் நல்ல செல்வாக்குப் பெற்றன. அதோடு இவரின் மறைவுக்குப் பின்னும் இவர், கருத்துக்கள் நிலைத்தன. புத்தமதம், இனப்புரட்சி, கம்யூனிசம் என்று எத்தனை மாறுதல்கள் வந்தாலும், சீன மக்களிடையே இவர் கருத்துக்கள் அழியா செல்வாக்கு பெற்றது. இவரது கருத்தும், கொள்கையும் சேர்ந்து, இவை ஒரு மதமா கவே அங்கீகரிக்கப்பட்டது. இது 'கன்பூஷியசிசம்' என்று கூறப்படுகிறது. இன்றும் சீனாவில் இது பின்பற்றப்படுவது இவர் சாதனைக்கு சான்றாகும்.
கன்பூஷியசிசம் என்பது ஒரு மதம் என்பதைவிட, அது ஒரு நீதி என்று கூறலாம். அந்த அளவிற்கு இவரின் போதனையும், தத்துவமும் அமைகிறது.
கன்பூஷியஸ் என்ற பெயர் லத்தீன் மொழிப் பெயர். இவருக்கு சீனமொழியில் ‘குங்-பூ-ஷே' என்று தான் பெயர். இவர் பிறந்தது ஓர் ஏழைக்குடும்பத்தில். இவர் காலத்தில் சீனாவில் வறுமை நிலவியது. பல குற்றங்களும் கூட இவர் காலத்தில் மலிந்திருந்தன எனலாம். எனவே இவர் ஒரு சீர்திருத்தவாதி (As a reformer)யாகவும் சொல்லப்பட்டார். அதில் வெற்றியும் பெற்று மனிதர்களை மாற்றினார் எனலாம். அவர்களை மாற்றி, திருத்தி, நல்வழிப்படுத்த இவர் கருத்துக்கள் துணையாகியது.
இவர் சீனா முழுதும் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பல்வகைப்பட்ட மக்களை யும் சந்தித்தார். மக்கள் மனதில் அவை பதிந்தன. பல சீடர்களும் இவருக்கு சேர்ந்தனர். பிறகு சீடர்களும் இவரது கருத்தை பரப்பினர்.
சீனாவில் ஒரு மாகாணத்தில், இவர் கொஞ்சகாலம் 'நீதிபதி'யாகவும் பதவி வகித்தார். நல்ல நீதி கிடைக்க இவர் இக்காலத்தில் பாடுபட்டார். அதோடு சிலகாலம் 'அமைச்சர்' ஆகவும் பணிசெய்யும் வாய்ப்பு பெற்றார்.
சீனாவில் புத்தரின் தத்துவம் பெரிய அளவில் பரவியபோதும், இவரது தத்துவத்தை அது அழிக்க வில்லை என்பதே இவரின் தனிச்சிறப்புக்கு சான்றாகும்.
"இருள் இருள் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருப்பதைவிட, ஏற்றிவை ஒரு சிறிய மெழுகுவர்த்தியை" -இது இவர் சொன்ன நற்கருத்து. அதுபோலவே அன்றைய சீன மக்களின் இருள் தீர, இவரின் தத்துவ போதனை மெழுகுவர்த்தியாக இருந்து ஒளி தந்தது என துணிந்து கூறலாம்.
‘உலகில் மௌனம்தான் மிகப்பெரிய ஆயுதம்'. இது இவர் சொன்ன அழகான வாசகம். "சரியானது எது என்று உணர்ந்தபின்பும் அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்' இது இவரது அழகான பொன்மொழி.