முத்திப்பேறுபெற்ற ராணி மரியா விழா
முத்திப்பேறுபெற்ற ராணி மரியா விழா:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் அருகே
புல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் எலிஸ்வா. இவரது ஏழு குழந்தைகளில் 2 வது
குழந்தையாக பிறந்தவர் ராணி மரியா. பள்ளி படிப்பு முடித்ததும் கான்வெண்டில்
சேர்ந்தார். அருள்சகோதரியாக ஆசிரியைப் பணியை தொடர்ந்தார். சமூக
சேவையில் நாட்டம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளில் சமூக பணிகளை
ஆற்றிவந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் ஏழை, எளிய
மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுப்பட்டார். குறிப்பாக நிலபிரபுக்களின் கீழ்
பணிபுரியும் நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும்,
அவை கிடைப்பதற்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இதனால்
ஆத்திரமடைந்த சமூக விரோத கும்பல் அருள்சகோதரி ராணி மரியாவை
படுகொலை செய்யதிட்டமிட்டனர். அதன்படி கடந்த 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி
25 ஆம் தேதி மத்தியபிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் பஸ்சில்
பயணம் செய்து கொண்டிருந்தபோது சமுந்தர்சிங் என்பவர் 50க்கும்
மேற்பட்டமுறை கத்தியால் தாக்கி படுகொலைசெய்தார். இதில் கைது செய்யப்பட்ட
சமுந்தர்சிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சமாந்தார் சிங் சிறைக்குச் சென்று ஏழு வருடங்கள் ஓடிவிட்ட
நிலையில் 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் அவரைப் பார்க்க பார்வையாளர்கள்
வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. யார் அந்த பார்வையாளர்கள்? என சமாந்தார்
கேட்க, ‛ராணி மரியாவின் குடும்பத்தினர்’ என பதில் சொல்லப்பட்டது.
வார்டன்கள் வற்புறுத்திய பிறகு அவர்களைச் சந்திக்க வந்தார். அங்கு ஆறு
கன்னியாஸ்திரிகள் அமர்ந்திருந்தனர். அன்று ரக்ஷா பந்தன் தினம் என்பதால்
சமாந்தாரின் கைகளில் ராக்கிக் கயிறை கட்டினர். அந்த ஆறு பேரில் ஒருவரான
செல்மி பால் வேறு யாருமல்ல சமாந்தார் சிங்கினால் கொல்லப்பட்ட ராணி
மரியாவின் தங்கைதான். இதைக் கேள்விப்பட்டதும் சமாந்தார் சிங் உடம்பெல்லாம்
நடுங்கியது. 'மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். செய்த
தவற்றை நினைத்து தினமும் வருந்துகிறேன்" என்று உருக்கமாகச்
சொல்லியுள்ளார். “என்றைக்கு உங்களின் தவற்றை நீங்கள் உணர்ந்தீர்களோ,
அன்றே உங்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். அதை உங்களிடம்
சொல்லத்தான் வந்துள்ளோம். நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்" என்று
செல்மி தெரிவித்தார். அன்று இரவுதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிம்மதியாக
உறங்கியதாக சமாந்தார் சிங் பின்னர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அருள்சகோதரி ராணி மரியா இந்திய கத்தோலிக்க
கிறிஸ்தவ திருஅவையின் முதல் பெண் ரத்த சாட்சியாக போற்றப்பட்டு வந்தார்.
அவரை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உயர்த்தினார்.
இந்நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் திருத்தந்தையின் இந்திய தூதர்
2
கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
சமுந்தர்சிங் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் உலகம் முழுவதும் அவரது பெயரில் ஆலயம் கட்டவும்,
பரிந்துரை ஜெபங்கள் செய்யவும் இயலும். ராணி மரியா செய்த அற்புதங்களை
விட, அவரது குடும்பத்தினர் செய்த இக்காரியம் மாபெரும் அற்புதமாக மாறியது.
ராணி மரியாவின் கருணையும் அன்பும் வீண் போகவில்லை.