முதல் அறிவுரை

அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.

1 திமொத்தேயு 2-1.

அனைவருக்காகவும் ஜெபியுங்கள் என்று விவிலியம் கூறுகிறது. இன்று நாம் நம் பிள்ளைகளுக்காக மன்றாடுவோம் . இன்றைய உலகில் பாவம் மலிந்து விட்டது. ஊடகங்கள் வழியாக பாவம் பிள்ளைகளின் உள்ளங்களை பாதிக்காதவாறு இருக்க பிள்ளைகளின் தூய வாழ்வுக்காக வேண்டுவோம்.   இன்றைய நவீன கருவிகள், உணவு வகைகள் , மாசு நிறைந்த காற்று மூலம் அவர்களின் உடல் நலம் கெடாது இருக்க ஜெபிப்போம்.  பிள்ளைகளின் தரமான படிப்புக்காக, கூர்மையான ஞானத்துக்காக ஜெபிப்போம்.  பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக வேண்டுவோம். 

புனித மொனிகாம்மாவின் இடைவிடாத ஜெபத்தால் பெரும் பாவியான அகஸ்தினார் குருவாகி, ஆயராகி நல்ல ஒரு  புனிதர் ஆனார்.  நாமும் ஜெபிப்போம். 

ஆகாரின் கண்ணீர் ஆண்டவர் சமூகம் வரை சென்று இஸ்மவேலை காத்தது.  ஒரு தனி பெரும் மக்களினம் உருவானது. அவர் நம்மை காண்கின்ற கடவுள். நம் அழுகுரல் கேட்டு பதில் தராது இருப்பாரா?  நவீன் பட்டணத்து விதவையின் கண்ணீரை பார்த்து இறந்த மகனை உயிர் பெற செய்தவர். 

தொழுகை கூடத்தலைவர் யாயீரின் வேண்டுதலை கேட்டு அவரது மகளை மரணப்படுக்கையில் இருந்து எழுந்து வர செய்த கடவுள். 

பாவத்தில் அமிழ்ந்து கொண்டிருக்கும் , மரணத்தின் பிடியில் இருக்கும், எதிர்கால பயத்திலிருக்கும்  நம் பிள்ளைகளுக்காக வேண்டுவோம்.

 

ஆண்டவரே, என்னை காண்கின்ற கடவுளே, எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  அவர்கள் உமது வார்த்தையின் படி நடக்க அருள் புரியும்  .நல்ல உடல் சுகத்தையும், ஞானத்தையும், அறிவையும், எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் வலிமையையும், சோர்ந்து போகாது முன்னேறி செல்லும் திறமையையும் அவர்களுக்கு  அருளும். தூய ஆவியால் அவர்களை நிரப்பும் . வழி நடத்தும் . ஆமென்