இசையருவி குமரி அபூபக்கர்

மனிதன் கண்டறிந்த அரிய கலைச்செல்வங்களுள் இசையும் ஒன்று. இசைக்கு ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் அது மனிதர்களை மட்டுமன்றி விலங்குகளையும், தாவரங்களையும்  தன் வசப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. இவ்வரிய இசைக் கலையின் துணையுடன் நன்னெறிகளையும், இறைவனை வழிபடும் நெறிமுறைகளையும் எளிய  முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் இளக்கிய வரலாற்றில் தடம் பதித்த பெரியோர் பலர். தமிழக முஸ்லீம்களும் இதில் விதிவிலக்கல்லவர்.

இசைக்கும், இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்றே இன்றளவும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்கள் இசைக்கு, குறிப்பாக தமிழிசைக்கு செய்த அரிய பல நற்காரியங்கள் மறக்கப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தமிழகத்தில் இசைத் துறையில் ஈடுபாடு கொண்டு அருண்பணியாற்றி வரும் முஸ்லீம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை இசை வடிவில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட அரிய பெரியோர்களில் ஒருவர், குறிப்பிடத்தக்கவர் குமரி அபூபக்கர்.

கர்நாடக இசை, நாட்டுப்புறப் பாடல்கள் என இசையின் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பாடும் திறன் பெற்றவர் இசையருவி அபூபக்கர். தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற கடல் கடந்த நாடுகளிலும், வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும், பள்ளிவாசல்களில் நடைபெரும் மீலாது  விழாக்களிலும், சீறாப்புராணச் சொற்பொழிவுகளிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்துக்களைத் தன் கணீரென்ற குரலால் பரப்பி வருகின்றார். இவர்தம் இஸ்லாமியத்  தமிழிலக்கிய வரலாற்றின் பதிவு இது...

தமிழகத்தின் தென் கோடியில், கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்னம் என்ற கடற்கரை ஊரை அடுத்துள்ள காஞ்சாம்புரம் எனும்  குக்கிராமத்தில் 1937ம் ஆண்டு பிறந்தவர் அபூபக்கர். தந்தை பெயர் மலுக் முகம்மது, தாயார் பெயர் ஆயிஷா பீவி அம்மையார். அபூபக்கர் 3ம் வகுப்பு வரை மலையாள மொழியில்  படித்தவர். தன்னுடைய கேள்வி ஞானத்தாலேயே இவர் பாடகராக உயர்ந்தார். தனது மாமாவும், தமிழ், மலையாளம், அரபி ஆகிய மும்மொழிகளில் வித்தகருமாகிய எம்.பி.வி. ஆசான்  எனும் பாடகரின் நல்லாசியுடன் இறைவனின் அளப்பெரும் கருணையும் இருந்ததால், சிறு வயதிலேயே மேடையேறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

12ம் வயதில் மெளலிது பாடல்களை உச்சஸ்தாயியில் இழுத்து ஓதுவதற்கும் பயிற்சி பெற்று தனது பாடும் திறத்தை மேம்படுத்திக் கொண்டார். இதனால் பல பெரியோர்களின் நல்லாசி  கிடைத்தது. இது இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கேள்விஞானத்தை மட்டுமே மூலதனமாக வைத்து பூவார் நூஹு ஒலியுல்லா தர்காவில் இவர் ஒருமுறை  பாடினார். திருவனந்தபுரத்தில் அக்காலத்தில் கர்நாடக இசையில் பிரபலமான வித்வான்களாக விளங்கியவர்கள் முஹம்மதலி, சாலி சகோதரர்கள். அபூபக்கரது வெண்கலக் குரல்  காணத்தைக் கேட்டு அச்சிறுவனை மனதார வாயார வாழ்த்தினர்.

தாய்மாமாவான எம்.பி.வி. ஆசான் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைக் கேட்டறிந்த அபூபக்கர், அதனை திருவனந்தபுரத்தில் உள்ள பனச்சமூடு, கடையாலமூடு பள்ளிவாசல்களிலும், களியக்காவிளை, பாரசாலை பள்ளிக்கூடம் போன்ற இடங்களிலும் கதாகாலேட்சபமாக நடத்தினார்.

இந்நிகழ்வு அன்னாரது 12 வயது முதல் 18 வயது வரை தொடர்ந்து நடந்து வந்தது. இத்துடன இஸ்லாமிய இலக்கியங்களையும், தனிக் கச்சேரியாகவும் சொற்பொழிவாகவும்,  பாடல்களாகவும் பாடி அனைவரையும் கவர்ந்தார். இத்தகைய இசைப்பணி வாயிலாக சீறாப்புராணம், இராஜநாயகம், திருப்புகழ், ஆயிரம்மசாலா, குணங்குடி மஸ்தான் சாகிபு  பாடல்கள், ஞானப் புகழ்ச்சி, சொர்க்கநீதி, சந்தத் திருப்புகழ், செளந்தர்ய முத்திரை, நபிமார்கள் வரலாறு, முஹயித்தீன் மாலை, செய்யிதத்துப் படைப்போர், யூசுப்லைகா காவியம்,  வேத புராணம், சாரணபாஸ்கரனார் பாடல்கள், கவி மூஸாவின் பாடல்கள் போன்ற தனிப்பாடல்களையும், இலக்கியங்களையும் பாமர மக்களிடையே கொண்டு சேர்த்தவர் அபூபக்கர்.

திருப்பம் தந்த சென்னைப் பயணம்...

தவழும் தென்றலாகச் சென்று கொண்டிருந்த அபூபக்கரின் வாழ்வில் மற்றொரு திருப்பமாக அமைந்தது அவரது சென்னைப் பயணம். அந்நாளில் எந்தக் கலைஞர் மனதிலும் தணியாத தாகமாக எழும் திரைப்பட ஆசை இவரையும் விடவில்லை. திரையிசைப் பாடகராக உருவெடுக்க வேண்டும் என்ற ஆசையில் குமரியிலிருந்து சென்னை வந்தார் அபூபக்கர். பல  திரைப்பட நிறுவனங்களை அணுகி வாய்ப்பு கேட்டார். ஆனால் பாடகராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக நாராயணன் கம்பெனி, பாலாமூவிஸ் ஆகிய நிறுவனங்களில் சிறு சிறு வேலைகளே கிடைத்தன.

இந்த நிலையில் பொதுப்பணித்துறையில் தற்காலிக வேலை கிடைக்கவே அதில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அதேசமயம், பாடும் தொழிலை மட்டும் விட்டு விடாமல் தொடர்ந்துபல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு வந்தார். 1965ம் ஆண்டு மத்திய அரசின் இந்திய மருந்து நிறுவனத்தில் பிட்டர் வேலை கிடைத்தது. அதில்  சேர்ந்தார்.

1966ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பீவி அம்மையாரை மணந்தார். பீவி அம்மையார் தனது கணவரின் ஆர்வத்திற்கு பேருதவியாக இருந்தார். மணமான நாள்  முதல் தனது வாழ்நாளின் இறுதி வரை, கணவரது இஸ்லாமிய இசை நிகழ்ச்சிகள், மாநாடு, சொற்பொழிவு, கதாகாலேட்சபம் ஆகியவை தங்குதடையின்றி நடைபெற உறுதுணையாக  இருந்தார்.

சென்னையில் இஸ்லாமியப் பாடகராக இவரை அரங்கேற்ற உதவியது சங்கு மார்க் கைலி நிறுவன உரிமையாளர் ஜனாப் அப்துல் காதர்தான். ஹாஜிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் குமரி  அபூபக்கரை பாட வைத்து பாடகராக அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து சென்னையில் செயல்பட இந்த நிகழ்ச்சியே அடித்தளமாக அமைந்தது. இந்த நிலையில், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பாடும் வாய்ப்பு அபூபக்கரைத் தேடி வந்தது. தொழிலாளர் நிகழ்ச்சியான உழைப்பவர் உலகம் நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி வந்தார்.

1976ம் ஆண்டு காசிம்புலவர் புகழ் பாடும் மாநாட்டில், அவருடைய புகழைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது அபூபக்கருக்கு. இது பெரும் திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது.  திரைப்படப் பாடலாசிரியரும், சீறாப்புராணக் காவியத்திற்கு விளக்க உரை எழுதியவரும், தியாகியும், பழுத்த தேசியவாதியுமான கவி கா.மு.ஷெரீப்பின் அறிமுகம் இந்த நிகழ்ச்சி மூலம்  குமரியாருக்குக் கிடைத்தது. அன்று முதல் இருவரும் கை கோர்த்துத் தமிழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய சேவையினை செய்யத் தொடங்கினர்.

இசையருவி குமரி அபூபக்கர் அவர்கள் 07.10.2020 அன்று சென்னையில் இறந்தார்.

அ. நஸீமா சிக்கந்தர் எம்.ஏ, எம்.ஃபில்

Daily Program

Livesteam thumbnail