சட்டத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 'இளம் சாதனையாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் சகோதரி ஷீலா | Veritas Tamil

சட்டத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 'இளம் சாதனையாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் சகோதரி ஷீலா

நீதியை ஒரு இறை அழைப்பாகக் கருதி செயல்பட்டு வரும், சிஸ்டர்ஸ் சர்வண்ட்ஸ் ஆஃப் தி ஹோலி ஸ்பிரிட் (SSpS) சபையின் மத்திய இந்திய மாகாணத்தைச் சேர்ந்த சகோதரி ஷீலா SSpS, டிசம்பர் 12 அன்று, விதிக் ஜாக்ருதி அமைப்பு ஏற்பாடு செய்த சிறப்பு விழாவில் சட்டத் துறையில் ஒரு இளம் சாதனையாளராக கௌரவிக்கப்பட்டார். இந்தூரில் உள்ள அபினவ் கலா சமாஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக, குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் மூலம் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களிடையே அவர் தொடர்ந்து ஆற்றிவரும் பணிக்காக, அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கத்தோலிக்க கனெக்ட்டிற்குப் பேட்டியளித்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி ஷீலா அவர்கள், சவால்கள் நிறைந்த ஒரு தொழிலில் இந்த அங்கீகாரம் தனக்கு ஒரு ஊக்கத்தின் ஆதாரமாக இருப்பதாக விவரித்தார். "இந்த அங்கீகாரம் ஒரு சட்ட அமைப்பிலிருந்தே வருகிறது என்பதால் நான் ஊக்கமடைகிறேன்," என்று அவர் கூறினார். "நீங்கள் முதல் தலைமுறை வழக்கறிஞராக இருக்கும்போது சட்டத் துறை மிகவும் கடினமானது‌. ஆரம்பத்தில் பல சவால்கள் உள்ளன. சிவில் சமூகம் உங்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும்போது, தொடர்ந்து மேலும் சிறப்பாகச் செயல்பட அது உந்துதலை அளிக்கிறது." மூத்தவர்கள் வழிகாட்டுதல் அளித்தாலும், சட்டப் பயிற்சிக்கு ஆழமான தனிப்பட்ட அர்ப்பணிப்பு தேவை, குறிப்பாக ஒருவர் தனிப்பட்ட லாபத்தை விட சேவைக்கு முன்னுரிமை அளிக்கும்போது" என்று அவர் குறிப்பிட்டார்.

நீதியின் மூலம் வடிவமைக்கப்பட்ட பணி
ஐந்து வருட அர்ப்பணிப்புடன் கூடிய சட்டப் பயிற்சியுடன், சகோதரி ஷீலா கூர்மையான சட்டப் புலமை, நுணுக்கமான தயாரிப்பு மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நற்பெயர் ஈட்டியுள்ளார். அவர் குற்றவியல் சட்டம், சிவில் வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள் மற்றும் குடும்பம் தொடர்பான மோதல்கள் என நூற்றுக்கணக்கான வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும், அவர் பழங்குடியினர் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட 188 வழக்குகளைக் கையாண்டார், அதில் 51 வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன, 44 நபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது, மீதமுள்ள வழக்குகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவரது பணியின் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அடிப்படை உரிமைகள் வழக்குகளில் கவனம் செலுத்துவது, ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சட்ட நிவாரணங்களை அணுக மறுக்கப்பட்டவர்களுக்காக வாதிடுகிறார். குறிப்பாக, பல வழக்குகளை அவர் கட்டணமின்றி (pro bono) எடுத்துக் கொண்டார், பாதிக்கப்படக்கூடிய தரப்பினரிடமிருந்து ஒரு ரூபாயைக்கூட ஏற்க மறுத்துவிட்டார்.

சேரி மற்றும் பழங்குடி சமூகங்களில் உள்ள பெண்களுக்காக அவர் ஆற்றிய சட்டப் பாதுகாப்பும், இந்தூரில் உள்ள வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்த அவர் தொடர்ந்து ஆற்றிவரும் பணியும் அவருக்குப் பரவலான மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது.
"கடவுள் எனக்காகப் போராடுகிறார்"

இறை நம்பிக்கைக்கு சட்டப் பணிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிப் பேசுகையில், தான் எதிர்கொள்ளும் தார்மீக சவால்களை சகோதரி ஷீலா ஒப்புக்கொண்டார். "நீங்கள் பாலியல் வன்முறை, கொலை போன்ற வழக்குகளைக் கையாளும்போதும், சட்ட அமைப்பிலும் காவல் நிலையங்களிலும் ஊழலை எதிர்கொள்ளும்போதும், உங்களின் விசுவாசம் தொடர்ந்து சவாலுக்குள்ளாகிறது," என்று அவர் கூறினார். "நமது விசுவாசம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் விழுமியங்கள், பெரும்பாலும் முரணாக நிற்கின்றன."

வழக்கு தாமதங்கள், தகுதியான வழக்குகளில் நிவாரணம் கிடைக்காதது மற்றும் பணம் மற்றும் அதிகாரத்தின் செல்வாக்கு பற்றி அவர் வெளிப்படையாகப் பேசினார். "எப்போதும் ஒரு போராட்டம் இருந்துகொண்டே இருக்கும்," என்று அவர் கூறினார். "ஆனால் எனது தொழில் என் விசுவாசத்தைப் பாதிக்க நான் அனுமதிப்பதில்லை. எனது வேலையுடன் எனது விசுவாசத்தையும் எடுத்துச் செல்கிறேன். நான் ஏமாற்றமடையும்போது கூட, கடவுள் எனக்காகப் போராடுகிறார் என்று எனக்குத் தெரியும்."

துறவறப் பயிற்சியும் சட்டப் பயணமும்
தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி ஷீலா, 2010 ஆம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேசத்தில் சேவை செய்து வருகிறார், அதுவே அவர் ஒரு துறவற சகோதரியாக முதல் உறுதிமொழி எடுத்த ஆண்டாகும். அவர் தனது இறுதி உறுதிமொழியை 2017 இல் எடுத்தார். தனது துறவறப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர் டெல்லியில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார், அங்கு அவர் தனது கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர் தனது இறுதி அர்ப்பணத்தை பெற்றார். பிறகு வடகிழக்கில் ஒரு வருடப் பயிற்சியுடன், அவரது பணி பெரும்பாலும் மத்திய இந்தியாவிலேயே வேரூன்றி இருந்தது.

மாற்றம் கொண்டு வரக்கூடிய சட்டத்தின் சக்தியை உணர்ந்து, அவர் இந்தூர், DAVV பல்கலைக்கழகத்தின் அரசு சட்டக் கல்லூரியில் தனது LLB பட்டத்தைப் பெற்றார், அதைத் தொடர்ந்து இந்தூர், பிரஸ்டீஜ் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டத்தில் LLM பட்டத்தைப் பெற்றார். அவரது சட்டப் பயணம் முறையாக 2018 இல் தொடங்கியது, அப்போது அவர் நடைமுறை அனுபவத்தைப் பெற மூத்த வழக்கறிஞர்களுடன் வழக்கமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அவர் 2021 இல் தனது உரிமத்தைப் பெற்றார், அன்றிலிருந்து முழுநேரமாகச் சட்டப் பயிற்சி செய்து வருகிறார்.
காலத்தின் தேவையை அடையாளம் காணுதல்
சகோதரி ஷீலா தனது சட்டப் பணியைச் சாத்தியமாக்கியதற்காக தனது சபைக்கே நன்றி தெரிவிக்கிறார். சட்டரீதியான தலையீட்டின் வளர்ந்து வரும் தேவையை உணர்ந்து, சபை சட்டத்தை ஒரு முக்கிய பணிப் பகுதியாக உணர்ந்ததுடன், அதைப் பின்தொடர அவரை ஊக்குவித்தது. "இது காலத்தின் தேவை என்பதை அவர்கள் அடையாளம் கண்டனர்," என்று அவர் கூறினார். "சட்டம் படிக்க எனக்கு அனுமதி அளித்தார்கள், எனது கல்விக்கு ஆதரவளித்தார்கள், மேலும் நான் இந்த ஊழியத்திற்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்கக்கூடிய வகையில் மற்ற பொறுப்புகளிலிருந்து எனக்கு விலக்கு அளித்தார்கள்." "அவர்களின் நம்பிக்கை, ஊக்கம் மற்றும் ஆதரவு என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது," என்று அவர் கூறினார். "வழக்குகள் மூலம் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமும், அவர்கள் நீதியைப் பெற உதவுவதன் மூலமும் என் மீது வைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்று மட்டுமே நான் நம்புகிறேன்." தனது மாகாணத்தில் முதல் வழக்கறிஞராக, சட்டத் துறைக்குள் அவர் நுழைந்தது தனிப்பட்ட இலட்சியத்தால் அல்ல, ஆனால் சமூகத்திற்கான தேவையால் தான் என்று அவர் வலியுறுத்தினார்.

சகோதரிகள் ஏற்கனவே கல்வி, சுகாதாரம், சமூகப் பணி, ஊடகம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய சேவைகள் செய்து வந்தாலும், சட்டப் பாதுகாப்பு என்பது காணாமல் போன, ஆனால் அத்தியாவசியமான நீரோட்டமாக உருவெடுத்தது. "வழக்குகள் மற்ற எல்லாத் துறைகளையும் பாதிக்கின்றன," என்று அவர் குறிப்பிட்டார். "மக்கள் நீதியைப் பெறப் போராடுகிறார்கள். அவர்களுக்குச் சட்டரீதியாக ஆதரவளிக்க ஒருவரின் தேவை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்." மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி மற்றும் பஞ்சாப் முழுவதும் சபையின் மத்திய இந்திய மாகாணம் சேவை செய்வதால், மத்தியப் பிரதேசத்தில் அவரது இருப்பு அவரது மிஷனரி நியமனத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து மத்திய இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களின் சவாலான வாயில்களுக்கு அவர் மேற்கொண்ட பயணம், விசுவாசம் மற்றும் உறுதிப்பாட்டோடு, குரலற்றவர்களின் நீதிக்காண அசைக்க முடியாத சேவையில் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு ஒரு சான்றாக நிற்கிறது.