பகையை வெல்லும் ஆயுதம் அன்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 11 ஆம் வாரம் – செவ்வாய்
1 அரசர் 21: 17-29
மத்தேயு 5: 43-48
பகையை வெல்லும் ஆயுதம் அன்பு!
முதல் வாசகம்.
நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை அநியாயமாகப் பறித்துக்கொண்டு, அவனை கொலை செய்யச் செய்த அரசன் ஆகாபை இறைவன் கண்டித்தார். இறைவாக்கினர் எலியா மூலம், ஆகாபின் குடும்பத்தின் மீது தண்டனை வரும் என்று ஆண்டவர் அறிவித்தார். நாபோத்தின் இரத்தம் சிந்தப்பட்ட இடத்திலேயே ஆகாபின் இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்றும், அவனது சந்ததியினர் அழிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும், ஆகாபின் மனைவி ஈசபேல் நாய்களால் உண்ணப்படுவாள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தக் கடுமையான எச்சரிக்கையைக் கேட்ட ஆகாப் தனது பாவத்தை உணர்ந்து, துக்க ஆடைகளை அணிந்து, உண்ணா நோன்பிருந்து, தன்னைத் தாழ்த்திக்கொண்டான். அவனது மனந்திரும்புதலைக் கண்ட ஆண்டவர் இரக்கம் கொண்டு, அறிவிக்கப்பட்ட முழுத் தண்டனையையும் அவன் வாழ்நாளில் நிறைவேற்றாமல், அவனுடைய மகனின் காலத்தில் நிகழுமாறு ஒத்திவைத்தார் என்று அறிகிறோம்.
நற்செய்தி.
நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக வரும் இன்றைய செய்தியில், இயேசு, “உன் அயலானை அன்பு செய்; உன் பகைவரை வெறு” என்ற பழைய எண்ணத்தை விடுத்து, தம்முடைய சீடர்கள் பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும்; துன்புறுத்துகிறவர்களுக்காகவும் இறைவேண்டல் செய் வேண்டும் என்று அழைக்கிறார்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக விளங்குவர் என்பதோடு, கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் அதே சூரிய ஒளியையும் மழையையும் அளிக்கிறார். தங்களை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது சிறப்பானது அல்ல; பிறரும் அதையே செய்கின்றனர்.
எனவே, கடவுளின் எல்லையற்ற அன்பை முன்மாதிரியாகக் கொண்டு, அனைவரிடமும் பாகுபாடின்றி அன்பு செலுத்தி, “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்” என்று இயேசு அழைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் ஒருமித்தே சிந்திக்கும் போது, மனமாற்றம் மற்றும் உண்மை அன்பின் அடிப்படைத் தன்மை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
முதல் வாசகத்தில், நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை அநியாயமாகப் பறித்துக் கொண்ட அகாப் அரசனை இறைவாக்கினர் எலியா கண்டித்த போது, தனது பாவத்தை உணர்ந்து தன்னைத் தாழ்த்தி மனம் வருந்தியபோது, ஆண்டவர் அவர்மேல் இரக்கம் காட்டுகிறார். இதன் மூலம் நமது பாவமானது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், உண்மையான மனமாற்றம் இறைவனின் இரக்கத்தைப் பெற்றுத் தரும் என்பதை அறிகிறோம்.
நற்செய்தியில், இயேசு “உங்கள் பகைவர்களையும் அன்பு செய்யுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார். ஆம், நண்பர்களை மட்டும் அன்பு செய்வது எளிது. ஆனால் நம்மை வெறுப்பவர்களையும் மன்னித்து அன்பு செய்வதே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை படிப்பினையாக உள்ளது.
ஆகவே,
• நான் செய்த தவறுகளை உணர்ந்து மனம் திரும்புகிறேனா?
• என்னை காயப்படுத்தியவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறேனா?
• இறைவனின் எல்லையற்ற அன்பை என் வாழ்வில் வெளிப்படுத்துகிறேனா?
போன்ற கேள்விகளூ நமக்கு நாமே கேட்க வேண்டும். ஏனெனில், கதிரவன் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் உதிக்கச் செய்கிற கடவுளைப் போல நாமும் எல்லோரிடமும் நிபந்தனையற்ற அன்பு காட்ட அழைக்கப்படுகிறோம்.
சிலுவையில் தாம் கட்டளையிட்ட அன்பின் உண்மை தன்மையை இயேசு தாமே, தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக மன்றாடிய போது, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்கா 23:34). என்று வேண்டினார். கடவுள் அன்பு செய்வது போல அன்பு செய்வது என்பது, உலகப் பிரிவுகளைக் கடந்து, கடவுளின் உண்மையான பிள்ளைகளாக மாறுவதாகும்; அதாவது, மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தினாலும், அனைவருக்கும் அன்பை வழங்குவதாகும். இந்த முழுமையை அடைவது கடினமாக இருந்தாலும், நமது அன்றாட வாழ்வில் அந்த இலட்சியத்திற்காகப் பாடுபடுவதில் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது என்பது நமக்கான இன்றைய படிப்பினையாக உள்ளது.
மேலும், இன்று சிறப்பாக இறைவன் நம்மை அகாபைப் போல மனமாற்றம் கொண்டு, இயேசு கற்பித்தபடி பகைவர்களையும் அன்பு செய்து, விண்ணகத் தந்தையின் நிறைவான அன்பை சொல்லிலும், செயலிலும், குறிப்பாக குடும்பத்தில் வெளிபடுத்த முயல்வோம். முயற்சி திருவினையாக்கும்.
இறைவேண்டல்.
அன்பின் பிறப்பிடமாகிய ஆண்டவரே, தநைக்கூர்ந்து, எல்லா மனக்கசப்புகளிலிருந்தும் என்னை விடுவித்து, என் இதயத்தைத் தூய்மையாக்கி, நீர் அன்பு செலுத்துவது போல அன்பு செலுத்த என்னைத் திடப்படுத்துவீராக., அப்போதுதான் நான் உண்மையாகவே உமது அன்புக்குரிய பிள்ளையாக இருக்க முடியும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452