கல்விக் கரையில் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
'கலவிக் கரையில்'
கற்பிப்பதும் படைக்கும் தொழில் கற்பதும்,
கல்வியைக் கல்வி அறிவு வளர்க்கும்.
பிறருக்குக் கற்பிக்க இன்னும் அது வளரும்.
கொடுத்தாலும் குறையாதது.
எடுத்தாலும் இழக்காதது.
இறைத்தாலும் வற்றாதது.
அள்ளினாலும் இருப்பது.
சொல்பவர்கள் தெளிவடைகிறார்கள்.
கேட்பவர்கள் பயனடைகிறார்கள்.
கல்வி என்பது சுரங்கம் - இதில் நமது திறமைகள், பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள், தோல்விகள், வெற்றிகள் எனப் பல பாடங்கள் வழிகளாக அமைகின்றன. அதனை நமதாக்கிச் செல்லும்போது கல்விச் சுரங்கத்தின் பாதை தெளிவுற்று அறிவு என்னும் புதையலைப் பெற முடியும். பெற்றதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது நிறைவையும் அடையமுடியும். பகிரப்படாத அறிவும் கல்வியும் பயனற்றது.
அறிவிலிச் சிறுவன் ஒருவன் விலையுயர்ந்த, பல வண்ணங்களுடைய, உருண்டையான பளிங்குக் கற்களை ஒரு பை நிறையச் சேர்த்து வைத்திருந்தான். தான் அதை வைத்திருப்பதைப் பற்றி மிகவும் பெருமையடைந்தான். ஆனால், அதனைத் தானும் பயன்படுத்தாமல்,அதாவது விளையாடாமல் மற்றவர்களுக்கும் விளையாடக் கொடுக்காமல் வீணாக வைத்திருந்தான். நாள்தோறும் அந்தப் பையைத் திறப்பான். அந்தக் கற்களைப் பார்ப்பான். ஒவ்வொன்றாக எண்ணுவான். மீண்டும் பையிலேயே வைத்து விடுவான். எங்கு சென்றாலும் அந்தப் பையைத் தூக்கிக்கொண்டே செல்வான். அறிவுள்ள ஒரு சிறுவனும் இருந்தான். அவனும் அதேபோல பளிங்குக் கற்களை ஒரு பையில் சேர்க்க மிகவும் ஆசைப்பட்டான். எனவே, கடினமாக உழைத்து, பணம் ஈட்டி இந்தக் கற்களைச் சேகரித்து வைக்க அழகான, உறுதியான பை ஒன்றை வாங்கினான். ஆனால், இந்தப் பளிங்குக் கற்களை வாங்குகின்ற அளவுக்கு அவனிடம் பணம் இல்லை. இருப்பினும் அவனிடம் தன்னம்பிக்கை இருந்தது. 'நான் அதனை வாங்குவேன்' என்ற உறுதி இருந்தது.
எனவே, தன் பைமீது தனிப்பட்ட கவனம் செலுத்தினான். அந்தப் பையில் நிறையப் பளிங்குக் கற்கள் இருப்பதாகவும், தான் அதை வைத்து விளையாடுவதாகவும், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவும் கனவு கண்டான். அதைப் பெற முயற்சி செய்தான். மாறாக, அந்த அறிவிலிச் சிறுவன் பளிங்குக் கற்களின்மேல் இருந்த கவனத்தின் ஒரு பகுதியைக்கூட அந்தப் பையின்மீது வைக்கவில்லை. ஒரு நாள் அந்தப் பையின் அடியில் ஒரு துவாரம் விழுந்தது. இதை அறிவிலிச் சிறுவன் கவனிக்கவில்லை. நாளடைவில் அந்தத் துவாரம் பெரிதாகிப் பையில் இருந்த பளிங்குக் கற்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழத் தொடங்கின. இவற்றைக் கவனித்த அந்த விவேகமுள்ள சிறுவன் அதனை ஒவ்வொன்றாகக் கண்டெடுத்து தன்னுடைய பையில் சேர்த்து வந்தான். விரைவிலேயே அவனுடைய பை நிறைந்து விட்டது. அதன் அழகை இரசித்தான். தானும் விளையாடி, தன் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழ்ந்தான். எப்போதும் தன்னுடைய அந்த பையின்மேல் சிறப்புக் கவனம் செலுத்தி, பளிங்குக் கற்களைப் புதையல் போலக் கருதி இழந்து விடாமல், பாதுகாத்தும், பகிர்ந்தும் வந்தான். அதனால் அவனுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் கிடைத்தன.
பளிங்குக் கற்களைப் போன்றே நமது கல்வியும், அதனால் கிடைக்கப் பெறுகின்ற அறிவும் ஏட்டுக்கல்வி மட்டுமன்று, அன்றாடம் கற்கும் அனுபவக் கல்வியும்தான். நமக்குக் கிடைத்த புதையல் இது. அதனைத் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். சிறந்த வழியில் பயன்படுத்த வேண்டும். கல்விச் சுரங்கத்திற்குள் சென்றும், அனுபவங்களைப் பாடமாக்கியும், சிறந்த அறிவு, ஞானம் என்னும் புதையலைக் கண்டடைவோம். நமது வாழ்க்கை என்னும் பைக்குள் அதனை நிரப்புவோம். நாம் பயன்படுத்துவோம். பிறரோடும் பகிர்ந்து கொள்வோம். நிறைவும் மகிழ்ச்சியும் அடைவோம்.
"கற்ற கல்வியின் பயன் பிறரோடு பகிர்வது காலம் அறிந்து தகுந்த கல்வி அறிவு பெறுவோம் ".