மாற்றம் நம்மில் தொடங்கட்டும்…. | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் அனைவரும் எல்லா இடங்களிலும் யாரையோ, எதையோ மாற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். பெற்றோருக்குப் பிள்ளைகளை மாற்றவேண்டும். ஆசிரியருக்கு மாணவரை மாற்ற வேண்டும். ஆன்மீகவாதிக்கு மக்களை மாற்றவேண்டும். இப்படி அவரை மாற்றனும், இவரை மாற்றனும் என்னும் எண்ணம் நெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் போகும் போக்கைப் பற்றிக் கவலைப்படும் நாம் முதலில் நாம் போகும் பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அப்படி திரும்பிப் பார்த்தால்தான் நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை நிலை புரியும்.

நானும் என் நிலைபாடும்தான் சரி, அதற்கேற்ப இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற மனோபாவமிருந்தால், அங்கு மோதல் தான் பிறக்கும், பிரச்சினைதான்  வெடிக்கும். எனவே நம்மை மாற்றுவோம். நம்மை மாற்றினால் எல்லாம் தானாய் மாறும் என்பதை புரிந்து கொள்வோம். பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணத்தைத் தொடர்வோம். அப்போது மாற்றமும் ஏற்றமும் தானாய் கனியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

அருட்தந்தை பியோ அவர்கள் ஒப்புரவு அருட்சாதனம் கொடுத்துக்கொண்டே இருப்பார். அதே ஊரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் தன் கணவனைப் பார்த்து தயவுசெய்து தந்தை பியோவைப் பார்த்து, எனக்கு இறையாசீர் பெற்று வாருங்கள் என்று  நச்சரித்துக்கொண்டே இருந்தார்.  கணவனோ நாட்களைக் கடத்திக் கொண்டே இருந்தார். ஒருநாள் மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் தந்தை பியோவைச் சந்திக்கச் சென்றார்.  பாவசங்கீர்த்தன தொட்டியில் இருந்த தந்தையை அணுகி அவரிடம் என் மனைவி, என ஆரம்பித்தார். உடனே தந்தை, வரிசையில் வந்து பாவசங்கீர்த்தனம் செய்தால் மட்டுமே என்னால் பேச இயலும் என்று கூறினார். அவருக்கோ எரிச்சல் வந்தது. நான்கு ஐந்து முறை முயற்சித்தும் வேண்டா வெறுப்பாக வரிசையில் நின்று பாவசங்கீர்த்தனத் தொட்டிக்குச் சென்றார்.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் முழங்கால் போட்டவுடனேயே தந்தை பியோ அவர்கள் அவரது அனைத்துப் பாவங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லச் சொல்ல அவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். மனமுருகி பாவ மன்னிப்பு வேண்டினார். தனது வாழ்நாளில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி தந்தையிடம் இறையாசீர் பெற்று புது மனிதனானார். வேகமாக வீட்டை அடைந்தார். அவர் மனைவியோ மிக்க சந்தோசத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்து கதவைத் திறந்து கணவனை வரவேற்றார். கணவனின் தாறுமாறான வாழ்க்கையால் மனைவி பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் பாவ அறிக்கை மனைவியைக் குணமாக்கியது. எனவே நாமும் இறைவனுக்கு உகந்த புனிதமான வாழ்வு வாழ நமது பயணத்தை தொடர்வோம். அதுவே இனிதான பயணமாக அமையட்டும்.

பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணத்தைத் தொடர்வோம். அப்போது மாற்றமும் ஏற்றமும் தானாய் கனியும்.