அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு | Veritas tamil

மண்டபத்தில் எக்கசக்கமான கூட்டம்; வரவேற்பு நடைபெறும்போதே மக்கள் தேடி ஓடி உணவு அறையில் இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனந்து சிறுகுழந்தைபோல் அம்மாவின் புடவைத் தலைப்பை இழுத்து ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தான். 'ஆனந்துக்கு பசிக்கிறதாம்; நாம் சாப்பிடப் போகலாமே அம்மா அப்பாவிடம் கேட்டார். 'உன் பிள்ளைக்கு எப்போதும் பசிதான்; அங்கே கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது; இப்போது போனால் இடம் கிடைக்காது, என்றார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கடைசி வரிசையில் சில இடங்கள் இருந்தன; அதில் அமர்ந்தனர். அவர்கள் பக்கம் பரிமாறுவோர் வருவதற்கும் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனந்து உண்ணுவதை அப்பா பார்த்தார். 'பாரு உன் பிள்ளையை. கொஞ்சமும் நாகரீகம் கிடையாது' என்றார். அவரை கைகாட்டி அடக்கினார் அம்மா. உணவை முடித்து அப்பா அம்மா மகள் கமிலா மூவரும் கைகழுவச் சென்றனர். ஆனால் அப்போதும் ஆனந்து முடிக்கவில்லை. அவர்கள் வெளியில் காத்திருந்தனர். 10 நிமிடங்களுக்குப் பிறகே கையில் ஐஸ்கிரீமுடன் அவன் வந்தான். அப்பா தன் தலையில் அடித்துக் கொண்டார்.

அவர்கள் ஆட்டோவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனந்து வயிற்றை நெளித்துக் கொண்டே இருந்தான். 'உனக்கு என்னடா பண்ணுது?' அம்மா கேட்டார். 'வயிறு வலிக்குதும்மா' என்றான். 'நான் நினைத்தது சரி ஆயிற்று; டாய்லெட்டுக்கு போய் வா' என்றார். 'வேண்டாம்; - எனக்கு வயிற்று வலி: வேறொன்றும் இல்லை என்றான் மகன்.

'நம் வயிறு எவ்வளவு கொள்ளுமோ, அவ்வளவு உணவு முழுவதையும் சாப்பிடக் கூடாது: இன்னும் 2 வாய் சாப்பிடலாம் என்று எண்ணும்போது நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். ஆனந்து, பேருந்து நிறுத்த பெஞ்சில் அமர்ந்தான். அம்மா அவன் வயிற்றைத் தடவிக் கொடுத்தார். 12 வயது மகன் வயிற்றைத் தடவிக் கொடுப்பது உனக்கே அசிங்கமாய் இல்லை' என்று கடிந்து கொண்டார். அவன் வலியால் துடிக்கிறபோது நீங்கள் பேசுகிற பேச்சா இது?" அம்மா அப்பாவைக் கடிந்தார். சிலநிமிடங்களில் ஆனந்து அழுதுவிடுவான்போல் தோன்றியது.

அவன் அழுவதைப் பார்த்து அருகில் இருந்த கிளினிக்குக்கு கூட்டிச் சென்றனர். நர்ஸ் உடனே அவனை உள்ளே அழைத்துச் சென்றார்; டாக்டர் பரிசோதிக்கும் போது மூவரும் வெளியே காத்திருந்தனர். அம்மாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 'அவன் அளவுக்கு அதிகமாக அதாவது வயிறு முட்ட சாப்பிட்டான்; அதனால்தான் வயிற்று வலி' என்றார் அப்பா. 'வயிறு முட்ட சாப்பிடுவது தவறுதானே? இது மகளின் கேள்வி. 'நிச்சயமாய் தவறுதான். அதிகமான உணவுக்கு வயிற்றில் இடம் வேண்டுமே. அதனால் வயிறு விரிவடையும்; அப்போது பிற உள்ளுறுப்புகள் தள்ளப்படும். சிலருக்கு மந்த நிலையும், வேறு சிலருக்கு வயிற்று வலியும் உண்டாகலாம்'.

அதிகமான உணவு சீரணமாகாதா?' என்று மகள் கேட்டபோது 'அதிகமான உணவை சீரணமாக்க மிகுதியான ஹார்மோன் என்சைம் போன்ற நீர்மங்கள் சுரக்கும்; உணவை உடைக்க ஹைடிரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரந்து உணவுக்குழாய் வரை எட்டும். அதனால் நெஞ்செரிச்சல் மற்றும் வாயுவும் உண்டாகும்; வயிறு முட்ட சாப்பிடுவதால் வயதுக்கு அதிகமான உடல் எடை, மிகுதியான கலோரி கொழுப்பாக மாறுதல். இரத்தக் குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான விளைவுகள் பிற்காலத்தில் உண்டாகலாம்' என்றார்..

'அப்பா இன்னும் சொல்லுங்கள்' என்று கேட்டாள் மகள் 'உனக்கு இதை எல்லாம் சொல்ல அவசியம் கிடையாது. ஏனென்றால் நீ எல்லாவற்றையும் உணர்ந்து அளவுடன் உணவை எடுத்துக் கொள்கிறாய். ஆனால் ஆனந்து கேட்கவேண்டுமே?' என்றார் அவர். 'அப்பா நீங்கள் எனக்கு இப்போது சொல்லுவதை நான் அண்ணாவுக்கு அப்படியே சொல்வேன். நீங்கள் சொல்லுங்கள்' என்றாள் . உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு' என்பது பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது அன்று. அது எல்லாருக்கும் பொதுவானது. பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட உணவை நாம் தவிர்க்க வேண்டும். காய்கறி பழங்களை உண்ண வேண்டும். அவை நார்ச்சத்தை வழங்குவதால் இடைவேளை தின்பண்டங்கள் மேல் நமக்கு நாட்டம் குறையும்; பெரிய தட்டில் சாப்பிடுவதை விடுத்து சிறிய தட்டைப் பயன்படுத்தலாம்; அதனால் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தலாம்; சாப்பிடும்போது தொலைக்காட்சி, மடிக்கணினி பார்ப்பதை தவிர்க்கலாம்; அதனால் நாம் கவனச் சிதறலுக்கு இடம் தராமல் தேவையான அளவு சாப்பிட்டதை உணர்ந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள முடியும்; உணவு உட்கொள்வதற்கு முன்னர் கட்டாயம் சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; இந்த வழிகளைப் பின்பற்றுவதால் வயிறு முட்ட உண்பதை தவிர்க்கலாம்; நோயில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்' என்றார். 'சிறுவயதில் இருந்தே இந்த வழிகளை கடைப்பிடிக்க வேண்டுமா?" என்று மகள் கேட்டபோது 'கட்டாயம் கடைப்பிடிக்க - வேண்டும். அது பிற்காலத்திலும் பழக்கத்துக்கு வந்துவிடும்' என்றார். இப்போது டாக்டரின் அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் உள்ளே சென்று டாக்டர் முன்னால் நாற்காலியில் அமர்ந்தனர்.

'பயப்படும்படி ஒன்றும் இல்லை; சாப்பாடு சற்று அதிகமாகி இருக்கிறது. அதனால் வயிற்றில் பிரச்சனை உண்டாகி இருக்கிறது. தேவையான மருந்தை இப்போது கொடுத்திருக்கிறேன்; ஓர் ஊசியும் போட்டிருக்கிறேன்; பார்மசியில் சீட்டைக் கொடுத்து மருந்தை வாங்கிகொள்ளுங்கள். வீட்டுக்கு போனதும் எல்லாம் சரியாகிவிடும்; அந்த மருந்தை மூன்று நாள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளட்டும். அதன்பிறகு இங்கு வரத் தேவை இருக்காது;கூட்டிப் போங்கள்' என்றார் டாக்டர். நர்ஸ் மாத்திரை சீட்டை அப்பாவிடம் கொடுத்தார்; அத்துடன் கன்சல்டிங் மற்றும் டிரீட்மென்ட் 400 ரூபாய்' என்றார். அதையும் கொடுத்துவிட்டு மருந்து மாத்திரை 500 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு அவர்கள் வெளியே வந்தனர். அப்பா ஆனந்தை முறைத்துப் பார்த்தார். 'அப்பா அவனை முறைத்துப் பார்ப்பதை நிறுத்துங்கள்; நீங்கள் எனக்கு சொல்லியதை எல்லாம் ஆனந்துக்கு சொல்லி அவனை திருத்தி விடுவேன். இனி அவன் ஒரு நாளும் வயிறு முட்ட சாப்பிடமாட்டான்' என்றாள் மகள்.. நால்வரும் ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றனர். 900 செலவு பற்றி அப்பா ஏதும் கூறவில்லை. ஆனால் அம்மாதான் வருத்தப்பட்டார்; 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்பதை அவனுக்கு கற்பிக்க வேண்டும்' என்றார்.

 

திருவாளர் லூர்து எஸ் ராஜ்