உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு வலிமை அளித்தன: திருத்தந்தை பதினான்காம் லியோ | Veritas Tamil

தனக்காகச் செபித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், “உங்கள் ஆதரவை நான் உண்மையாகவே உணர்ந்தேன். உங்களுக்கு நன்றி!” என்று கூறினார்.

அக்டோபர் 18 , ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டலின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அண்மையில் தான் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது அக்கறையுடன் கவனித்த உரோம் ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்தார்.

“இந்த அனுபவம், நோயாலும் உடல்நலக் குறைவாலும் துன்புறும் அனைவருடனும் ஒரு சிறப்பான முறையில் நெருக்கமாக இருக்க எனக்கு உதவியுள்ளது” என்று திருத்தந்தை கூறினார்.

மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மார்புப் பகுதி எக்ஸ்-ரே பரிசோதனையின் முடிவுகள், அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம் என்பதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பிற்பகல் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

மருத்துவமனையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், திருஇருதயப் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.

தமது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து, தமது பணிகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, “இந்தக் கடினமான கட்டம் இப்போது கடந்துவிட்ட நிலையில், கடவுளின் உதவியுடனும் உங்கள் செபங்களுடனும் எனது பணிகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்குவேன்” என்று கூறி மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார். 

Tamil Survey Popup Image