திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்கப் பயணம் தொடக்கம்! | Veritas Tamil

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தமது 12 நாள் இலத்தீன் அமெரிக்கத் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, நவம்பர் 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை உரோமை ஃபியூமிச்சினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். தமது பணிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் ஆறாவது சர்வதேசப் பயணம் இதுவாகும். இப்பயணத்தில் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.

உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் உருகுவேயின் மான்டிவீடியோ-கராஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அவர் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவருக்கு முறைப்படி அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.மான்டிவீடியோவில் திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள் மாலை 5:30 மணிக்கு விடுதலை சதுக்கத்தில் (Independence Square) நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியோடு தொடங்குகின்றன. தொடர்ந்து அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து, உருகுவே குடியரசுத் தலைவரைத் திருத்தந்தை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். பின்னர், மான்டிவீடியோவின் அமல உற்பவ மற்றும் தூய பிலிப்பு, யாக்கோபு பெருங்கோவிலில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் இறையியல் மாணவர்களோடு இணைந்து மாலை திருப்புகழை (Vespers) முன்னின்று நடத்துவார்.உருகுவே பயணத்தை நிறைவு செய்தபின், அர்ஜென்டினாவுக்குச் செல்லும் அவர் பியூனஸ் அயர்ஸ், கோர்டோபா மற்றும் லூஹான் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பெரு நாட்டில் லீமா, சிக்லாயோ, குஸ்கோ மற்றும் புக்கால்பா ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.

நவம்பர் 6 முதல் 17 வரை 12 நாள்கள் தொடரும் இப்பயணத்தின் போது, திருத்தந்தை 10 நகரங்களுக்குச் சென்று சுமார் 12 முறை விமானப் பயணங்களை மேற்கொள்வார். மேலும், இப்பயணக் காலத்தில் ஸ்பானிஷ் மொழியில் ஏறக்குறைய 40 உரைகளை அவர் நிகழ்த்தவிருக்கிறார்.

Tamil Survey Popup Image