இனி ஒருபோதும் போர் வேண்டாம் திருத்தந்தை பதினான்காம் லியோ வேண்டுகோள்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு வழங்கிய பாஸ்காகால மூவேளை செப உரையின் இறுதியில் போர் இனி ஒருபோதும் வேண்டாம் என்றும், உண்மையான, நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை என்றும் எடுத்துரைத்து செப விண்ணப்பங்களின்போது திருத்தந்தை 14-ஆம் லியோ கூறினார்.
மூன்றாம் உலகப் போர் சூழலால் உலகமே சிதைந்து கொண்டிருக்கும் இன்றைய வியத்தகு சூழ்நிலையில், "மீண்டும் ஒருபோதும் போர் வேண்டாம்!" என்று வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள் துன்புறும் உக்ரைன், காசா இந்தியா பாகிஸ்தான் மக்களையும் நினைவு கூர்ந்துள்ளார்.உண்மையான, நீதியான மற்றும் நீடித்த அமைதியை விரைவில் அடைய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், துன்புறும் பொதுமக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும், அனைத்து பிணையக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை தான் வரவேற்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் வழியாக விரைவில் ஒரு நீடித்த உடன்பாட்டை எட்ட முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
உலகின் பல பகுதிகளில் நடக்கும் மோதல்கள் அனைத்தையும் அன்னை மரியிடம் ஒப்படைத்து செபிப்பதாகவும், அமைதியின் அன்னையாம் மரியா நமது இந்த விண்ணப்பத்தை இயேசுவிடம் ஒப்படைத்து அமைதியை நமக்குப் பெற்றுத் தரட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
Daily Program
