லெபனான் நாட்டில் திருத்தந்தை லியோ! | Veritas Tamil

லெபனான் நாட்டில் திருத்தந்தை லியோ!

 டிச. 01: லெபனானுக்குத் தனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை லியோ, லெபனான் மண்ணில் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளியுறவுத் துறை நிர்வாகிகள் மத்தியில் தனது முதல் உரையை ஆற்றினார்.

"அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தனது பயணத்தின் மையக் கருப்பொருளில் உரையாற்றிய திருத்தந்தை, லெபனானில் அமைதி என்பது வெறுமனே ஒரு விருப்பம் அல்ல; மாறாக, நாட்டின் சிக்கலான சமூகக் கட்டமைப்பு

மற்றும் தொடர்ச்சியான சவால்களில் வேரூன்றிய ஓர் அன்றாடத் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும், லெபனான் தலைவர்களுக்கு அவர்களின் நாட்டில் அமைதி என்பது ஓர் எதிர்பார்ப்பு அல்ல; மாறாக, தினமும் கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு விருப்பத்துடன் கூடிய அழைப்பு என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.

லெபனான் மக்களின் விடாமுயற்சியைப் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, அவர்கள் துயரங்களை எதிர்கொள்ளும் சூழலிலும் நம்பிக்கையைக் கைவிடுவதில்லை என்று குறிப்பிட்டதுடன், லெபனானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த மீள் தன்மையே அடித்தளமாக இருக்கவேண்டும் என்றும், லெபனானின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்குப் பொறுப்பானவர்களுக்கு இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தலைவர்கள் தங்கள் மக்களுடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், லெபனானை மீண்டும் தொடங்க உதவும் "நம்பிக்கையின் மொழியை" (The language of hope) பேசுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளார்