திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்லடக்க திருப்பலி.

ஏப்ரல் 21, திங்கள் கிழமை அன்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தூய பேதுரு பெருங்கோவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஏப்ரல் 23 முதல் 25 வைக்கப்பட்டு, ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை மாலை வரை ஏறக்குறைய 2,50,000 மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினர்.
ஏப்ரல் 26, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே வத்திக்கான் வளாகமானது இறைமக்களால் நிறைந்திருந்தது. வத்திக்கான் நகரத்தை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து வாகனங்கள் திருப்பலியில் பங்கேற்க திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும், ஏராளமான மக்கள் தொலை தூரங்களிலிருந்து திருப்பயணிகளாக நடந்தே வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தனர். ஏறக்குறைய 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருத்தந்தையின் அடக்கத் திருப்பலியில் பங்கேற்க உள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையேற்று நடத்த உள்ளார். அமெரிக்க நாட்டு ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் ஜனாதிபதி, அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி, பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், உக்ரைன், போலந்து, தொமினிக்கன் குடியரசு, குரோவேசியா, ஈக்குவதோர், மால்தோவா, லாத்வியா, பிரேசில் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்கள், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து ஆகியவைகளின் பிரதமர்கள், பெல்ஜியம், ஸ்வீடன், இஸ்பெயின் ஆகியவைகளின் மன்னர்கள், இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர், நார்வேயின் இளவரசர், ஐநா. பொதுச்செயலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என ஏறக்குறைய 130 உயர்மட்ட பிரதிதிகள் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத்திருப்பலியில் பங்கேற்கின்றனர்.
Daily Program
