மும்பையில் பீடப்பணியாளர்களுக்கு திருவழிபாட்டுப் பயிற்சி: புனிதப் பொருள்களைப் பேணுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தல் | Veritas Tamil

மேற்கு இந்தியாவின் மும்பை நகரில், பம்பாய் உயர் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு அலுவலகம் சார்பில், பல்வேறு பங்குகளைச் சேர்ந்த 75 பீடப்பணியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. தாதர் மேற்குப் பகுதியில் உள்ள சேவா கேந்திராவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருப்பலியின்போது பயன்படுத்தப்படும் புனிதப் பொருள்களையும் திருவழிபாட்டுத் துணிகளையும் முறையாகப் பராமரிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

“எடுத்துக்கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள், சுத்தம் செய்யுங்கள், மீண்டும் உரிய இடத்தில் வையுங்கள்” என்று அருள்பணியாளர் ராபின் ஃபர்கோஸ் அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். பீடத்தில் பணியாற்றுவது ஒரு கடமை மட்டுமல்ல; அது அர்ப்பணிப்பு, நேர்மை, ஒழுக்கம் மற்றும் பயபக்தி தேவைப்படும் அழைப்பும் பணியுமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

திருப்பலிக்கான பீடத்தைத் தயாரிப்பதற்கு இணையாக, இறைவேண்டல், தாழ்ச்சி மற்றும் பக்தி வழியாக உள்ளத்தைத் தயார்படுத்துவதும் முக்கியம் என்று அவர் நினைவூட்டினார். மேலும், திருப்பலியின்போது பயன்படுத்தப்படும் புனிதப் பொருள்களையும், திருப்பலிக் கிண்ணங்களைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் துணிகள் உள்ளிட்ட திருவழிபாட்டுத் துணிகளையும் கவனமாகப் பராமரிப்பதன் அவசியத்தையும் விளக்கினார்.

அருள்சகோதரி ரோஸ்லி அவர்கள் வழிநடத்திய இறைவேண்டலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. திருவழிபாட்டு ஆணையத்தின் செயலரும் நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளருமான அருள்பணியாளர் சாவியோ டிசேல்ஸ் அவர்கள் பங்கேற்பாளர்களை வரவேற்று, பங்குகளின் வாழ்வில் பீடப்பணியாளர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, கிளிஃப்டன் வழிநடத்திய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பங்குகளைச் சேர்ந்த பீடப்பணியாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, நட்புறவை வலுப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி ரோஸ்லி அவர்கள், பங்குகளில் பின்னணியில் இருந்து பணியாற்றுவோருக்கு வழிகாட்டவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மரோல் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தைச் சேர்ந்த பீடப்பணியாளர் சொகொரினா கோலம்கன்னி, புனிதப் பொருள்களையும் திருவழிபாட்டுத் துணிகளையும் முறையாகப் பராமரிப்பது குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களைப் பாராட்டினார். இத்தகைய பயிற்சிகளை ஆண்டுதோறும் நடத்தவும் அவர் பரிந்துரைத்தார்.

மரோல் புனித நற்செய்தியாளர் யோவான் ஆலயத்தைச் சேர்ந்த ஜெம்மா கூட்டிஸ், இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியையும் பயனுள்ள அனுபவத்தையும் அளித்ததாகக் கூறினார். புனிதப் பணியில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து, மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற இப்பயிற்சி உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

மரோல் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தைச் சேர்ந்த கமிலோ பின்டோ, அருள்பணியாளர் ஃபர்கோஸ் வழங்கிய விளக்கக்காட்சியைப் பாராட்டினார். “அவரது விளக்கக்காட்சி மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தது. குறிப்பாக, திருவழிபாட்டுத் துணிகளின் புனிதத்தன்மை குறித்தும் அவற்றைத் தனியாகத் துவைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

மேலும், இறைவனுக்குப் பணியாற்றும் தாங்கள் அமைதியாகவும் பொறுமையுடனும் அன்புடனும் செயல்பட வேண்டும் என்றும், பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது என்றும் இப்பயிற்சி நினைவூட்டியதாக அவர் தெரிவித்தார்.

புனிதப் பொருள்களை முறையாகத் தயாரித்தல், பொறுப்புடன் கையாளுதல் மற்றும் பங்குச் சமூகங்களுக்குப் பக்தியுடன் பணியாற்றுதல் ஆகியவற்றின் வழியாக, திருஅவையின் திருவழிபாட்டு வாழ்வில் பீடப்பணியாளர்கள் ஆற்றும் முக்கியப் பங்களிப்பை இப்பயிற்சி எடுத்துரைத்தது.

Tamil Survey Popup Image