ஒருங்கிணைந்த பயண மனமாற்றமும் திருப்பணியும். | Veritas Tamil

ஜூலை 20 முதல் 26 வரை ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) முழுப் பேரவைக் கூட்டத்தை முன்னிட்டு, உலகின் மிகப்பெரிய மத மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில், கத்தோலிக்க திருஅவை உரையாடல், ஒருங்கிணைந்த  பயணம் (Synodality), மற்றும் பாலம் கட்டும் பணிக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

" ஒருங்கிணைந்த பயண மனமாற்றமும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுபவர்களாகவும் இருக்கும் திருப்பணியும்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரவைக் கூட்டம், ஆசியா முழுவதிலுமிருந்து ஆயர்களை ஒன்றிணைத்து, வேகமாக மாறிவரும் சமூக, பண்பாட்டு மற்றும் சமயச் சூழலில் திருஅவையின் பணியைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது.

இந்தோனேசிய கத்தோலிக்க திருஅவைக்கு, இந்தக் கண்டமட்ட மாநாட்டை நடத்துவது தேசியப் பெருமை மட்டுமல்ல; உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில், சமய, இன, பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி நற்செய்தியை அறிவிக்கும் தங்களது அனுபவத்தை ஆசியத் திருஅவையுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.

"ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் (Universitas Indonesia) நிலையான வளர்ச்சிக்கான பட்டதாரி பள்ளியின் விரிவுரையாளரான டாக்டர் மரியா புஸ்பிதாசாரி கூறுகையில், இந்தோனேசிய திருஅவையானது ஆசியாவில் உள்ள பிற திருஅவைகளுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய தனித்துவமான மேய்ப்புப்பணி பலங்களை உருவாக்கியுள்ளது; அதே வேளையில், அது தொடர்ச்சியான புதுப்பித்தல் தேவைப்படும் சவால்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்."

டாக்டர் புஸ்பிதாசாரி, ஜகார்த்தா உயர் மறைமாவட்டத்தின் பொதுநிலை நம்பிக்கையாளர்கள் திருத்தூது பணிக்குழு மற்றும் சமூகத் தகவல் தொடர்பு ஆணையத்திலும் பணியாற்றியவர். பொதுநிலை நம்பிக்கையாளர்களின் பங்கேற்பு, அருள்பணித் தகவல் தொடர்பு மற்றும் நற்செய்திப் பணியில் அவர் சிறப்பாக ஈடுபட்டுள்ளார்.

அவரது கருத்துப்படி, ஆசியத் திருஅவைக்கு இந்தோனேசியா வழங்கும் மிகப் பெரிய பங்களிப்பு, பன்முகத்தன்மையைப் பிரிவினைக்கான காரணமாக அல்லாமல், சந்திப்பிற்கான வாய்ப்பாக ஏற்றுக்கொண்ட அனுபவமாகும்.

"உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்வது, கத்தோலிக்க திருஅவையை உரையாடலை வெறும் ஒரு தற்காலிக மேய்ப்புப்பணி செயல்பாடாகக் கருதாமல், ஒரு வாழ்வியல் நெறியாகவே வளர்த்தெடுக்க ஊக்குவித்துள்ளது. மத சுதந்திரம், பரஸ்பர மரியாதை மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை நிலைநிறுத்தும் இந்தோனேசியாவின் தேசியக் கொள்கையான 'பான்சாசிலா'வின் (Pancasila) ஆதரவோடு, கத்தோலிக்கர்கள் அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகப் பிற மதத்தினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்."

இந்த அனுபவம், மதங்கள், பண்பாடுகள் மற்றும் மக்களுடனான உரையாடலையே ஆசியத் திருஅவையின் அடையாளமாகக் கருதும் FABC-யின் பார்வையுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்று டாக்டர் புஸ்பிதாசாரி குறிப்பிடுகிறார்.

அவரது பார்வையில், உண்மையான மதங்களுக்கிடையேயான உரையாடல் என்பது இறையியல் விவாதங்களில் மட்டும் முடிவதில்லை. வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு, மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் பிற பொதுவான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பல்வேறு சமயத்தினர் இணைந்து செயல்படும் போது தான் அது உண்மையான அர்த்தத்தைப் பெறுகிறது. இத்தகைய சூழலில், உரையாடல் என்பது கூட்டுச் செயல் மற்றும் மிகவும் தேவைப்படுவோருடன் ஒற்றுமையாக நிற்பதன் மூலம் வெளிப்படுகிறது.

"திருஅவையின் எதிர்காலத்திற்கு 'ஒன்றிணைந்து பயணிக்கும் பண்பு' (Synodality) மிகவும் இன்றியமையாதது என்றும் அவர் கருதுகிறார். இந்தோனேசியா இந்த ஆன்மீக உணர்வை 1995-ஆம் ஆண்டு முதல் 'சிடாங் ஆகங் கரேஜா கத்தோலிக் இந்தோனேசியா' (SAGKI) என்ற அமைப்பின் மூலம் வளர்த்தெடுத்துள்ளது; இது மேய்ப்புப்பணி சார்ந்த விவேகமான தேடலுக்கும் திட்டமிடலுக்குமான ஒரு தேசிய மேடையை வழங்கியுள்ளது. இருப்பினும், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் ஆகியோரிடையே செவிமடுத்தல், பங்கெடுத்தல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் வழியாக, இந்த ஒன்றிணைந்து பயணிக்கும் பண்பானது பங்குகளின் மற்றும் மறைமாவட்டங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்."

பண்பாட்டு உள்வாங்கல் (Inculturation) துறையிலும் இந்தோனேசியா சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. உள்ளூர் மொழிகள், பாரம்பரிய இசை, பழங்குடியினக் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் திருப்பலி மற்றும் அருள்பணியில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகளாவிய திருஅவையின் போதனைகளுக்கு உண்மையாக இருந்தபடியே, உள்ளூர் பண்பாட்டிலும் நற்செய்தி வேரூன்ற முடியும் என்பதை இந்தோனேசிய திருஅவை எடுத்துக்காட்டியுள்ளது.

அதேபோல், கல்வி, நலவாழ்வு மற்றும் சமூகச் சேவைத் துறைகளிலும் திருஅவை வழங்கும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைச் சேவைகள் மதம், இனம் பாராமல் அனைத்து இந்தோனேசியர்களுக்கும் சேவை செய்து வருகின்றன. இவை கிறிஸ்தவ சாட்சியின் கண்கூடும் அடையாளங்களாக இருந்து, பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.

The Church of Our Lady of the Assumption - Cathedral of Jakarta, Indonesia.

அதேநேரத்தில், திருஅவை இன்னும் பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக டாக்டர் புஸ்பிதாசாரி சுட்டிக்காட்டுகிறார். குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்கள் குறைந்து வருவது, நகர்ப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கிடையே அருள்பணிக்கான வளங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை தொடர்ந்து படைப்பாற்றலுடனும் ஒத்துழைப்புடனும் அணுகப்பட வேண்டியவை என அவர் கூறுகிறார்.

டிஜிட்டல் ஊடகங்கள் நற்செய்திப் பணியை விரிவுபடுத்த உதவியுள்ள நிலையில், தவறான தகவல்கள், சமூகப் பிளவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் போன்ற சவால்களையும் அதிகரித்துள்ளன. சமூகத் தகவல் தொடர்புத் துறையில் தனது அனுபவத்தின் அடிப்படையில், டிஜிட்டல் கல்வியறிவு, நெறிமுறை சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் நம்பகமான கிறிஸ்தவச் சாட்சியை வலுப்படுத்துவது அவசியம். தொழில்நுட்பம் பிளவை ஏற்படுத்தும் கருவியாக அல்லாமல், உரையாடலுக்கான பாலமாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

ஆசியா முழுவதிலுமிருந்து ஆயர்கள் ஜகார்த்தாவில் கூடும் இந்த வேளையில், ஒத்திசைவுப் பயணம் மற்றும் திருப்பணி குறித்த ஆழமான கலந்துரையாடல்களுக்கு இந்தோனேசிய திருஅவையின் அனுபவம் பயனளிக்கும் என்று அந்நாட்டு திருஅவை நம்புகிறது. விருந்தோம்பலை வழங்குவதைத் தாண்டி, உரையாடல், சேவை, பண்பாட்டு திறந்த மனப்பான்மை மற்றும் பல்வேறு சமயத்தினருடனான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பாலங்களை அமைத்த வாழ்வியல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் அது விரும்புகிறது.

டாக்டர் மரியா புஸ்பிதாசாரியின் கருத்துப்படி, வரவிருக்கும் FABC முழுப் பேரவைக் கூட்டம், இறைமக்கள் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் திருஅவையாக ஆசியத் திருஅவையை புதுப்பித்துக் கொள்ளவும், பன்முகத்தன்மையும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இன்றைய உலகின் சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிக்கவும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். திருஅவையில் பெற்ற அனுபவம், கல்விசார் நிபுணத்துவம் மற்றும் பொதுநலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைவு, ஆசியா முழுவதும் பாலம் கட்டும் திருஅவையின் பணியை மேலும் வளப்படுத்தும் பொதுநிலைத் தலைமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார்.