FABC பேரவையின் மூன்றாம் நாள்: செபமும் தியானமும் நிறைந்த ஆன்மீகப் பயணம் | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆம் நிறைவிறுதிப் பேரவையின் மூன்றாம் நாள், அறிக்கைகள் மற்றும் கலந்துரையாடல்களை நிறைவு செய்து, செபம் மற்றும் ஆன்மீகச் சிந்தனைக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

"ஆசியாவில் ஒன்றிணைந்த மனமாற்றமும் பாலங்களைக் கட்டும் மறைப்பணியும்" என்ற கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்தப் பேரவையில், அடுத்தகட்ட விவாதங்களைத் தொடர்வதற்கு முன், செபம், தியானம் மற்றும் தெளிந்து தேர்தல் நேரத்தைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதே இந்த நாளின் நோக்கமாக இருந்தது.

ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவின் ஜெர்பெரா அரங்கில் இடம்பெற்ற இந்த ஆன்மீக நிகழ்வை, நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் துணைத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் வழிநடத்தினார்.

பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோவான் நற்செய்தி 1:43–51 என்ற இறைவார்த்தைப் பகுதியை மையமாகக் கொண்டு தியான உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், பங்கேற்பாளர்கள் தங்கள் பார்வையை திட்டங்கள், நிர்வாக அமைப்புகள் அல்லது மேய்ப்புப் பணித் திட்டங்களின் மீது அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது நிலைநிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஒன்றிணைந்த மனமாற்றமும் பாலங்களைக் கட்டும் திருஅவையின் அழைப்பும், முதலில் கிறிஸ்துவைத் தியானிப்பதன் வழியாகவே உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

யாக்கோபின் ஏணி பற்றிய நற்செய்தி உருவகத்தை விளக்கிய கர்தினால் தாக்லே அவர்கள், "இறைவனையும் மனிதகுலத்தையும், ஏன் முழுப் படைப்புலகையும் இணைத்து நிறுத்தும் பாலம் இயேசுவே" என்றார்.

இந்தப் பேரவையின் முக்கிய உருவகமாக "பாலம்" அமைந்துள்ளது. பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், நாடுகள் மற்றும் சமூகங்களுக்கிடையே உரையாடலையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதே திருஅவையின் பணி என்று பங்கேற்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கிறிஸ்துவை முதலில் சந்திக்கும் அனுபவம் பெற்றால்தான் உண்மையான பாலம் கட்டுபவர்களாக மாற முடியும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் நினைவூட்டினார்.

யோவான் நற்செய்தியின் முன்னுரையை மேற்கோள்காட்டிய அவர், உலகைப் படைத்த இறைவார்த்தை மனிதராகி உலகில் வாழ வந்தது குறித்து சிந்தித்தார்.

"படைப்பை உருவாக்கிய இறைவார்த்தை, அதே படைப்பிற்குள்ளே நுழைந்தது" என்று கூறிய அவர், மனிதகுலத்திலிருந்து தொலைவில் நிற்காமல், மனித வாழ்க்கைக்குள் இறங்கி வந்த இறைவனின் அன்பை இயேசுவின் மனித அவதாரம் வெளிப்படுத்துகிறது என்றார். "இறைவன் யார் என்பதை நமக்குக் காட்டும் வழி இயேசு; அதேபோல், முழுமையான மனிதராக எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுத்தருபவர் இயேசுவே" என்றும் அவர் கூறினார்.

மேய்ப்புப் பணியில் திருஅவைத் தலைவர்கள் தங்களை மக்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கருதும் மனப்பான்மைக்கு எதிராகவும் கர்தினால் தாக்லே அவர்கள் எச்சரிக்கை விடுத்தார். "இது மனித அவதாரமும் அல்ல; இது தன்னையே வெறுமையாக்கிக் கொண்ட கிறிஸ்துவின் (Kenosis) வழியும் அல்ல" என்று குறிப்பிட்ட அவர், பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் கிறிஸ்துவின் தன்னலமற்ற அன்பை நினைவுபடுத்தினார்.

முந்தைய நாட்களில் அறிக்கைகள் மற்றும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற நிலையில், மூன்றாம் நாள் அமைதியான செபம், தனிப்பட்ட தியானம் மற்றும் "ஆவியில் உரையாடல்" (Conversation in the Spirit) ஆகியவற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தில் முக்கியமான ஆன்மீகப் பயிற்சியாகக் கருதப்படுகிறது.

கர்தினால் தாக்லே அவர்கள், கருத்தியல் விளக்கங்களைக் காட்டிலும் பாலம், ஏணி, ஒன்றாக நடப்பது, திறந்த வானம் போன்ற விவிலிய உருவகங்களோடு செபிக்குமாறு பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். அவை இறைவனின் மறைபொருளை ஆழமாக உணர உதவும் என்றார்.

பல்வேறு கலாச்சாரங்கள், தொன்மையான சமய மரபுகள் மற்றும் சிக்கலான சமூகச் சூழல்களைக் கொண்ட ஆசியக் கண்டத்தில், பாலங்களைக் கட்டும் திருஅவையின் பணி, கிறிஸ்துவை புதிதாகச் சந்திக்கும் அனுபவத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் வலியுறுத்தினார்.

"பாலங்களைக் கட்டுவது எப்படி என்று திட்டமிடுவதற்கு முன், மீண்டும் இயேசுவை நோக்குவோம்; அவரைத் தொடுவோம்; அவரைக் காண்போம்; அவரை ஆழமாக அறிந்துகொள்வோம்; அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.

உரைக்குப் பின்னர், பங்கேற்பாளர்கள் நீண்ட நேர அமைதியான செபம் மற்றும் தனிப்பட்ட தியானத்தில் ஈடுபட்டனர். உண்மையான ஒன்றிணைந்த மனமாற்றம் என்பது திட்டங்களாலும் அமைப்புகளாலும் அல்ல, மாறாக தூய ஆவியின் குரலைக் கேட்டு, விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பாலமான கிறிஸ்துவுடன் உறவை ஆழப்படுத்துவதன் மூலம் தொடங்குகிறது என்பதை இந்த நாள் மீண்டும் வலியுறுத்தியது.

Tamil Survey Popup Image