இன்று வெளியாகிறது "முகமற்றவர்களின் முகம்" திரைப்படம்!| Veritas Tamil
இன்று வெளியாகிறது "முகமற்றவர்களின் முகம்" திரைப்படம் திரையரங்குகளில் சென்று பார்க்க ஆயர்கள் வேண்டுகோள்!
தமிழகமெங்கும்
சென்னை, நவ, 21: அருளாளர் இராணி மரியா
அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் 'முகமற்றவர்களின் முகம் (Face of the Faceless) என்கிற திரைப்படம் இன்று தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏழை மக்களுக்காக மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மாவட்டத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவர் அருள்சகோதரி இராணி மரியா, அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்து
அண்மையில் காணொளி வெளியிட்டுள்ள வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ், "நம்மில் பலரும் அறிந்தது போல முகமற்றவர்களின் முகம்' என்கின்ற ஒரு திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளியாகிறது. அருளாளர் இராணி மரியா அவருடைய வாழ்க்கையைச் சித்தரிக்கிற திரைப்படம் இது.
இதனை நாம் வெறும் திரைப்படமாக மட்டுமல்லாமல், இதை வாழ்வின் பாடமாகக் கருதவேண்டும். அவரது வாழ்வு, அவரது பணி, அக்காலச் சூழலுக்கு ஏற்ற ஒப்பற்ற அவரது இறைவாக்குப் பணி, சமூகப் பணி அனைத்தையும் உள்ளடக்கி, அதேவேளையில் கிறிஸ்துவிற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்கின்ற அந்த உன்னதமான பணியை நம் கண்முன் இத்திரைப்படம் வழங்குகின்றது"என்று கூறியுள்ளார். மேலும், இத்திரைப்படத்தைக் குடும்பமாகச் சென்று திரையரங்குகளில் பார்ப்பதும் ஒரு நற்செய்திப் பணிதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, இந்தத் திரைப்படம் குறித்து, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ் தம் இறைமக்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் "ஏழை மக்கள் விடுதலை பற்றியும், மனம் திருந்துதல் மற்றும் மன்னிப்பு பற்றியும் இது போல உணர்ச்சிகரமான திரைப்படம் இதுவரை வந்ததில்லை" என்று கூறி அனைவரும் இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்க்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரையிடப்படும் திரையரங்குகள் குறித்த விரிவான தகவலுக்கு "நம் வாழ்வு" வார இதழ் (18.11.2025), பக் 60-61-யைக் காண்க.