கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர்! | Veritas Tamil

கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர்; கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது ஆதரவை உறுதி அளித்தார்.

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு ஆயர் பேரவையின் (TNBC) ஆயர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஆயர்கள், கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விளக்கும் குறிப்பாணை ஒன்றை முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.

இந்தச் சந்திப்பில், சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயரும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவருமான டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், தர்மபுரி மறைமாவட்ட ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் நீத்திநாதன் அவர்கள், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஜீவானந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் டாக்டர் லூர்து ஆனந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அருட்பணி டாக்டர் ஏ. சேவியர் அருள்ராஜ், அருட்பணி அந்தோணிசாமி, அருட்சகோதரி டாக்டர் மரிய பிலோமி மற்றும் அருட்சகோதரி வைதேகி ஆகியோரும் பங்கேற்றனர்.

உங்கள் மனதையும் உள்ளத்தையும் முழுமையாக அர்ப்பணித்து இந்த ஆராதனை நேரத்தில் கலந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயத்தின் தற்போதைய அதிபரான அருட்பணி டாக்டர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இச்சந்திப்பை ஒருங்கிணைத்தார்கள். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம். நாசர், சட்டமன்ற உறுப்பினர் திரு. இனியகோ இருதயராஜ் மற்றும் தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தற்போதைய தலைவர் அருட்பணி ஜோ அருண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆயர்கள் சமர்ப்பித்த குறிப்பாணையில், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் தமிழர் நலனில் முதல்வர் காட்டி வரும் அர்ப்பணிப்புக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, பின்வரும் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:

- நீதிமன்ற தீர்ப்புகளின்படி, சிறுபான்மை-அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் ஒழுங்குவிதிகள் சட்டத்தின் பிரிவு 19 இல் இருந்து விலக்கு வழங்குதல்.

- சிறுபான்மை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், மடிக்கணினிகள் போன்ற கல்வி நலத் திட்டங்களை விரிவுபடுத்துதல்.

- நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளுக்கான அங்கீகாரம் மற்றும் பணியாளர் நிர்ணயம்.

- தலித் கிறிஸ்தவர்களுக்கான அரசியல் இடஒதுக்கீடு மற்றும் அதற்கான மாநில அரசின் ஆதரவை வலுப்படுத்துதல்.

- கிறிஸ்தவ வன்னியர்களை, இந்து வன்னியர்களுக்குச் சமமான உரிமைகளுடன் மிகப் பிற்பட்ட வகுப்புகள் (MBC) பட்டியலில் சேர்த்தல்.

ஆயர்கள், சிறுபான்மை நலனையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்துவதில் மாநில அரசு மேற்கொள்கிற முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இக்கோரிக்கைகளுக்கான விரைவான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக ,இதற்குப் பதிலளித்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரசின் முழுமையான ஆதரவைத் தெரிவித்து, மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.