தியாகமே வாழ்வு | Veritas Tamil
குடும்பம் என்பது அன்பும் ஒற்றுமையும் இணைந்து வாழும் ஒரு சிறிய திருக்கோயில் போன்றது. அந்தக் கோயிலின் அடித்தளமே தியாகம். தியாகம் இல்லாமல் எந்த உறவும் நீண்ட நாட்கள் நிலைக்காது. தியாகம் என்பது பொருளாதார ரீதியிலான தியாகம் மட்டுமல்ல, மனதளவிலும், உணர்வளவிலும் செய்யப்படும் தியாகமும் ஆகும்.
ஒரு குடும்பத்தின் அமைதி, அன்பு, மகிழ்ச்சி இவை அனைத்தும் அங்கிருக்கும் ஒவ்வொருவரின் தியாகத்தின்மீதே நிமிர்ந்து நிற்கின்றன. பெற்றோர் தங்களின் சுகத்தையும் ஓய்வையும் தியாகம் செய்து பிள்ளைகளுக்காக உழைப்பார்கள். பிள்ளைகள் பெற்றோரின் அன்புக்கு பதிலாக நன்றி செலுத்துவதும், அவர்களை மதிப்பதுமானது தியாகத்தின் ஒரு வடிவம்.
டொரின் என்ற மாணவி துறவற சபையொன்றில் சேர்ந்தபின், நவதுறவுப் பயிற்சியின் பொருட்டு பெங்களூரில் வாழ்வு தொடர்ந்தது. பயிற்சியின் முடிவில் பாதுகாப்பு நிதி என்ற பெயரில் சிறிது பணத்தைப் பெற்றோரிடமிருந்து வாங்கி, அவர்கள் பெயரிலேயே சபையில் வைத்துக்கொள்வது அப்போதைய வழக்கம். டொரின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், முழுத் தொகையையும் மொத்தமாகக் கொடுக்க முடியாமல், தவணை முறையில் பணம் அனுப்பிக்கொண்டிருந்தனர். இன்னும் ₹ 500 மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அந்தப் பணத்தை அனுப்பி வைக்குமாறு மிக உருக்கமாக பெற்றோருக்குக் கடிதம் எழுதினாள்.
தாய்க்குப் புற்றுநோய். சிகிச்சைக்குத் தேவையான அளவு பொருளாதார வசதி இல்லாத சூழலில் அரசு மருத்துவமனையில் சேர்ந்து இலவச சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். மீதிச் செலவுகளுக்காகத் தங்கள் வீட்டில் இருந்த ஒரே ஓர் ஆட்டுக்குட்டியை விற்பதற்காக டொரினின் தந்தை சென்றுகொண்டிருந்தபோது, தபால்காரர் கடிதத்தை அவர் கையில் கொடுத்தார். கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் மனையியிடம் ஓடினார். வாசித்தபின் இருவரும் விழிக்க, அமைதி சூழ்ந்தவ சிறிது நேரத்தில் தாய் தெளிவடைந்தார். தன் மகளின் வாழ்வு ஒளிபெற வேண்டும் என நினைத்துத் தன்னை மறந்து, "உடனே போய் நம் ஆட்டை நல்ல விலைக்கு விற்றுப் பணம் அனுப்புங்கள்" என்று கணவனை விரட்டினார், ஒரு தாயின் அங்கலாய்ப்பையும் தியாகத்தையும் புரிந்து " கொண்டவராக, ஆட்டை விற்றுப் பணம் அனுப்பினார்.
வார்த்தைப்பாடு கொடுப்பதற்காக எட்டு நாள்கள் தியானம் தொடங்கியது. 3ஆம் நாள் ஓய்வு நேரத்தில் டொரின் தன் துணிகளைத் துவைத்து உலர வைக்க மொட்டை மாடிக்குச் சென்றாள். தூண்களில் கட்டியிருந்த கம்பியை எட்டிப்பிடித்துத் தன் துணிகளை உலர்த்த முயன்றபோது நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். அவள் மூச்சு அடங்கிப் போனது. அவ்வில்லத்துச் சிற்றாலயத்தில் டொரினை கிடத்திவிட்டு வெளியே வந்த இல்லத்தலைவியின் கையில் மணி ஆர்டர் பணத்தைத் தபால்காரர் கொடுத்தார். அடக்கச் சடங்கிற்கு ஏற்பாடு நடந்தபோது அவளுடைய இடத்தில் டைரி ஒன்று காணப்பட்டது.
என் தாயின் தியாகம், எங்கள் குடும்பத்தின் தீபம்' என்று தலைப்பிட்டு, டைரியின் தொடக்கம் முதல் கடைசி வரை அவளுடைய தாயின் தியாகம் வர்ணிக்கப்பட்டிருந்தது. "நாங்கள் நன்றாயிருக்க தன்னையே வறுத்துக்கொண்டவர் என் தாய். அழித்துக்கொண்டவர் என் தாய். என் தாய் என்னும் மெழுகுவர்த்தியின் ஒளியில்தான் நான் வாழ்கிறேன். அவரின் தியாகம்தான் என்னை வாழவைக்கின்றது” என்று தியாகத்தின் தன்மைகளை விளக்கியிருந்தாள்.
அனைவரின் கண்களும் குளமாயின.
அன்றைய திருப்பலியின் முன்னுரையும் அதுவே.
ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்தின் வெளிப்பாடு பிரகாசமான சுடரொளி, ஒரு விதையின் தியாகத்தின் வெளிப்பாடு, மலர்களும் கனிகளும். சிப்பியில் விழுந்த நீர்த்துளியின் தியாகத்தின் வெளிப்பாடு. விலையுயர்ந்த முத்து.
தியாகம் உள்ள இடத்தில் சண்டை இல்லை, சுயநலம் இல்லை, மாறாக புரிதல், பொறுமை, அமைதி நிறைந்திருக்கும். தியாகம் என்பது ஒருவரை பலவீனமாக்குவதல்ல; மாறாக, அது உறவை வலுப்படுத்தி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
நம்முடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் சிறு தியாகம் செய்தால் — சிறு சிரிப்பை பகிர்ந்தாலும், மற்றவரின் உணர்வுகளை மதித்தாலும் — அந்த வீடு நிச்சயமாக ஒரு வானத்தின் முன்மாதிரி ஆகும்.