வாழ்க்கையை வளமாக்க… இயற்கையை பாதுகாப்போம்...| அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து அனைத்தையும் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறோம். நாம் மட்டுமல்லாது பிற்காலத்தில் நம் பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும் என சொத்து சேர்த்து வைத்து இருக்கிறோம். பூமித்தாய் தன்னையே சொத்தாக நமக்குத் தந்து விட்டாள். முன்னோர்களிடமிருந்து கடனாகப் பெற்ற இந்தப் பூமியை நாம் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சுனாமி வந்து,பூப்பந்தை புரட்டிப் போட்ட பின்பும் நமக்குப் ஞானமும் புத்தியும் வந்தது மாதிரி தெரியவில்லை. இயற்கையை வெல்லத் துடித்த நாம் அதனைக் கொல்லவும் துணிந்துவிட்டோம். நிலம் நன்றாக இருந்தால்தானே அது கொடுக்கும் பலன் நன்றாக இருக்கும்? விவசாயி சேற்றில் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்தால்தான் இந்த உலகம் விழிக்கும். பூமித்தாயின் புதல்வர்கள் என மார்தட்டுவதில் இல்லை வீரம்! தாயை கண் கலங்க விடாமல், கோபப்படுத்தாமல் இருப்பதில்தான் இருக்கிறது மாவீரம். எனவே பூமித்தாயை பேணிக்காப்போம்.
இயற்கை என்பது நாம் சுரண்ட வேண்டிய சொத்து அல்ல, நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். எனவே அதனைக் காக்க முயல்வோம். நமது சிறுமூளைக்கு எட்டுவதெல்லாம் நமது செயல்கள் பற்றிய பிரமிப்பு மட்டுமே. நமது பெருமூளை விரிவடைந்து நமது பார்வை விசாலமானால் மட்டுமே படைத்தல் பற்றியும், படைத்தவன் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புரிதல்கள் அனைத்திற்கும் மூலம் இறைவன். எப்போதும் இறைவனை மையமாக வைத்தே இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது, நம்மையும் இயங்க வைக்கிறது. நம்மை புதிதாய்ப் பிறக்க வைக்கிறது. இறையின்றி இயக்கம் இல்லை. அவரின்றி புதியதுமில்லை. அந்த பிரபஞ்சத்தை அழிவுக்குட்படுத்தாமல் பாதுகாக்க முயல்வோம். பூமியின் ஆயுள் பெருமளவு சுருங்கிவிட்டது. அடுத்து வரும் சந்ததிக்காய், ஆளுக்கொரு மரம் வளர்ப்போம். பூமியைக் குளிர்விப்போம்! அழுது கொண்டிருக்கும் இயற்கைத் தாயின் கண்களை மரமென்னும் கரம் வளர்த்துத் துடைப்போம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
