மாறாத் தழும்பு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

நம் எல்லோருடைய இதயத்திலும் பாவங்கள் குற்றங்கள், குறைகள், தவறுகள், வருத்தங்கள், உறுத்தல்கள், வன்முறை எண்ணங்கள் ஆகியவை துளைத்துச்சென்று, காயங்களாக மாறித் தழும்புகளை உருவாக்கியிருக்கின்றன.

இந்தக் காயங்களை எப்படி ஆற்றுவது?

இந்தத் தழும்புகளை எப்படி மாற்றுவது?


சிறுவன் ஒருவன் மிகவும் முன்கோபக்காரன். (எல்லா பாவங்களும், வன்முறைகளும், தீய எண்ணங்களும், இந்தக் கோபம் மற்றும் ஆணவத்திலிருந்துதான் தொடங்குகிறது.) கோபத்தில் தன் தனித்தன்மையை இழந்து, ஆத்திரமாக வார்த்தைகளை அள்ளி வீசி, மற்றவர்களின் மனதில் காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தன் மனதிலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் இழந்து அதன் தழும்புகளைச் சுமந்து வாழ்ந்தான். அவனுடைய நிலையறிந்த அவன் தந்தை, ஒரு பை நிறைய ஆணிகளைக்கொண்டு வந்து, "மகனே! நீ எப்போதெல்லாம் உன்னுடைய வலிமையை மறந்து, பொறுமையை இழந்து, நல்லெண்ணங்களை விட்டு விலகி, கோபமும், ஆத்திரமும் அடைகிறாயோ, அப்போதெல்லாம் இந்த ஆணியை ஒவ்வொன்றாக எடுத்து நம்முடைய இந்தச் சுற்றுச் சுவரில் அடி" என்று கொடுத்தார்.

முதல் நாள் அச்சிறுவன் ஏறக்குறைய 40 ஆணிகள் அடித்திருந்தான். நாள்கள் செல்லச் செல்ல அவனுடைய கோபமும், ஆத்திரமும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. 

ஒவ்வொரு நாளும் அவன் அடிக்கின்ற ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்தச் சுவரில் ஆணி அடிப்பதைவிட தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிது என்பதை தெரிந்துகொண்டான். அந்த நாளும் வந்தது. சிறுவன் முற்றிலுமாக மாறியிருந்தான். எந்நிலையிலும் தன்னை இழக்கவில்லை. இதைத் தன் தந்தையிடம் தெரிவித்தான். தந்தை மீண்டும் ஒரு வேலையை அவனுக்குக் கொடுத்தார். அதாவது நீ கோபத்தை மேற்கொண்டு உன் நிலை இழக்காமல் மன அமைதியை உணரும்போது, "நீ அடித்த அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடு" என்றார். அடிப்பதைக் காட்டிலும், பிடுங்கி எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் சிறுவன் கவனத்தோடு அதையும் செய்து முடித்தான். தந்தையிடம் தெரிவித்தான். சிறுவனின் தந்தை அவன் கைகளைப் பிடித்து சுவரின் அருகில் அழைத்துச் சென்றார். "மகனே! நீ உன் வேலைகளை நன்றாகச் செய்திருக்கிறாய், மாறியிருக்கிறாய். ஆனால், இந்தச் சுவரைப் பார். துளைகள் இருக்கின்றன. முன்பு இருந்தது போன்று இப்போது இல்லையே" என்றார். துளைகளை நிரப்பிப் பூசச் செய்தார். அதன் பள்ளங்கள் மறைந்து சுவர் பழைய நிலையை அடைந்தது.

நமது வாழ்விலும் இதே நிலைதான். நமது கோபம், ஆத்திரம், வன்முறை எண்ணங்கள், குற்றங்கள், குறைகள், பாவங்கள் அனைத்தும்... நாம் உதிர்க்கின்ற வார்த்தைகளும், செயல்பாடுகளும், பிறருடைய மனதைக் காயப்படுத்துகின்றன.

நம் மனதிலும் குற்ற உணர்வு என்ற வடுவை ஏற்படுத்தி அமைதி இழக்கச் செய்கின்றன. எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும், அல்லது மன்னிப்புக் கொடுத்தாலும், அதனால் ஏற்பட்ட காயங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அது மாறாத தழும்புகளாக இருந்து நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன. மாறாக, நம்முடைய அன்புச் செயல்களால், இரக்கச் செயல்களால், அதனை நிரப்பும்போது பழைய நிலையை நம் மனம் பெறும். நாமும் அமைதியோடு, மகிழ்ச்சியோடு வாழ்வைத் தொடரலாம். கொண்டவனையும், கொடுத்தவனையும் கெடுக்கும் கோபம், ஆத்திரம், வன்மம், ஆணவம் இவை தோல்வியடையும்போதெல்லாம் அன்பு வெற்றி பெறுகிறது.

பிறருடைய மனமும், நம்முடைய மனமும் காயங்களின்றி, தழும்புகளின்றி... தேவையான மாற்றம் செய்து மன அமைதி பெறுவோம்.

இதயத்தில் உருவாகியுள்ள ..

வன்மம் என்னும் தழும்பை 

அன்பால் நிரப்புவோம்.... 

கோபத்தை மன்னிப்பால். 

ஆணவத்தை தாழ்ச்சியால், 

தன்னலத்தை பிறர் நலத்தால்... என நிரப்பி 

பள்ளங்களற்ற, உயிராற்றல் மிக்க 

மனதை உருவாக்குவோம். 

வெட்டுவதற்குப் பதில் கட்டுவோம். 

வீழ்த்துவதற்குப் பதில் வாழ்த்துவோம்.

தாக்குதலுக்குப் பதில் ஆக்குவோம்.

உடைப்பதற்குப் பதில் உண்டாக்குவோம்.

நொறுக்குவதற்குப் பதில் உருவாக்குவோம். 

மனம் திரும்புவோம்.

நற்செயல்கள் செய்வோம்.

காயங்கள் மறையட்டும்.

மன அமைதி நிலவட்டும்.