நம்பிக்கையின் வெளிப்பாடு- சொல்லிலும், வாழ்விலும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

17 அக்டோபர் 2026
 
எபேசியர்  1: 15-23
லூக்கா 12: 8-12 
 

நம்பிக்கையின் வெளிப்பாடு- சொல்லிலும், வாழ்விலும்!


முதல் வாசகம்.

 
இன்றைய முதல் வாசகப் பகுதியில், பவுல் அடிகள்  எபேசு திருஅவையினரின் நம்பிக்கையையும் அன்பையும் குறித்து அறிந்தவராக,  அவர்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகக் கூறுகிறார். குறிப்பாக, எபேசிய இறைமக்களின்  ஞானத்தையும் பாராட்டி, அவர்கள் கடவுளை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறார்.

தொடர்ந்து, கடவுள் அவர்களுக்குக் கொடுத்துள்ள நம்பிக்கை வாழ்வைப்  பற்றியும், அவர் அளித்துள்ள  விடுதலை என்னவென்பதையும்  ஆய்ந்தறியவும் வேண்டும் என்று வலியுறுத்துவதோடு,  இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்த கடவுளின் வல்லமையானது,  அவரது சீடர்கள் மத்தியிலும் செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறார்.

 
நற்செய்தி.
  
 
நற்செய்தியில், லூக்கா  இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு நம்பிக்கையில் உறுதியாக இருக்கவும், மனிதர்களுக்கு முன்பாகத் தம்மை ஏற்றுக்கொள்ள வெட்கப்படாமல் இருக்கவும் போதித்ததைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்.

மனிதர்களுக்கு முன்பாக இயேசுவை ஏற்றுக்கொள்கிறவர்கள், வானதூதர் முன்பாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று இயேசு கூறுகிறார். அதே வேளையில், அச்சத்தினாலோ, மற்றவர்களின் அழுத்தத்தினாலோ இயேசுவை மறுதலிக்காமல் என்றும், எல்லாச் சூழலிலும் அவரில் நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியதை குறிப்பிடுகிறார். 


தொடந்து, மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்று இயேசு எச்சரிக்கிறார்.  இறைமக்கள்,  அதிகாரிகளுக்கு முன்பாக விசாரிக்கப்படும்போது என்ன பேசுவது என்று முன்கூட்டியே கவலைப்பட வேண்டாம் எ்ன்றும், அச்சமயத்தில் தூய ஆவியானவர் என்ன பேச வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார் என்பது பற்றியும் அறிவுறுத்துகிறார். 


சிந்தனைக்கு. 

‘மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை
மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.’

இயேசுவின் மேற்கண்ட அறிவுறுத்தல் நம்மை நாம் யார் என்று சிந்திக்கத் தூண்டுகிறது. இந்த வார்த்தைகளின் மூலம் இயேசு நமக்குக் கற்றுக்கொடுப்பதானது,  நாம் மனிதர்கள் முன்னிலையில் இயேசுவை நம்பிக்கையுடன்  ஏற்றுக்கொண்டு, அவருக்குச் சாட்சியாக வாழும்போது, இயேசுவும் தம்முடையவர்களாக நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதாகப் பொருள் கொள்ளலாம். 


இயேசு தமது இரண்டாம் வருகையிலும் இறுதித் தீர்ப்பிலும் தம்முடைய அதிகாரத்தை வெளிப்படுத்துவார் என்பதை இந்த வார்த்தைகள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன. நாம் இந்த உலகத்தில் இயேசுவை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம் என்பது இன்றியமையானது. அவரை ஏற்றுக்கொண்டு, அவருக்கான சீடர்களாக நம்மை உலகிற்கு வெளிப்படுத்துவதும்  இன்றியமாயாதது. சில நேரங்களில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயத்தினால் நம் நம்பிக்கையை வெளிப்படுத்தத் தயங்கலாம். ஆனால் இயேசு நம்மைத் துணிவுடன் அவருக்குச் சாட்சிகளாக இருக்க அழைக்கிறார். ஆம், உலகம் என்னை ஏற்றுக்கொள்கிறதா?” என்பதைவிட, “நான் இயேசுவுக்கு எல்லாச் சூழலிலும் உண்மையாக இருக்கிறேனா?” என்பதே அவருக்கான சாட்சிய வாழ்வு. 


முதல் வாசகத்தில் பவுல் அடிகள், இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்த கடவுளின் வல்லமையானது,  அவரது சீடர்கள் (நமது)  மத்தியிலும் செயல்படுகிறது’ எற்கிறார். ஆம், இயேசுவை உயிர்ப்பித்த கடவுளின் வல்லமை நம்மிலும் செயலாற்றுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாம் இயேசுவை நம்புவதோடு மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய அன்பையும் உண்மையையும் வெளிப்படுத்தும் சீடர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.


நிறைவாக, தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்று இயேசு எச்சரிக்கிறார். தூய ஆவியானவர் இறைகுடும்பத்தில் மூன்றாம் ஆள். இன்று நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துபவர். அவரை நாம் திருமுழுக்கில் பெற்றுள்ளோம். அவர் காட்டும் உண்மை என்பது நமக்கான தூய வாழ்வு. எனவே, அவரது படிப்பினைகளையும் வழிகாட்டுதலையும் புறக்கணிப்பது மன்னிக்கப்படாது என்கிறார் ஆண்டவர். 


இறைவேண்டல்.


அன்புள்ள இயேசுவே, உம்மீது உள்ள நம்பிக்கையில் வேரூன்றி  இருக்க எனக்கு உதவி செய்வீராக. அச்சம் மேலிடும் வேளையில்  தைரியத்தையும், பேச வேண்டிய நேரங்களில் தூய ஆவியானவரின் ஞானத்தையும் தாரும். எல்லாச் சூழ்நிலைகளிலும் உமக்கு உண்மையுள்ளவராக வாழ அருள் புரியும். ஆமென்.”

ஆர்.கே.சாமி,
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image