தங்கப்பனின் தங்கம்...| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
திருமணமான ஐந்து நண்பர்கள் புத்தாண்டைச் சிறப்பாகத் தொடங்குவதற்காக ஒரு ஞானியிடம் சென்றார்கள். ஞானி அவர்களை தியானம் செய்ய பாலை நிலத்தின் நடுவிலுள்ள ஒரு பூஞ்சோலைக்கு அழைத்துச் சென்றார். கடினமான தியானம், சைவ உணவு, சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மணல்மேடு. மரம், செடி எதுவும் கிடையாது. ஒரே வெப்பக்காற்று. தியானம் எப்பொழுது முடியும் என்று ஐவரும் ஆவலோடு காத்திருந்தனர்.
இறுதியில் ஏழுநாள் தியானம் முடிந்தது. ஐவரும் வீடுகளுக்குப் புறப்படத் தயாரானார்கள். பகல் நேரத்தில் பாலை நிலத்தில் பயணம் செய்ய முடியாது. கடும் வெயில். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் பயணத்தைத் தொடங்கினர். இரவு நேரம், எங்கும் இருள், நடுஇரவு, சோர்ந்து போன கால்களோடு நடக்கும்போது, ஞானி அவர்களைப் பார்த்து, "இப்போது நாம் நடக்கவிருக்கும் பாதை, கூழாங்கற்கள் நிறைந்தவை. உங்களின் கவனமாக நடந்து வாருங்கள். நீங்கள் கால்பாதங்கள் அடிபடாதபடி விரும்பினால் குனிந்து ஒருசில கூழாங்கற்களை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அவர்கள் களைப்புடன் இருந்ததால் யாரும் கற்களை எடுக்கவில்லை. ஒருவன் மட்டும் இரண்டு கூழாங்கற்களை எடுத்து தன் பைக்குள் போட்டுக் கொண்டான். அவன் பெயர் தங்கப்பன்.
இரவு முழுவதும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறுநாள் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் தங்கப்பன் தன் பையிலிருந்த இரண்டு கூழாங்கற்களையும் எடுத்துப் பார்த்தான். என்னே வியப்பு! கூழாங்கற்கள் தங்கக்கட்டிகளாக இருந்தன. ஆஹா! எத்தனை மகிழ்ச்சி தங்கப்பனுக்கு! ஆனால் மற்றவர்களுக்கோ மிகப் பெரிய ஏமாற்றம். ஞானி அவர்களைப் பார்த்து, "வாழ்க்கையில் வாய்ப்பு என்பது ஒருமுறை தான் வரும். அதைத் தவறவிடக் கூடாது" என்றார். தங்கப்பன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். தான் கொண்டு வந்த தங்கக்கட்டிகளை நகைகளாக மாற்றி, தவமிருந்து தான் பெற்ற மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தான்.
அதை ஆடம்பரமாகக் பிறந்த நாள் வந்தது. மகளுடைய கொண்டாட ஆசைப் பட்டார்கள் பெற்றோர்கள். விழாவிற்காக பெரிய மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது. அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டன. உற்றார்உறவினர், நண்பர்கள் அனைவரும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டம். தங்கப்பன், தன் மகளுக்கு பட்டாடை உடுத்தி, தங்க நகைகள் அணிவித்து விழா மேடையில் அமர வைத்தான்.அவனும், அவன் மனைவியும் வருகிற விருந்தினர்களை வரவேற்பதில் கவனமாக இருந்ததால் மகளைப் பற்றி மறந்துவிட்டார்கள். கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடும் நேரம் வந்தது. ஆனால் குழந்தையைக் காணவில்லை. யாரோ குழந்தையை நகைக்காகக் கடத்திச் சென்றுவிட்டனர். மண்டபம் முழுவதும் சோகக் காட்சிகள். விழாக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. கண்ணீரோடும், மனக்கவலையோடும், குழந்தையை இரவு முழுவதும் தேடி அலைந்தார்கள். குழந்தை கிடைக்கவில்லை.
மறுநாள் அதிகாலையில் குழந்தையின் பெற்றோர்கள் தங்களின் வேதனைக் கண்ணீரை மாதாவின் பாதத்தில் வைத்து செபிக்க ஆலயத்தை நோக்கிச் சென்றனர். அற்புதம்! ஆச்சரியம்! நகைகள் எல்லாம் அகற்றப்பட்ட நிலையில், ஆலயத்தின் வாயிற்படியில் அழுதுகொண்டே கிடந்தது குழந்தை, ஆனந்தக் கண்ணீரோடு வாரி அணைத்துக் கொண்டு மாதாவின் சுருபத்துக்குமுன் மண்டியிட்டனர்.
தங்க நகைகளை பெண்கள் அழகாகத் தோன்றுவதற்காகத் அணிகின்றனர். அது உடைமைக்கும், உயிருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது.
செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே; அதனால் உனது அறிவை இழந்துவிடாதே. ( நீமொ 23:4)
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
