அகத்தின் தூய்மையில் அகமகிழ்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
13 அக்டோபர் 2026
கலாத்தியர் 5: 1-6
லூக்கா 11: 37-41
அகத்தின் தூய்மையில் அகமகிழ்வோம்!
முதல் வாசகம்.
பவுல் அடிகள் தொடர்ந்து கலாத்தியருக்கு எழுதும்போது, இயேசு கிறிஸ்து நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துள்ளார் என்றும், இதன் நிமித்தம் மீண்டும் அடிமைத்தனத்திற்கு நம்மை உட்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.
அத்துடன். விருத்தசேதனம் போன்ற வெளிப்புறச் சடங்குகளைக் கடைப்பிடிப்பதால் மட்டும் மீட்படைய முடியாது என்றும், மாறாக, இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் நம்பிக்கையே இன்றியமையாதது என்றும் எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து, கடவுளுக்கு முன்பாக நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குவது நமது செயல்கள் அல்ல; அன்பினால் செயல்படும் நம்பிக்கை என்கிறார். ஆகவே, கிறிஸ்துவால் கிடைத்த விடுதலையைப் பாதுகாத்து, அன்புடன் செயல்படும் நம்பிக்கை வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் புனித லூக்கா, இயேசு ஒரு பரிசேயரின் வீட்டில் உணவருந்தச் சென்றார் என்றும், இயேசு உண்பதற்கு முன்பு கை கழுவாததைக் கண்டு அந்தப் பரிசேயர் வியப்புற்றார் என்றும் குறிப்பிடுகிறார்.
அந்த பரிசேயரின் வியப்பை உணர்ந்த இயேசு, மனிதர்கள் வெளிப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள்; ஆனால் அவர்களுடைய உள்ளம் பேராசையாலும் தீமையாலும் நிறைந்திருக்கிறது என்று விவரிக்கிறார. எனவே, ‘ அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா’ என்பதை நினைவூட்டி, வெளிப்புறச் சடங்குகளை மட்டும் கடைப்பிடிக்காமல், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, ஏழைகளுக்கு உதவி செய்து, நீதியுடனும் அன்புடனும் வாழ வேண்டும் என்று இயேசு போதித்ததை லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியை வாசிக்கும்போது, மோசேயின் திருச்சட்டத்தை அதாவது, உணவு உண்பதற்கு முன்பு கைகளைச் சடங்கு முறையின்படி கழுவாமல் இயேசு உணவருந்த அமர்ந்ததன் மூலம் அவர் திருச்சட்டத்தை மீறினார் என்பது இயேசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. உண்மையில் இந்த விதிமுறையானது திருச்சட்டத்தில் உள்ளதா? அல்லது இடையில் யூத மூப்பர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சார விதியா என்பது தெரியவிவல்லை. ஆனாலும், அந்த பரிசேயர் ஆச்சரியப்பட்ட விதம், அக்காலத்தில் மக்கள் மத்தியில் தூய்மைநிலை பற்றிய புரிதல் எந்த அளவிற்கு இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
அவர்களுடைய நம்பிக்கையானது, வெளிப்புறச் சடங்குகளையும் நடைமுறைகளையும் மையமாகக் கொண்டிருந்தது; ஆனால் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த சீர்கேட்டை அவர்கள் உணரவில்லை. நற்செய்தியில், கைகளைக் கழுவும் சடங்கைப் புறக்கணித்ததன் மூலம், உள்ளத்தின் தூய்மையைப் புறக்கணித்துவிட்டு வெளித்தோற்றத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருப்பவர்களின் மடமையை இயேசு வெளிப்படுத்தியதாக நாம் பொருள் கொள்ளலாம்.
மேலும், இன்றைய இரு வாசகங்களும் நமது கிறிஸ்தவ வாழ்விற்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துரைக்கின்றன. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது வெளிப்புறத்தில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றுவதை மட்டும் அல்ல; மாறாக, உள்ளத்தால் தூய்மையானவர்களாகவும், அன்பில் நிறைவானவர்களாகவும் வாழ்வதையே ஆகும்.
முதல் வாசகத்தில், புனித பவுல், கிறிஸ்து நமக்கு அளித்த விடுதலையில் உறுதியாக நிலைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறார். நமது மீட்பு என்பது வெளிப்புறச் சடங்குகளையோ, சட்டங்களைக் கடைப்பிடிப்பதையோ மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும், அந்த நம்பிக்கையிலிருந்து வெளிப்படும் அன்புமே முக்கியமானவை என்கிறார்.
நாம் எத்தனை முறை ஆலயத்திற்குச் செல்கிறோம், எவ்வாளவு பக்தியோடு இறைவேண்டல்களில் ஈடுபடுகிறோம் என்பதோடு நமது நம்பிக்கை முடிந்துவிடக் கூடாது. நமது வாழ்வில் பிறரிடம் அன்பு காட்டுகிறோமா, மன்னிக்கிறோமா, துன்பப்படுவோருக்கு உதவுகிறோமா என்பதில்தான் நமது நம்பிக்கையின் நற்சான்று வெளிப்படுகிறது எ்னகிறார் பவுல்.
நாமும் சில நேரங்களில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆலயத்தில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றினாலும், வீட்டில் அன்பு வார்த்தை மொழிவதில்லை, பிறர் மீது பொறாமை கொள்கிறோம், ஏழைகளின் துன்பத்தைப் புறக்கணித்தும் வாழ்கிறோம்.
தூய்மை என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இன்று, இயேசு நம்மிடம் கேட்கும் கேள்வி இதுதான்: “உங்கள் வெளித்தோற்றமான பளபளக்கும் ஆடை, காலணி, முகத்தோற்றம் மட்டும் தூய்மையாக இருக்கிறதா அல்லது , அல்லது இவற்றோடு, உங்கள் உள்ளமும் தூய்மையாக இருக்கிறதா?”
உள்ளத்தின் தூய்மை என்பது தீய எண்ணங்களைத் தவிர்ப்பதோடு முடிவதில்லை. நமது உள்ளத்தில் அன்பு, இரக்கம், மன்னிப்பு, பகிர்வு ஆகிய நற்பண்புகள் குவிந்திருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதைத் தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, நமது உள்ளம் உண்மையான தூய்மையை நோக்கிப் பயணிக்கிறது என்பதாகும்.
இங்கே, வெளிப்புறச் சடங்குகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. அவற்றின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தூய உள்ளத்தோடும் அன்பான செயல்களோடும் வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்பது நம்மில் பதிய வேண்டு்ம். கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு என்பார்கள். இது வெளித்தோற்றத்தின் தூய்மையை வலியுறுத்துகிறது. இயேசு இதற்கு மாறாக கருத்துரைக்கவில்லை. வெளிப்புறதில் பகட்டாக வாழ்ந்து அகத்தில் அழுக்கு நிறைந்திருப்பதால் பயனில்லை என்கிறார். உள்ளத் தூய்மைக்கு ஓர் உற்ற வழி இயேசு அருளிய ஒப்புரவு அருட்சாதனமாகும்.
திருவள்ளுவரும அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பற்றி கூறும்போது,
"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்." (குறள் 298) என்கிறார்.
ஆம், உடம்பைச் சுத்தம் செய்யத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனின் மனதைச் சுத்தமாக வைத்திருக்க உண்மை பேசுதல் அவ்வளவு முக்கியம். வெறும் உடலை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது, உள்ளத்தையும் உண்மையால் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
இறைவேண்டல்.
அன்பின் ஆண்டவரே, நான் வெளிப்புற பக்தியோடு மட்டும் நின்றுவிடாமல், தூய உள்ளத்தோடும் உண்மையான அன்போடும் வாழ எனக்கு அருள்தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
