இயேசுவே நமக்கான மிகப் பெரிய அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
12 அக்டோபர் 2026
கலாத்தியர் 4: 22-24, 26-27, 31- 5: 1
லூக்கா 11: 29-32
இயேசுவே நமக்கான மிகப் பெரிய அடையாளம்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், பவுல் ஆபிரகாமின் இரு மகன்களான ஈசாக்கையும் இஸ்மாலேயும் எடுத்துக்காட்டாகக் கொண்டு, அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குகிறார்.
ஆபிரகாமின் வேலைக்காரி (அடிமை) பெண்ணான ஆகாரின் மகன் மனித விருப்பத்தின்படி பிறந்தவன்; ஆனால் மனைவியான சாராவின் மகன் கடவுளின் வாக்குறுதியின்படி பிறந்தவன். ஆகார் அடிமைத்தனத்தையும், சாரா கடவுளின் வாக்குறுதியால் கிடைக்கும் சுதந்திரத்தையும் குறிக்கிறார்கள்.
இந்த இருவரையும் மையமாக வைத்து, பவுல் நாம் அடிமைத்தனத்திற்கு உரியவர்கள் அல்ல; மாறாக, கடவுளின் வாக்குறுதியால் வந்தவர்கள் எனகிறார். எனவே, கிறிஸ்து நமக்குச் விடுதலை அளித்திருக்கிறார். அந்தச் விடுதலையில் உறுதியாக நிலைத்திருந்து, மீண்டும் அடிமைத்தனத்தின் கட்டுகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று பவுல் அடிகள் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு மக்கள் அவரிடம் அடையாளம் கேட்பதைப் பற்றிப் பகிர்கிறார். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், யோனா நினிவே மக்களுக்கு ஓர் அடையாளமாக இருந்ததுபோல, மானிட மகனாகிய இயேசுவும் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கிறார் என்று யோனாவோடு ஒப்பிட்டு பேசுகிறார்.
தெற்கிலிருந்து வந்த அரசியான சேபாவின் அரசி (Queen of Sheba) சாலொமோனின் ஞானத்தைப்பற்றி கேள்விப்பட்டதை நேரில் அறிந்துணர்ந்ததைப்போல, கடவுளின் அழைப்பால் நினிவேவுக்கு சென்ற யோனாவின் போதனையால் நினிவே மக்களும் மனம் மாறினார்கள். ஆனாலும், இயேசுவின் போதனைகளைக் நேரில் கேட்டும் மக்கள் மனம் மாறாமல் இன்னும் அடையாளங்கள் கேட்டுக்கொண்டிருப்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
அங்கும் இங்குமாக இயேசுவைப் பற்றிய அடையாளங்களைத் தேடுவதைவிட, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மனம் மாறி, அன்புடனும் நற்செயல்களுடனும் வாழ வேண்டும் என்பது இன்றைய படிப்பினையாக உள்ளது. அற்புதங்களைக் காண்பதால் மட்டுமே கிறிஸ்துவில் உண்மை நம்பிக்கை உருவாகிவிடாது. மாறாக, இயேசுவில் நம்பிக்கை வைத்து, தம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வோர் அதன் பலனை அடைவர்.
யோனா அசிரியாவின், நினிவே நகர மக்களுக்கு மனமாற்றத்தின் செய்தியை அறிவித்தார். யோனாவின் வழி கடவுளின் எச்சரிக்கையைக் கேட்ட அந்த மக்கள் தங்கள் தீய வழிகளிலிருந்து மனம் திரும்பினர். அதேபோல், இயேசு இப்போது மக்களிடையே இறையாட்சியின் செய்தியை அறிவிக்கிறார். ஆனால் பலர் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவரைச் சந்தேகக் கண்கொடு பார்க்கிறார்கள். எனவே, அவரில் அடையாளங்களை எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களின் பின்னணியை அலசிப் பார்த்தால், இஸ்ரயேலர் கடவுளில் நம்பிக்கை இழந்த வேளைகளில், அடையாளம் கேட்பதுண்டு. பழைய ஏற்பாட்டில் இதை அறியலாம். குறிப்பாக விப 17:7-ல், அவர்கள் பாலைநில பயணத்தின்போது, மோசேயிடம் ‘ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா?’ என்று அடையாளம் கேட்டுச் சோதித்ததை நாம் அறிவோம். அவ்வாறே, எசாயா 7:14-லும் இறைவாக்கினர்களின் செய்தி சரியானதா என்று அறிந்துகொள்ள அரசர்கள் அடையாளம் கேட்டனர். அடையாளம் கேட்பது கடவுளைச் சோதிப்பதாகப் பொருள்கொள்ளலாம்.
இயேசுவிடம் அடையாளம் கேட்பவர்கள் அவர்மீதும், அவரது போதனைகள் மீதும் நம்பிக்கைகொள்ளத் தயக்கம் காட்டினர். அவர் உரைக்கும் செய்தியின் உண்மைத்தன்மையை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஒரு சாதாரண மனிதர் எப்படி கண்ணுக்குப் புலப்படாத விண்ணரசு பற்றி போதிக்க முடியும என்ற குழப்பதின் அடிப்படையில் வானிலிருந்து அடையாளம் கேட்கிறார்கள்.
இன்றும் நம்முடைய மனநிலையை ஆராய்தறிந்தால், சில நேரங்களில் நாம் இறைவனிடம் நிபந்தனையோடான விண்ணப்பங்கள் வைக்கிறோம். “ஆண்டவரே, என் வேண்டுதலை நிறைவேற்றினால் நான் உம்மை நம்புவேன்” என்போர் பலர். “என் பிரச்சினையைத் தீர்த்தால் நான் உமக்கு காணிக்கை செலுத்துவேன்” என்போரும் உண்டு. “என் குடும்பத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தால், உமது வல்லமையை ஏற்றுக்கொள்வேன்” என்றும், என் மகளுக்கு நான் விரும்பும் வகையில் மணமகன் கிடைத்தால் உமக்கு மடிபிச்சை எடுத்து காணிக்கை செலுதுத்கிறேன்” என்றும், என் கணவர் அல்லது மனைவி குணமானால் நான் வேளாங்கன்னிக்கு வருகிறேன், ஆள் உயரம் மெழுக்குதிரி ஏற்றுவேன்’ என்பன போன்ற விண்ணப்பங்களை முன்வைக்கிறோம்.
தாவீதின் மகனான சாலமோன் இஸ்ரயேலின் அரசராக இருக்கிறார். அவர் கடவுளிடம் ஞானத்தை வேண்டிப் பெற்றவர். சாலமோனின் ஞானம் பற்றிக் கேள்விப்பட்ட சேபா நாட்டு அரசி அவரைத் தேடி வருகிறார். அவருடைய ஞானம் கண்டு வியந்து பாராட்டி அன்பளிப்புகள் கொடுத்து மகிழ்ந்தார். அவ்வாறே, நாம் இயேசுவின் ஞானத்திலும் செயலிலும், வார்த்தையிலும் எள்ளவும் சந்தேகமற்ற நம்பிக்கை வைத்தல் இன்றியமையாதது.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவதைப்போல், நாம் அடிமைத்தனத்திற்கு உரியவர்கள் அல்ல; மாறாக, கடவுளின் வாக்குறுதியால் வந்தவர்கள் எனகிறார். அதிலும், கிறிஸ்து நமக்குச் விடுதலை அளித்திருக்கிறார். அந்தச் விடுதலையில் நம்பிக்கை வைத்து, அடையாளங்கள், வல்ல செயல்கள் அல்லது அற்புதங்கள் தேடி அலைந்து, மீண்டும் அடிமைத்தனத்தின் கட்டுகளுக்குள் சிக்கிக்கொள்வது மடமை.
ஏனெனில், நம் கடவுள் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றும் கருவி அல்ல; அவர், நம் வாழ்வை வழிநடத்தும் ஆண்டவர். நம்மோடு அவர் இருக்கிறார் என்பதை உணர, அவருடைய வார்த்தையை ஏற்று, அதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அடையாளங்களைத் தேடி அலைவது வீண்.
நிறைவாக, ‘அடையாளம் கேட்பவர் நம்புவதில்லை. நம்புகிறவருக்கு அடையாளம் தேவையில்லை’ என்ற அக்வினா நகர் புனித தோமா அவர்களின் பொன்மொழியை என்றும் நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
என் ஆண்டவராகிய இயேசுவே, யோனாவின் அடையாளத்தைப் போல, உமது வார்த்தைகள் என் இதயத்தை மாற்றும் அடையாளங்களாக அமையட்டும். என் தவறுகளை உணர்ந்து மனம் மாறவும், உமது அழைப்பிற்குச் செவிசாய்க்கவும் எனக்கு அருள் தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
