சாட்சிய வாழ்வு நமது ஒன்றிப்பின் வெளிப்பாடு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
10 அக்டோபர் 2026
கலாத்தியர் 3: 22-29
லூக்கா 11: 27-28
சாட்சிய வாழ்வு நமது ஒன்றிப்பின் வெளிப்பாடு!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள், இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாகவும், அவருடைய வாக்குறுதிகளுக்குப் பங்காளிகளாகவும் மாறுகிறோம் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.
திருமுழுக்குப் பெறுவதற்கு முன் அனைவரும் பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் கடவுளின் அருளையும் மீட்பையும் பெறுகிறார்கள் என்பதோடு, நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதற்கு முன் திருச்சட்டத்தின் (மோசேவின் சட்டத்திற்கு) ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம் என்கிறார் பவுல். திருமுழுக்கால், கிறிஸ்துவில் நாம் இறைமக்கள் ஆகும் வரை, திருச்சட்டமே நம்மை கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாக இருந்தது என்பதையும் தெளிவுப்படுத்துகிறரார்.
தொடர்ந்து, கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்த பிறகு, நாம் கடவுளின் பிள்ளைகளானோம் என்றும், திருமுழுக்கின் மூலம் கிறிஸ்துவுடன் இணைந்து, அவருடைய வாழ்வைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார்.
கிறிஸ்துவுக்குள் யூதர், கிரேக்கர், அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண் என்ற வேறுபாடுகள் இல்லை. நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் இறைமக்களாக ஒன்றாயிருக்கிறோம் எனும் பேருண்மையை இங்கே பதிவுச் செய்கிறார்.
நிறைவாக, நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களாக இருந்தால், ஆபிரகாமின் வழிமரபினரும் கடவுள் வாக்களித்த ஆசீர்வாதங்களுக்கு உரியவர்களாகவும் இருக்கிறோம் என்று முடிக்கிறார் பவுல்.
நற்செய்தி.
மிகச் சிறிய வாசகப் பகுதியாக உள்ள இன்றைய நற்செய்தியில், இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், “உம்மைத் தாங்கிப் பாலூட்டிய தாய் பேறுபெற்றவர்” என்றுரைக்கிறாள். அதற்கு இயேசு, “அப்படியானாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்று பதிலளித்ததை லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், ஒரு பெண் இயேசுவின் படிப்பினைகளையும் செயல்களையும் அறிந்தவரக, மனமுருகியும் உண்மையான உணர்வுடனும் கூறிய வார்த்தைகளான, “உம்மைத் தாங்கிப் பாலூட்டிய தாய் பேறுபெற்றவர்” என்பதற்கு இயேசு ஆச்சரியமளிக்கும் விதத்தில் பதிலளிக்கிறார். அந்தப் பெண்ணின் பாராட்டை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நன்றியுடன் பதிலளிப்பதற்கோ பதிலாக, இயேசு அனைவரின் கவனத்தையும் வேறொரு பக்கம் திருப்புகிறார். அவர் இயற்கையான நிலையிலிருந்து இறைநிலைக்கு, தாய்மையிலிருந்து ஆன்மீக சீடத்துவத்திற்கு கவனத்தைத் திருப்புகிறார்.
இயேசுவின் மறுமொழியைக் கூர்ந்து கவனித்தால், இயேசு, ‘உம்மைத் தாங்கிப் பாலூட்டிய தாய் பேறுபெற்றவர்” என்பதை மறுக்கவில்லை. மாறாக, அவரது தாய், கன்னி மரியாவின் உண்மையான பேறுபெற்ற நிலைக்கான ஆழமான காரணத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அன்னை மரியா இயேசுவைத் தம் கருவறையில் சுமந்ததாலோ அல்லது தம் மார்பில் பாலூட்டியதாலோ மட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை முழுமையான நம்பிக்கையுடன் கடைப்பிடித்ததாலுமே அவர் உண்மையிலேயே பேறுபெற்றவரானார் என்பதை இங்கே வெளிப்படுத்துகிறார்.
மேலும், இன்றைய வாசகங்கள் நம் கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான இரண்டு உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன என்று கூறலாம். முதலாவது, இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம். நம்மில் நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ வேறுபாடுகள் நிலவ இயலாது.
இரண்டாவது, கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வதே உண்மையான பேறுபெற்ற நிலையாகும் என்பதாகும். முதல் வாசகத்தில், புனித பவுல், நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்டையில் கடவுளின் பிள்ளைகளாக அல்லது இறைமக்களாக இருக்கிறோம் என்று கூறுகிறார். இதன் மூலம், நாம் மற்றவர்களைப் பாகுபாடின்றி அன்பு செய்யவும், அனைவரையும் சமமாக மதிக்கவும் அழைக்கப்படுகிறோம் என்ற படிப்பினையைத் திருஅவைக்குத் தருகிறர்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம் தாயாகிய அன்னை மரியாவின் சிறப்பைக் குறைத்துக் கூறவில்லை. மாறாக, அவர் உண்மையிலேயே பேறுபெற்றவராக இருப்பதற்கான ஆழமான காரணத்தை நமக்குக் காட்டுகிறார். அன்னை மரியா இயேசுவைத் தம் கருவறையில் சுமந்ததோடு மட்டுமல்லாமல், கடவுளின் வார்த்தையை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்தார். “உமது வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்” என்று கூறிய அவரது கீழ்ப்படிதல் நமக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
இக்காலத்தில் நாமும் தினமும் இறைவார்த்தையைக் கேட்கிறோம். திருப்பலியில் பங்கேற்கிறோம். இதற்கான வசதி நமக்கு உண்டு. ஆனால், பெரும்பாலோருக்குக் கேட்கும் இறைவார்த்தை ‘செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிடுகிறது. நாம், இறைவார்த்தையைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடுகிறோமா? அல்லது அதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமா? பிறரை மன்னிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, துன்பப்படுவோருக்கு ஆறுதல் அளிப்பது, பிறரைப் பாகுபாடின்றி மதிப்பது ஆகியவற்றின் வழியாக நாம் இறைவார்த்தையை வாழ்வாக்க முடியும். ஆனாலும், நம்மில் வேறுபாடுகளை வளர்த்துகொண்டு, பெயர் அளவில் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம். நமது அன்பியங்களில், அல்லது அடிப்படை திருஅவை சமூகங்களில், பங்குகளில் எந்தளவுக்கு நமது பாகுபாடு அற்ற, சீடத்துவ உணர்வோடும் ஈடுபாட்டோடும் செயல்படுகிறோமா? என்பதை நமக்கு நாமே சோதித்தரிய வேண்டும்.
இயேசுவின் படிப்பினைகள், செயல்பாடுகள் இவற்றின் அடிப்படையில், நற்செய்தியில் அன்னை மரியா ஒரு பெண்ணால் போற்றப்பட்டார். இன்று நம்மை முன்னிட்டு திருஅவை போற்றப்பட வேண்டுமாயின் நம்மில் பாகுபாடற்ற சகோதரத்துவமும் ஒன்றித்த செயல்பாடும் இன்றியமையாதது. நம்மில் உண்மையான ஒன்றுமையையும், ஒன்றிப்பும் நிலவாவிடில், திருஅவை உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் திகழ முடியாது.
இறைவேண்டல்.
அன்பு ஆண்டவரே, உமது வார்த்தையைக் கேட்கும் திறந்த இதயத்தையும், அதன்படி வாழும் உறுதியான நம்பிக்கையையும், அன்னை மரியாவைப் போல இறை திருவுளத்தை ஏற்று, அன்பிலும் ஒன்றிப்பிலும் நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
