நாம் விவேகிகள், வருமுன் காப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
6 நவம்பர் 2026
பிலிப்பியர் 3: 17- 4: 1
லூக்கா 16: 1-8
நாம் விவேகிகள், வருமுன் காப்போம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல், தன்னைப் போலவும், கிறிஸ்துவின் வழியில் உண்மையாக நடப்பவர்களைப் போலவும் வாழும்படி கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறார். ஏனெனில், பலர் கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாக வாழ்வாலும், அவர்கள் உலக ஆசைகளையும் இன்பங்களையும் மட்டுமே தேடி, அவர்களது வாழ்க்கையை அழிவை நோக்கி நடத்துவதாலும் மேற்கண்டவாறு அறிவுறுத்துகிறார். அவர் குறிப்பாக, அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே என்று சாடுகிறார்.
அவர் மேலும், கிறிஸ்தவர்களுக்கோ விண்ணகமே தாய்நாடு என்றும் அங்கிருந்து வரவிருக்கும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும், ஆதலால், உலகத்தின் ஆசைகளால் வழிதவறாமல், இயேசு கிறிஸ்துவில் கொண்ட யம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், அவர் தமது வல்லமையினால் நமது தாழ்மையான உடலைத் தமது மகிமையான உடலைப் போல மாற்றுவார் என்பதோடு, அனைவரும் ஆண்டவரில் உறுதியாக நிலைத்திருந்து, நம்பிக்கையோடு தொடர்ந்து வாழ அழைப்புவிடுக்கிறார். அவர் துணிவோடு, நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு, ஒரு செல்வந்தரின் சொத்துக்களை நிர்வகித்து வந்த பொறுப்பாளரைப் பற்றிய உவமையைக் கூறுகிறார். அந்தப் பொறுப்பாளர் தனது தலைவரின் (எஜமானரின்) சொத்துக்களை வீணடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், தலைவர் அவரிடம் கணக்குக் கேட்கிறார். தனது வேலையை இழக்கப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பொறுப்பாளர், தலைவரிடம் கடன்பட்டவர்களை அழைத்து அவர்களின் கடனைக் குறைத்து குறைத்து எழுதச் செய்கிறார். இதன் மூலம், எதிர்காலத்தில் தனக்கு உதவி கிடைக்கும்படி புத்திசாலித்தனமாகச் செயல்பட்டதை லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
அந்த தலைவரோ, நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால் அவரைப் பாராட்டியதோடு, ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள் என்று கூறினார்.
சிந்தனைக்கு.
இயேசுவின் இன்றைய உவமையைக் கேட்டதும் முதல் பார்வையில் நமக்குக் குழப்பமும் ஒருவிதமான அதிர்ச்சியும் ஏற்படலாம். ஒரு காலத்தில் நானும் இதே அதிர்ச்சிக்கு ஆளானேன் என்றால் மிகையாகாது.
ஏனெனில், இயேசு அந்த பணியாளரின் தில்லு முல்லு செயல்களைப் பாராட்டுவது போல் தோன்றுகிறது. இயேசுவின் சில உவமைகளைப் புரிந்துகொள்ள தூய ஆவியார் நல்கும் ஞானம் தேவை.
இந்த உவமை உலக வாழ்வில் எவ்வாறு தந்திரத்தால், சூழ்ச்சியால் வெற்றி பெறுவது என்பதைப் பற்றியது அல்ல; மாறாக, நமக்கான நிலவாழ்வை கருத்தில் கொண்டு எவ்வாறு ஞானத்துடனும் முன்மதியுடனும் வாழ வேண்டும் என்பதையே நமக்குக் கற்றுத்தருகிறது. முன்மதி என்பது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து, வரக்கூடிய சூழ்நிலைகளை முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ப ஞானத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவதாகும். நாம் நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக மட்டும் திட்டமிடாமல், நிலை வாழ்விற்காகவும் முன்மதியுடனும் விழிப்புடனும் தயாராக இருப்பதே இயேசுவின் உண்மையான சீடருக்குரிய பண்பு எனலாம்.
இயேசு, உலக மக்களோடு ஒளியின் மக்க்ளாகிய நமது செயலை ஒப்பிட்டு பேசுகிறார். இவ்வுலக மக்கள் தங்களுடைய செல்வம், வேலை, எதிர்காலம் போன்றவற்றைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மிகவும் முன்மதியுடனும் விவேகத்துடனும் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். தங்களுக்கு ஏதாவது ஆபத்து வரப்போகிறது என்றால், அதை முன்கூட்டியே உணர்ந்து அதிலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடுகிறார்கள்.
ஆனால், இயேசுவைப் பின்பற்றும் ஒளியின் மக்கள் என்று அழைக்கப்படும் நாம், இறையாட்சியையும் நித்திய வாழ்வையும் அடைவதற்காக அதே அளவு ஆர்வத்துடனும் முன்மதியுடனும் செயல்படுகிறோமா என்பதையே இயேசு நம்மிடம் கேட்கிறார். உலக மக்கள் தற்காலிகமான நன்மைகளுக்காக இவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்றால், விண்ணக வாழ்வை நோக்கிப் பயணிக்கும் நாம் அதைவிட அதிக அக்கறையுடன் முன்மதியுடனும் வாழ வேண்டும் என்பத இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இயேசு இந்த உலகத்தில் “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்” (மத் 10:16) என்று தம் சீடர்களை எச்சரித்து அனுப்பினார். அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவைப் பற்றியதாக இருந்துவிடக்கூடாது என்பதில் இயேசு அக்கறைக்கொண்டிருந்தார்.
நற்செய்தியில், அந்த பொறுப்பாளர் கடன்பட்டோரின் கடன்களைக் குறைக்க முயன்றதைப்போல், மற்றவர்கள் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய பாவக் கடனைக் குறைக்க அவர்களுக்கு நாமும் உதவ முன்வர வேண்டும். பாவம் என்பது கடவுளுக்கு முன்பாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு கடனாகும். இயேசு தமது பாடுகள் மற்றும் இறப்பின் மூலம் அந்தப் பாவக் கடனை முழுமையாகச் செலுத்திவிட்டார். இருப்பினும், நாம் கடவுளுக்கு முன்பாகத் தாழ்மையுடன் நம்மை ஒப்படைத்து, மனம் மாறும்போதுதான் அவரது தியாகத்தின் மீட்புப் பலன்களை நம்முடைய வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம். நமக்கு விண்ணகமே தாய்நாடு.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது இரக்கத்தையும் மன்னிப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் என் இதயத்தைத் திறக்கவும், விண்ணகமே எனது தாயகம் என்பதை ஏற்று, அதற்கான வெற்றிப் பாதையில் முன்மதியோடு வாழ எனக்கு அருள் தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
